சமகால சர்வதேச அரசியலை யுத்தங்களும், இராஜதந்திர மோதல்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. அண்மைய வாரங்களின் கட்டுரைகளும் அவற்றின் பிரதிபலிப்பாகவே அமைந்தன. இச்சூழலில் தென்னாசியாவில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் ஏற்பட்ட மாணவர் புரட்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் வரலாறு மாணவர் புரட்சியோடு இறுகப் பிணைந்தது. 1972களில் பங்களாதேஷ் எனும் புதிய அரசின் உருவாக்கத்திற்கான அடித்தளம் பங்களாதேஷ் மாணவர் போராட்டங்களாலேயே ஏற்படுத்தப்பட்டது. அவ்வரலாற்று அனுபவங்களின் பின்னணியில், 2024இல் ஏற்பட்ட மாணவர் போராட்டம் ஆட்சி மாற்றத்தை உருவாக்கியுள்ளது. சில சர்வதேச அரசியல் ஆய்வாளர்களால், மாணவர் போராட்டம் பங்களாதேஷின் ஜனநாயக மீளெழுச்சிக்கானதாக விபரிக்கப்படுகிறது. மறுதலையாக மாணவர் போராட்டம், ‘தேச விரோத’ செயல் என நாட்டை விட்டு வெளியேறிய பங்களாதேஷ் பிரதமர் மற்றும் அவரது அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது. இக்கட்டுரை பங்களாதேஷ் போராட்ட அரசியல் வகிபாகத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஜூலை-1அன்று, பங்களாதேஷில் அரசாங்க வேலைகளுக்கான இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக அமைதியான மாணவர் போராட்டம் தொடங்கியது. அரசாங்க வேலைகளுக்கான 30 சதவீத இடஒதுக்கீடு, 1971இல் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக பங்களாதேஷின் போரில் ஈடுபட்ட வீரர்களின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது பாராபட்சமான ஒதுக்கீடாக வர்ணிக்கப்பட்டு, இதனை மாற்றக்கோரியே போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இது நீண்டகால கோரிக்கையாகவும் அமைகின்றது. இருதரப்பும் நீதிமன்ற உதவிகளையும் நாடியிருந்தன. போராட்டக்காரர்களின் கோரிக்கை பெருமளவு நிறைவேற்றப்பட்டது. ஜூலை-21அன்று உச்சநீதிமன்றம், முன்னாள் இராணுவ வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாகக் குறைத்து, 93 சதவீத வேலைகள் தகுதி அடிப்படையிலும், மீதமுள்ள 2 சதவீதம் சிறுபான்மை இனத்தவர்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்படும் என்று உத்தரவிட்டது. அவர்களின் கோரிக்கை பெருமளவில் நிறைவேற்றப்பட்டாலும், எதிர்ப்புக்கள் விரைவில் ஒரு பரந்த அரசாங்க எதிர்ப்பு இயக்கமாக மாறியது.
அமைதி வழியாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், ஜூலை-16அன்று டாக்காவில் போராட்டக்காரர்களுக்கும் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து, வன்முறையானதாக மாறியது. ஆறு பேர் கொல்லப்பட்ட முதல் வன்முறை பதிவு செய்யப்பட்டது. ஷேக் ஹசீனா மற்றும் அவருடைய அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களை, ‘தேசத்தை சீர்குலைக்க முயலும் பயங்கரவாதிகள்’ என்று விபரித்தார்கள். இது போராட்ட அணுகுமுறையை மாற்றியது. வன்முறை அதிகரிக்கப்பட்டது. பங்களாதேஷ் தொலைக்காட்சியின் தலைமையகத்தையும் மற்ற அரசாங்க கட்டிடங்களையும் போராட்டக்காரர்கள் எரித்தனர். மேலும், போராட்டக்காரர்கள் ஹஸீனாவின், இராஜினாமாவை தொடர்ந்து கோரினர். மற்றும் ‘சர்வாதிகாரியை வீழ்த்து’ என்று கோஷமிட்டனர். டாக்கா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப் பேராசிரியரான டாக்டர் சமினா லுத்பா பிபிசிக்கு வழங்கியுள்ள நேர்காணலில், “ மாணவர்கள் மாத்திரமல்ல, அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்திருப்பதாகத் தெரிகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இயக்கம் விரிவடைந்தவுடன், மோதல்கள் தொடர்ந்தன. மேலும் ஏற்பட்ட அமைதியின்மையில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பங்களாதேஷ் ஊடகங்களும் எதிர்ப்பாளர்களும் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கைக்கு காவல்துறையைக் குற்றம் சாட்டினர். எவ்வாறாயினும், அதிகாரிகள் தற்காப்புக்காகவோ அல்லது அரச சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவோ மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அரசாங்கம் கூறியது. எனினும் விரிவடைந்த போராட்டத்தை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. பிரதமர் ஷேக் ஹஸீனா மற்றும் அவரது ஆளும் அவாமி லீக் கட்சிக்கு எதிராக ஒரு குறிப்பிடத்தக்க சவாலாகவும் எழுச்சியாகவும் இது மாறியது. இந்நிலையிலேயே ஆகஸ்ட் 6அன்று, ஷேக் ஹஸீனா தனது பதவியை இராஜினாமா செய்து, இராணுவ ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். இந்தியாவின் புதுடெல்லியில் பாதுகாப்பு தஞ்சம் கோரியுள்ளார். எதிர்வரும் நாட்களில் பிரித்தானியாவிற்கு செல்ல உள்ளதாகவும் சர்வதேச அரசியல் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. எனினும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய இந்தியாவிலேயே தஞ்சம் கோரியுள்ளார் என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகஸ்ட்-7அன்று பாராளுமன்ற அமர்வில் உறுதிப்படுத்தியிருந்தார்.
ஹஸீனாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து இராணுவ தளபதி இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்றிருந்த நிலைமையில், பங்களாதேஷின் அரசியல் ஸ்திரமற்ற சூழல், பிராந்திய அரசியல் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. இந்திய ஊடகங்களும் ஹஸீனாவின் வெளியேற்றத்திற்கு வழிவகுத்த எதிர்ப்புகளைத் தூண்டியதில், பாகிஸ்தான் மற்றும் சீன உளவுத்துறை அமைப்புகளின் பங்கு பற்றிய குற்றச்சாட்டுகளை முதன்மைப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான உள்ளக புலனாய்வு சேவைகள் (ஐ.எஸ்.ஐ) பங்களாதேஷ் எதிர்க்கட்சியான தேசியவாதக் கட்சி (பி.என்.பி) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் மாணவர் பிரிவுகளுடன் ஆட்சி மாற்றத்தைத் திட்டமிடுவதற்கு ஒத்துழைத்ததாக சில தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவின் Economic Times பகிரங்க குற்றச்சாட்டை மாணவர் எதிர்ப்பு போராட்ட ஆரம்பம் முதல் முன்வைக்கிறது. தடைசெய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமியின் மாணவர் பிரிவான சத்ரா ஷிபிர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யால் ஆதரிக்கப்படுவதாகக் கூறப்படுவது, வன்முறையைத் தூண்டுவதாகவும், பங்களாதேஷில் மாணவர் போராட்டங்களை ஒரு அரசியல் இயக்கமாக மாற்றுவதாகவும் Economic Times தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் இராணுவமும் ஐ.எஸ்.ஐ.யும் பிரதமர் ஷேக் ஹஸீனாவின் அரசாங்கத்தை சீர்குலைப்பதற்கும் மற்றும் எதிர்ப்புகள் மற்றும் தெரு வன்முறை மூலம் எதிர்க்கட்சியான பி.என்.பியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டு செயற்படுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாவும் செய்தி வெளியிட்டுள்ளது. கூடுதலாக, தற்போதைய நெருக்கடியில் மேற்கத்திய ஆதரவு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஈடுபாடு குறித்து உள்ளூர் அரசாங்கம் விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இப்பின்னணியில் Economic Times பங்காளாதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை ஹஸீனாவிற்கு எதிராக பாகிஸ்தான் ஆதரவு இயக்கங்களால் கட்டமைக்கப்பட்ட சூழ்ச்சியாகவே விளக்குகின்றது.
இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதியான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், தென்னாசியாவின் புவிசார் அரசியல் இயக்கவியல் பற்றிய கேள்விகளை சர்வதேச அரசியலில் எழுப்புகின்றன. பாகிஸ்தானும், சீனாவும் பங்காளதேஷ் உடனான உறவை வலுப்படுத்த முயல்வதன் மூலம் இப்பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைத்துக்கொள்ள முற்படுவது யதார்த்தபூர்வமானதாகும். குறிப்பாக சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியில் சீன- பங்களாதேஷ் உறவின் நெருக்கத்தை இந்தியா நெருக்கடியாகவே அவதானித்தது. எனினும் குறிப்பிடத்தக்க வகையில், ஹசீனாவின் ஆட்சியின் போது, இந்தியாவுடனான பங்களாதேஷின் உறவு வலுவாக இருந்தது. சீனாவிடமிருந்து பொருளாதார நலன்களைப் பெறும் மூலோபாய உறவை பங்களாதேஷ் வெளிப்படுத்தியதுடன், மறுவளம் நட்புரீதியான ஒத்துழைப்பை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது. ஷேக் ஹஸீனாவின் வரலாறும், இந்தியாவுடன் ஆழமாக பிணைந்துள்ளது. நெருக்கடியான காலங்களில் ஹஸீனாவின் பாதுகாப்புசார்ந்த நம்பிக்கைக்குரிய அரசாக இந்தியாவே இருந்துள்ளது. அவரது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1975இல் அவரது தாயார், சகோதரர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். ஹஸீனாவுடன் அவரது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் நாடுகடத்தப்பட்டு, ஆறு ஆண்டுகள் இந்தியாவிலேயே தங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஷேக் ஹஸீனா- இந்திய உறவு, பிராந்தியத்தில் அதன் நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக பாகிஸ்தானால் கருதப்பட்டது. எவ்வாறாயினும், ஹஸீனாவின் விலகலுடன், நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் இயக்கவியலை மாற்றத் தயாராக உள்ளது.
பங்களாதேஷில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வர்த்தக நலன்களுக்கு உணர்திறன் கொண்ட ஒரு தலைவரின் வீழ்ச்சி புதுடெல்லிக்கு ஒரு குறிப்பிடத்தக்க நெருக்கடியாகவே அமைகின்றது. இந்திய ஊடகங்களின் செய்தியிடலும், அவ்அதிருப்தியை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.
மேலும், ஹஸீனாவின் வெளியேற்றத்தின் பின்னர், கட்சிப் பாகுபடற்று இந்திய அரசியல் தலைவர்களின் ஹஸீனா மீதான கரிசனையும் அதனையே உறுதி செய்கின்றது. குறிப்பாக ஹஸீனாவின் பாதுகாப்பு சார்ந்து இந்திய காங்கிரஸும் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது. காங்கிரஸின் பாராளுமன்ற குழுத் தலைவர் ராகுல் காந்தி பங்களாதேஷ் நிலவரம் தொடர்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் உரையாடி இருந்தார்.
ஹஸீனாவின் அவாமி லீக் கட்சி மற்றும் அதன் தலைமையுடன் இந்தியா நல்ல உறவை அனுபவித்தாலும், பி.என்.பி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற பிற அரசியல் கட்சிகளுடன் அது போன்ற உறவைக் கொண்டிருக்கவில்லை. வாஷிங்டனை தளமாகக் கொண்ட வில்சன் மையத்தில் உள்ள தெற்காசிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல் குகல்மேன் கூறுகையில், “ஹஸீனா மற்றும் அவாமி லீக்கிற்கு மாற்றாக ஏதேனும் இருந்தால் அது இந்திய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று இந்தியா கவலை கொண்டுள்ளது. புது டில்லியின் பார்வையில், பி.என்.பி மற்றும் அதன் கூட்டாளிகள் இந்திய நலன்களை கெடுக்கக்கூடிய ஆபத்தான இஸ்லாமிய சக்திகள்” என தெரிவித்திருந்தார். ஹஸீனாவுக்கான இந்தியாவின் அடைக்கலத்திற்கு பி.என்.பி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. 1991இல் பி.என்.பி தலைமையிலான அரசாங்கத்தில் மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கயேஷ்வர் ராய், “பங்காளதேசமும் இந்தியாவும் பரஸ்பர ஒத்துழைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று பி.என்.பி நம்புகிறது. அந்த உணர்வைப் பின்பற்றும் விதத்தில் இந்திய அரசு புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் எங்கள் எதிரிக்கு உதவி செய்தால் அந்த பரஸ்பர ஒத்துழைப்பிற்கு கடினமாகிவிடும்.” எனத்தெரிவித்துள்ளார்.
எனவே, பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, பிராந்திய ரீதியில் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் நெருக்குவாரத்தை உருவாக்கியுள்ளது. ஹஸீனாவுக்கான இந்திய ஆதரவு, பங்களாதேஷில் புதிகாக உருவாகும் அரசாங்கத்தை, இந்தியாவிலிருந்து விலக்கும் ஆபத்தை உருவாக்கியுள்ளது. பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் யூனுஸ், “இந்தியா போன்ற சில நாடுகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமரை ஆதரித்தாலும், பங்களாதேஷ் மக்களின் பகையை சம்பாதித்தாலும், இந்த வகையான பிளவுகளை குணப்படுத்த பல வாய்ப்புகள் இருக்கும்” என பங்களாதேஷுக்குத் திரும்புவதற்கு முன்பு தி எகனாமிஸ்டில் தெரிவித்துள்ளார். இது இந்தியாவை அணைத்துக்கொள்ளும் கருத்தாகவே அவதானிக்கப்படுகிறது. மேலும், நெருக்கடி குழுவைச் சேர்ந்த கீன், நடைமுறை உறவுகளுக்காக நாடுகள், கடந்த காலத்தை ஒதுக்கி வைக்கும் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா- பங்களாதேஷ் உறவு பிராந்திய பங்காளிகளாக இரு தேசத்துக்கும் முக்கியத்துவமானதாக அமைவதனால், விரைவான வெளியுறவு சீர்திருத்தம் இருதரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.