இலங்கையில் நாடு கடந்த கல்வியின் (TNE) தற்போதைய நிலை மற்றும் எதிர்கால சாத்தியங்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கும் ஒரு முக்கிய அறிக்கையை பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்டது.
இது மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
BMICH இல் நடந்த நிகழ்வில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதுடன் மற்றும் இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பேட்ரிக், கல்வி அமைச்சின் அதிகாரிகள், கல்விக் கொள்கை வகுப்பாளர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், அரச மற்றும் அரச சார்பற்ற பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் அவுஸ்திரேலிய கல்விப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இங்கு பேசுகையில்: “இலங்கையின் கல்வியறிவு வீதம் மற்றும் அடிப்படைக் கல்வியில் ஈர்க்கக்கூடிய முன்னேற்றங்கள் இருந்த போதிலும், உயர் கல்வி திறனில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. 171,532 தகுதியுள்ள மாணவர்களில் 44,000 பேர் மட்டுமே 2022 இல் அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றிருந்தனர். தனியார் உயர்கல்வி மற்றும் நாடு கடந்த கல்விக்கான வளர்ந்து வரும் தேவை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. “இலங்கையின் உயர்கல்வித் துறையில் நாடு கடந்த கல்வியானது எவ்வாறு இடைவெளியைக் குறைக்க முடியும் என்பதை இந்த அறிக்கை தெள்ளத்தெளிவாக உணர்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.”