உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நகர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது ரஷ்யாவுக்குள் ஊடுருவி தாக்குதலை மேற்கொள்ளும் உக்ரைன் அதிக ஆதரவையும் வெற்றிகளையும் தனதாக்கியுள்ளதாக வெளிப்படுத்த முயற்சிக்கிறது. இதனை மேற்கு ஊடகங்களும் முதன்மைப்படுத்தி வருகின்றன. ஆனால் போரில் எப்போதும் திறன்களையும், ஆயுத பலத்தையும் கடந்து தந்திரங்களும், நுட்பங்களும் போரின் முடிவுகளைத் தரக்கூடியன. இது ஒர் அரசியல் நோக்கத்தை அல்லது அரசியல் இராணுவப் பரிமாணத்தை தேடிகொடுக்கக் கூடியதாக அமைந்துவிடுவதுண்டு. ரஷ்யாவுக்கு அத்தகைய வரலாற்று ரீதியான அனுபவங்கள் உண்டு. ஆனால் தற்போது ரஷ்யா எதிர்கொள்ளுகின்ற பிரதான எதிரியான உக்ரைன், ரஷ்யாவின் அயல்நாடு என்பதும் சகோதரத்துவ தேசம் என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது. இந்தச் சூழலுக்குள் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, 23.08.2024 அன்று போலந்திலிருந்து ரயில் பயணம் மூலம் உக்ரையின் தலைநகரான கீவ்வை சென்றடைந்துள்ளார். இரு தலைவர்களும் சந்தித்ததன் அரசியல் விளைவுகளைத் தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகவுள்ளது.
இவ் விஜயமானது, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உக்ரைனுக்கு இந்தியத் தலைவர் சென்றிருக்கும் முதல் விஜயமாக பார்க்கப்படுகிறது. ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்கு முடிவை எட்டும் பயணமாக இது அமையக்கூடும் என்ற அரசியல் விமர்சனங்களும் இது சார்ந்து காணப்படுகின்றன. உக்ரைன் சுதந்திரதினத்தை முன்னிட்டு சந்திப்பை நடத்தும் நரேந்திரமோடி அணியானது போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் தன்மயாலால் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் கடந்த மாதம் ரஷ்யாவுக்கும் விஜயம் செய்திருந்தார். அப்போது எழுந்த விமர்சனங்களும், உரையாடப்பட்ட அம்சங்களும் அதே பாணியில் உக்ரைன் ஜனாதிபதியோடும் நரேந்திரமோடியால் பகிரப்பட்டுள்ளது. போரினால் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்றும் சமாதானத்தின் ஊடாகவோ அல்லது பேச்சுவார்த்தையின் மூலமாகவோ மட்டுமே இப்பிரச்சனைக்குத் தீர்வுகாணமுடியும் என்றும் கடந்தமாதம் தெரிவித்த அதேவிடயங்களை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் தெரிவித்துள்ளார். அதனால் அவரது விஜயம் இரு நாடுகளுக்குமிடையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உத்திகளைக் கொண்டிருக்கின்றது என சர்வதேச விமர்சனங்கள் மேலெழுந்திருக்கின்றன. இதேசமயம் உக்ரைன் மீது ஐக்கிய நாடுகள் சபை குற்றச்சாட்டுகளை போர் நிமிர்த்தமும், போர்க்கைதிகள் பராமரிக்கப்படுவது நிமிர்த்தமும் முன்வைத்துள்ளது. எனவே இத்தகைய சூழல் உக்ரைன் ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்குமிடையே முக்கியமான சந்திப்பாக அமையக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளமையை ஆழமாகத் தேடுதல் அவசியமானது.
முதலாவது, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் விஜயம் போலந்துக்கு பின்னர் உக்ரைனினை நோக்கி நகர்ந்திருப்பது முக்கியத்துவம் கொண்டது. உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்தபோது இந்தியப் பிரதமருடைய வெளிப்பாடும் அதிக பேசுபொருளாக மாறியுள்ளது. காரணம் ரஷ்ய ஜனாதிபதி புட்டினை சந்தித்தபோது அவர் வெளிப்படுத்திய அதேமாதிரியான உணர்வுகள் சார்ந்த, நேசிப்புச் சார்ந்த வெளிப்பாடொன்றை உக்ரைன் ஜனாதிபதியோடு வைத்துக்கொள்ளவில்லை என்பது கவனத்திற்குரிய விடயமாகும். இது இந்தியாவுக்கு ரஷ்யாவுடனான நட்பையும், அதன் முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் கருத்தில் கொண்டதாகவே தெரிகின்றது. இதனை சர்வதேச ஊடகங்களும் கோடிட்டுக் காட்டியுள்ளன.
இரண்டாவது, இந்தியப் பிரதமர் உக்ரேனுக்கான தனது பயணத்தை முதன்மைப்படுத்துகின்போது குறிப்பாக ரஷ்யாவுக்கும் உக்ரையினுக்குமான போரை சமாதானபூர்வமான அணுகுமுறையூடாக நிறைவுசெய்யவேண்டும் என்பதில் கவனம் கொண்டிருந்தார். அதற்கான வெளிப்பாடுகளை போலந்தில் வைத்தே தெரிவித்திருந்தார். அவரது விஜயத்தின் பிரதான நோக்கம் பிராந்திய அடிப்படையில் இரு நாடுகளுக்குமிடையில் நிகழ்கின்ற போரை முடிவுக்கு கொண்டுவருகின்ற முயற்சியின் வெளிப்பாடாக அமைந்திருப்பதைக் இதனூடாக கண்டுகொள்ளமுடியும். இந்தியப் பிரதமர் தெளிவாக சமாதானத்துக்கான வாய்ப்புகளை உக்ரைன் ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி புடினோடு உரையாடியபோது தெரிவித்த அதே கருத்துக்களை மீளவும் உக்ரைன் ஜனாதிபதியின் முன்னிலையில் வெளிப்படுத்தியிருப்பது இரு தலைவர்களுக்குமிடையிலான முரண்பாட்டைத் தீர்த்துக்கொள்கின்ற விதத்தில் நகர்வதாகவே தெரிகிறது.
மூன்றாவது, இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய – ரஷ்ய உறவு வலுவான ஒன்று என்பதை போர் தொடங்கிய காலத்திலிருந்து வெளிப்படுத்தியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மூன்றாவது தடவையாக ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில் அத்தகைய உறவை மேலும் பலப்படுத்துகின்ற உத்திகளில் அதிகம் ஈடுபாடு காட்டியிருந்தார். தற்போதுகூட ரஷ்ய விஜயத்துக்குப் பின்னரே உக்ரைனுக்கு அவரது விஜயம் அமைந்திருந்தது. ஏறக்குறைய ரஷ்ய ஜனாதிபதி புடினது கருத்துக்களை அல்லது எண்ணங்களை பிரதிபலிக்கும் விதத்தில் உக்ரைனுக்கான விஜயத்தை நரேந்திரமோடி திட்டமிட்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளுதல் வேண்டும். இதன் உள்ளார்ந்த அர்த்தமாக இராஜதந்திர செய்முறையென்பது அதன் நடத்தையிலும், வெளிப்படுத்துகின்ற தகவல்களிலும் அதற்காக கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் அளவீடு செய்யப்படவேண்டும். அத்தகைய அளவீட்டுக்குள் இந்தியா ரஷ்யாவுக்கிடையிலான நெருக்கமான உறவை மேலுமொரு தடவை உலகத்துக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மேற்கு நாடுகள் உத்திகளை வகுத்து இந்தியாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் ரஷ்யாவோடு இந்தியா தனது நெருக்கத்தைக் காட்டுவதென்பது தவிர்க்கமுடியாத புவிசார் அரசியல் நியதியைக் கொண்டது என்பதை இந்தியப் பிரதமரது உக்ரைன் விஜயம் உணர்த்துகின்றது.
நான்காவது, இந்தியப் பிரதமரது உக்ரைன் விஜயம், உக்ரேனுக்கான அல்லது மேற்குலகத்திற்கான அணுகுமுறையாக அல்லது அதன் பிரதிபலிப்பாக எழுந்த ஒன்று எனக் குறிப்பிடுவதைவிட ரஷ்யாவின் இலக்குகளை, நோக்கங்களை வெளிப்படுத்துகின்ற நோக்கோடு நரேந்திரமோடியின் விஜயம் அமைந்துள்ளது என்பதே சிறந்தது. இதனை புரிந்துகொள்வதற்கு அதனுடைய முக்கியத்துவம் சார்ந்தும், உரையாடப்பட்ட விதம் சார்ந்தும் நரேந்திரமோடி ஜெலன்ஸ்கியை சந்தித்தபோது வெளிப்படுத்தப்பட்ட உடல்மொழி சார்ந்தும் பொருள்கொள்தல் சரியானது.
நரேந்திரமோடிக்கும் புடினுக்கும் இடையிலான சந்திப்பின் உடல்மொழியையும், உக்ரைன் ஜனாதிபதியுடனான சந்திப்பின் உடல் மொழியையும் கவனத்தில் கொள்வது மிக முக்கியமானது. இத்தகைய இராஜதந்திர செய்முறை ஒரு வலுவான பிராந்தியச் சூழலையும், கீழைத்தேச அரசியல் சூழலையும் வெளிப்படுத்தியிருக்கிறது. கீழைத்தேச நாடுகள் அல்லது கீழைத்தேச ஏகாதிபத்தியங்கள் தமக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதில் கவனம் கொள்ளுகின்றனர் என்பதே இதன் வெளிப்பாடாகத் தெரிகிறது.
எனவே நரேந்திரமோடியின் உக்ரைன் பயணம் அரசியல், இராணுவ ரீதியான முக்கியத்துவத்தைக் கொண்டது. உக்ரைனுடைய ஊடுருவல் தாக்குதல் ரஷ்யாவுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றபோது இந்த விஜயத்தினுடைய முக்கியத்துவம் அதிகமான அரசியல் வெளிப்பாடுகளையும், இராஜதந்திர உத்திகளையும், இராணுவ ஒழுங்குமுறையில் நிலவக்கூடிய மாற்றங்களையும் தெரிவிப்பதாகவே அமைந்திருக்கின்றன.