நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் இடம்பெறுகின்ற தவறுகள் தொடர்பாக நீண்ட காலமாக தகவல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சில வைத்தியசாலைகள் பலவற்றில் மாத்திரமன்றி, நாட்டின் ஏனைய பிரதேச வைத்தியசாலைகள் சிலவற்றிலும் நோயாளர்களுக்கான சிகிச்சைகளில் தவறுகள், உதாசீனங்கள் இடம்பெறுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.
அவ்வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற மருத்துவர் சிலரின் அக்கறையீனம் காரணமாக நோயாளர்கள் பலர் உயிரிழந்திருப்பதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்திகளைப் பார்த்துள்ளோம். இவ்வாறான உயிரிழப்புகள் தொடர்பாக உறவினர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான உண்மைத்தன்மையை பக்கச்சார்பற்ற விசாரணைகள் மூலமே நாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். உரிய விசாரணைகளின் முடிவுகள் வெளிவரும் வரை இத்தவறுகள் குறித்து எழுந்தமான முறையில் எவரும் கருத்துகளை வெளியிடுவது முறையல்ல.
ஆனாலும் அரசாங்க வைத்தியசாலைகள் சிலவற்றில் பணியாற்றுவோரின் உதாசீனம் காரணமாக நோயாளர்கள் சிலர் உயிரிழந்துள்ளதாகவும், அவ்வாறான வைத்தியசாலைகளில் நோயாளர்கள் சரியானபடி மருத்துவப் பராமரிப்புக்கு உட்படுத்தப்படுவதில்லையெனவும் பொதுமக்கள் சார்பாக ஊடகங்களில் அடிக்கடி வெளிவருகின்ற தகவல்கள் தொடர்பாக பாராமுகமாக இருந்து விடவும் முடியாது.
பொதுமக்கள் தரப்பிலிருந்து வெளிவருகின்ற இத்தகவல்கள் குறித்து உரிய ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிடுவது ஊடகங்களின் கடமையாகின்றது. அதுமாத்திரமன்றி, அவ்வாறான புகார்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தவறுகள் இருப்பின், அவற்றைக் களைய வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளுக்கு உள்ளதென்பதையும் மறுப்பதற்கில்லை.
கடமையில் நெறி தவறாத மருத்துவப் பணியாளர்களைப் பாராட்டுவதும், கடமை தவறும் மருத்துவப் பணியாளர்களின் தவறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதும் ஊடகங்களின் கடமையாகும். தவறிழைக்கும் அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டிய பொறுப்பு மேலதிகாரிகளுக்கே உள்ளது. அதேசமயம் மருத்துவப் பணியாளர்கள் ஒருசிலரின் உதாசீனம் காரணமாக ஒட்டுமொத்த மருத்துவத்துறைக்கும் களங்கம் நேர்ந்துவிட இடமளிக்கவும் கூடாது.
மருத்துவ வசதிகளைப் பொறுத்தவரை உலகின் ஏனைய நாடுகளிலுள்ள மக்களைப் பார்க்கிலும், இலங்கை மக்கள் அதிர்ஷ்டசாலிகளென்றே கூற வேண்டும். இலவச மருத்துவத்தை சிறப்பாக வழங்குகின்ற நாடு இலங்கை ஆகும். மருத்துவப் பணியாளர்களின் வேதனம், அவர்களுக்கான சலுகைகள், நோயாளர்களின் மருத்துவத்துக்கான அனைத்து வசதிகள் போன்ற பல்வேறு விடயங்களுக்காக இலங்கை அரசாங்கம் பெருந்தொகை நிதியைச் செலவிடுகின்றது. மேற்கு நாடுகளில் கூட இவ்வாறான துரித சிறப்பு இலவச மருத்துவ வசதிகள் கிடையாது.
இலவச மருத்துவத்துக்காக இத்தனை முழுமையான வசதிகள் இருக்கையில், அரசாங்க வைத்தியசாலைகள் சிலவற்றில் அசமந்தம் நிலவுவதாக மக்கள் கூறுகின்ற புகார்களை அலட்சியப்படுத்தல் ஆகாது. அப்புகார்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற முறையில் உரிய விசாரணை நடத்தி, தவறுகளைக் களைவதே இலவச மருத்துவத்தின் மதிப்பை மேலும் உயர்த்தும் என்பதே உண்மை.