வறுமைநாடுகளின் பட்டியலில் இருந்த வங்கதேசம் தன்னுடைய முயற்சியால் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. 1972இல் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசமாக உருவெடுத்த அந்த தேசம் நிலவளமும் நீர்வளமும் மீன்வளமும் கொண்டது. ஜமுனா – பத்மா – பிரம்மபுத்தரா போன்ற பேராறுகள் அங்கே பாய்கின்றன. அடிக்கடி இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் இந்த வங்கதேசத்தின் பிரதான தொழில் விவசாயமாகும். நெல்லரிசி அதிமுக்கிய உணவுப்பயிராக இருந்து வருகிறது. உலக அளவில் சணல் ஏற்றுமதியில் முன்னணி நாடாக இருக்கிறது. அங்கே பருத்தி, கோதுமை, தேயிலை, தானியம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. சணல், தேயிலையோடு அதிக ஆடைஉற்பத்தியும் கூட அந்நிய செலாவணி தரும் ஆதாரபொருளாதார வளமாக உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காடுகளால் உருவான சிறு சிறு மலைத்தொடர் கொண்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் மூங்கில்கள் காகித உற்பத்திக்குக் கால்கோளாகவும் இருந்து வருகின்றது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் 40 சதவிகித மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். நகரமயமாக்கல் இருந்தாலும் கூட இன்னும் 85 சதவிகித மக்கள் கிராமங்களில்தான் வாழ்கின்றனர். ஆனால் அங்கு அரசியல் ஸ்திரமற்ற நிலை இப்போது காணப்படுகின்றது. அந்த நாடு தற்காலிகமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான சூழலில் டாக்கா நகரிலிருந்து பிரதமர் ஷேக் ஹஸீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தன் சகோதரியுடன் இராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் டில்லி ஹிண்டன் இராணுவத் தளத்தில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்திருப்பதாக அறிய முடிகிறது. அவரது மாற்று உடையைக் கூட எடுத்துவர அவகாசம் கொடுக்காமல் அந்நாட்டு இராணுவம் அவரை அவசரமாக அனுப்பியுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.
வங்கதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு அரசவேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடங்கிய மாணவர் போராட்டம் அது அரசாங்கத்துக்கெதிரான மக்கள் போராட்டமாக மாறியது. இது கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து வன்முறையாக மாறியது. இதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு, கடைசியில் படையினரிடமிருந்து கைமீறிச் சென்றது. வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹஸீனா தலைமையிலான அவாமிலீக் அரசு ஆட்சி செய்து வந்தது. அங்கு ஏற்பட்டுள்ள வன்முறையால் அங்கே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டும் அவசரகாலச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டும் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. இப்போது அந்த நாட்டில் பாதுகாப்பற்ற ஒரு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், போராட்டக்காரர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என 300க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அரச அலுவலகங்கள், அரசியல்வாதிகளின் வீடுகள், பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டடங்கள், அரசாங்க பொதுச்சொத்துக்கள் என்பன எரிக்கப்பட்டன. பிரதமர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. பலகோடி டொலர் பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒரு மாநிலமான திருப்பூரில் 90 சதவிகிதத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் வாழ்கிறார்கள். இந்த மாநிலம் பங்களாதேசின் மிக நெருங்கிய எல்லையில் இருக்கிறது. அந்த மாநில மக்கள் இந்தியாவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டுத் தனி மாநில ஆட்சியமைப்பதற்குத் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அமெரிக்கா அதற்குத் துணை நிற்பதால் அது இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. திருப்பூரை பங்களாதேசுடன் இணைத்துத் தருவதாகத் தெரிவித்துத் தங்கள் முயற்சிக்கு ஆதரவு தந்தால் நிரந்தரமாக நீங்கள் ஆட்சியில் இருக்கலாம் என்று சமீபத்தில் அமெரிக்கா நேரடியாக வேண்டிக்கொண்டபோது பிரதமர் ஷேக் ஹஸீனா அதை ஏற்க மறுத்ததாகவும், தற்போது பங்களாதேஷில் நிகழ்த்தப்படுகின்ற இந்த மாணவர் போராட்டத்துக்கு அமெரிக்காவே பணஉதவி வழங்கி துணைநிற்பதாகவும் இன்னொரு அரசியல் செய்தி வட்டாரம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் தேர்தலை அறிவித்த பின்னர் ஷேக் ஹஸீனா நாடு திரும்புவார் என்று லண்டனில் உள்ள அவரது மகன் ஸஜீப் வஷீத் சர்வதேச ஊடகங்களுக்குச் செய்தி வெளியிட்டிருக்கிறார். வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள இன்றைய ‘இந்த’ ஆட்சி கவிழ்க்கப்பட்ட சூழ்நிலைக்கு பாகிஸ்தானின் சூழ்ச்சியே காரணம் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். பாகிஸ்தானின் ஐ. எஸ். புலனாய்வுப் பிரிவுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
டாக்காவைச் ேசர்ந்த சமூகவியல் மாணவர் நஹீத் இஸ்லாம் வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தைத் தலைமையேற்று ஒருங்கிணைத்துள்ளார். அவரின் போராட்டம் ஷேக் ஹஸீனாவின் 15 வருட கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர்களின் போராட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான நஹீத் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மாணவர் போராட்டம் கலவரமாக மாறியது. இராணுவத்தால் வழிநடத்தப்படும் அல்லது ஆதரிக்கப்படும் எந்த ஒரு அரசையும் எதிர்ப்பதாக நஹீத் இஸ்லாம் தெரிவித்துள்ளார். தாங்கள் சிபாரிசு செய்யும் அரசைத் தவிர வங்கதேசத்தில் எந்த அரசு ஆட்சியமைத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸை தலைமை ஆலோசகராக நியமிப்பதற்கு நஹீத் இஸ்லாம் முன்மொழிந்துள்ளார்.
வங்க விடுதலை தேசத் தந்தை முதல் ஜனாதிபதி முஜிபுர் ரகுமானின் முதலாவது புதல்வி ஷேக் ஹஸீனா 1960இல் டாக்கா பல்கலைக்ழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே அரசில் பிரவேசம் பெற்றார். 1971 இல் வங்காளதேச விடுதலையில் ஈடுபட்டதற்காக அவரும் அவரது குடும்பமும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின் 1975ஆம் ஆண்டு அவரது தந்தை ஜனாதிபதி முஜிபுர் ரகுமான் மற்றும் தாய் உட்பட 3 சகோதரர்களும் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். அப்போது ஹஸீனா நாடு கடத்தப்பட்டிருந்ததால் உயிர் தப்பினார் எனக் குறிப்பிடுகிறார்கள். தேசவிடுதலை பெற்ற வங்க தேசத் தந்தை முதலாவது ஜனாதிபதி முஜிபுர் ரகுமானின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்து வீழ்த்தியிருக்கிறார்கள். பாராளுமன்றத்தைச் சுற்றி வளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் ஷேக் ஹஸீனாவின் அரச மாளிகைக்குள் நுழைந்து பறவைகள், கதிரைகள், ஆபரணங்கள், அணிகலன்கள், செருப்புகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் என அங்கிருந்த ஒட்டுமொத்த வீட்டுப்பொருட்களையும் சூறையாடிச் சென்றிருக்கிறார்கள். அவரது கட்டிலில் உறங்கிப் பார்த்திருக்கிறார்கள். சமையலறையில் இருந்த உணவுப்பொருட்களைக் உண்டு சுவைத்திருக்கிறார்கள். உடுத்த புடவைகள் உள்ளாடைகள், புதிய ஆடைகள் என யாவற்றையும் மக்கள்முன் கொண்டுவந்து விரித்துக்காட்டிப் படம் எடுத்து சமூக ஊடகங்களிலும் பதிவிட்டிருக்கிறார்கள். சமீபத்தில் இஸ்ரேலிலும் கூட பாராளுமன்றத்தைக் கைப்பற்றும் ஒரு முயற்சி நிகழ்ந்தது. ஆனால் அது ஒரு நூலிழையில் தப்பிவிட்டது. ‘நாட்டுமக்களை எதிர்ப்பவர்களுக்கெல்லாம் இது ஒரு படிப்பினையாக இருக்கும்’ என்று வங்கதேச ஆர்ப்பாட்டக்காரர்கள் சொன்னார்கள். அவர்களது கருத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
வங்கதேசப் பிரதமராய் இருந்த ஷேக் ஹஷீனா தனது 16 ஆண்டுகால ஆட்சியில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்ததாகவும் இந்திய அரசின் ஏவலுக்கெல்லாம் ஆதரவளித்து வந்ததாகவும் வங்கதேசம் என்பது இந்திய ஆதிக்க நாடாகவும் ஆகிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன. இருந்தபோதும் பொருளாதார வீழ்ச்சியுற்ற இலங்கைக்கு பொருளாதார உதவி செய்த ஷேக் ஹஸீனாவின் அரசாங்கம் சமீப காலங்களில் இலங்கை மக்களுக்குக் கைகொடுத்து உதவியதை இலங்கை மக்கள் இப்போதும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார்கள்.
வங்காளதேச விடுதலைப்போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அங்குள்ள நீதிமன்றம் ரத்துச் செய்தது. பின் அரசு அதை நடைமுறைப்படுத்த முனைந்தபோது உருவான மாணவர் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது சிறுபான்மைச் சமூகத்தவரும் தாக்கப்பட்டதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் மேற்குவங்காளத்தில் கூச் பீகார் மாவட்டம் சீதல்குச் பகுதியில் உள்ள இருநாட்டு எல்லையில் இன்று நூற்றுக்கணக்கானோர் இந்திய எல்லையில் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துள்ளனர். அவர்களில் அதிகமானோர் இந்துக்கள். ஆனால் அவர்களை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் தடுத்துள்ளனர்.
ஷேக் ஹஸீனா சொந்த நாட்டை விட்டுத் தப்பி வருவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னர் 1975இல் அவரது மொத்த குடுப்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டனர். வங்கதேசத்தை நிறுவிய விடுதலைத் தந்தை முதலாவது ஜனாதிபதி என அழைக்கப்படும் பங்கபந்து ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் 18பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
அவர் அந்நாட்டின் அதிபரான 4 ஆண்டுகளில் இந்த படுகொலைச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் குழப்பம், இராணுவ ஆட்சி என அடுத்தடுத்த புதுத் திருப்பங்களை அந்நாடு சந்தித்தது.
இந்த சம்பவம் நடந்தபோது மேற்கு ஜேர்மனியில் கணவர் வசீத்மியாவுடன் ஷேக் ஹஸீனா வசித்து வந்துள்ளார். அவரால் அப்போது சொந்த நாட்டுக்குத் திரும்பமுடியாத நிலையில் அவர் தன் கணவர், குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் 1975 முதல் 1981 வரை ஆறு ஆண்டுகள் தங்கள் அடையாளங்களை மறைத்தபடி அன்றைய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் உதவியுடன் இந்தியாவில் வாழ்ந்தார்.
6 ஆண்டுகளுக்குப் பின்னர் 1981 மே 17ஆம் திகதி அவர் வங்கதேசம் திரும்பிய பின் அவாமி லிக்கின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய அந்த வருகைக்குப் பின் அங்கே இராணுவ ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
பின் ஊழல் வழக்கில் சிறை உள்ளிட்ட பல்வேறு சவால்களைச் சந்தித்த அவர் 1996இல் முதன்முறை வங்கதேசத்தின் பிரதமரானார். இந்த பின்புலத்தின் தன்னை வளர்த்துக்கொண்ட அவர் இன்றைய அபாயகரமான சூழலில் 30 நிமிட இடைவெளியில் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களிடமிருந்து உயிர்தப்பி மீண்டும் இப்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். 2ஆவது முறையாக இந்தியா அவருக்கு இப்போது புகலிடமளித்துள்ளது. இது தவிர 1971இல் பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப் போரில் வங்கதேசம் ஈடுபட்டபோது, அந்நாடு விடுதலை பெறுவதில் இந்தியாவின் பங்கு அதிமுக்கியத்துவம் பெற்றிருந்தது.
எந்த நாடும் சொந்த பலன் எதிர்பாராமல் இன்னொரு நாட்டுக்குள் தன் மூக்கை நுழைப்பதில்லை. வங்கதேசம் எவ்வாறு இந்நெருக்கடியிலிருந்து மீளும் என்பதற்கான பதில்களை நிச்சயம் எதிர்காலம் எடுத்துச்சொல்லும் என்ற அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றது உலகம்.
கனடாவிலிருந்து இனியவன் இசார்தீன்