- குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 30,000ஆக அதிகரிப்பு
- வாழ்க்கை செலவு கொடுப்பனவு ரூபா 25,000 ஆக உயரும்
2025 ஜனவரி முதல் அனைத்து அரச ஊழியர்களினதும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக, அரச சேவை சம்பள முரண்பாடுகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன தெரிவித்தார். அதற்கமைய தற்போது அரச ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான 24,000 ரூபாவை 30,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய குறைந்த தரங்களுக்கு 24% அடிப்படை சம்பள அதிகரிப்பு உயர் பதவிகளுக்கு 24% முதல் 50% வரையிலான அதிகரிப்பு மேற்கொள்ளவுள்ளதாக அவர் இங்கு குறிப்பிட்டார்.
குறித்த அதிகரிப்புக்கு திறைசேரியின் இணக்கத்துடன் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்த அவர், தகுதிகள், அனுபவம் மற்றும் தற்போது வகிக்கும் பதவியின் அடிப்படையில் இந்த சம்பள அதிகரிப்பு அமையும் எனவும் இங்கு சுட்டிக்காட்டினார்.
அது மாத்திரமன்றி வாழ்க்கை செலவு கொடுப்பனவை 25,000 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக உதய செனவிரத்ன இங்கு குறிப்பிட்டார்.
தற்போதைய பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு ஜனவரி 2025 முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ரூ. 25,000 வாழ்க்கை செலவு கொடுப்பனவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் இங்கு குறிப்பிட்டார். அந்த வகையில் வாழ்க்கை செலவு கொடுப்பனவு அதிகரிப்புடன் அரச ஊழியர் ஒருவர் ரூ. 55,000 சம்பளத்தை பெறுவார் என அவர் இங்கு குறிப்பிட்டார்.
ஜனவரி 2025 முதல் 03 வருடங்களுக்கு இந்த ரூ. 25,000 வாழ்க்கை செலவு கொடுப்பனவு மாற்றமின்றி பேணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஓய்வூதியர்களுக்கு 2025 ஜனவரி முதல் வாழ்க்கை செலவு கொடுப்பனவாக தலா ரூ.12,500 வழங்கப்படவுள்ளது. அத்துடன் 2020ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு இதுவரை செலுத்தப்படாத சம்பள உயர்வை வழங்கி, அவர்களது ஓய்வூதியத்தில் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிதி சாத்தியத்தின் அடிப்படையில் 2025 வரவு, செலவுத் திட்டத்தின் மூலம் படிப்படியாக பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தேர்தலை அடிப்படையாகக் கொண்டதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும், கடந்த காலங்களில் அரச ஊழியர்கள் வீதிகளில் இறங்கி முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு சம்பள முரண்பாடுகளை களையவே இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
றிஸ்வான் சேகு முகைதீன்