இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியின் தலைவராகியுள்ள ராகுல் காந்தி ஆளுமை நிறைந்ததொரு அரசியல் தலைவரா என்ற சந்தேகம் இந்திய அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றது. அந்தச் சந்தேகத்தை உறுதி செய்வது போன்றே சில சம்பவங்களும் அமைந்து விடுகின்றன.
நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறக்கத்தில் இருந்தார்.
இதைப் பார்த்ததும் பா.ஜ.க எம்பிக்கள், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் ராகுல் காந்தியை நோக்கி விரலை நீட்டி கிண்டலாக நோக்கினர். அவர்கள் ராகுல் காந்தியை கேலி, கிண்டல் செய்தனர்.
இந்தியாவில் தற்போது பரபரப்பாகப் பேசப்படுகின்ற வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ லோக்சபாவில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதா வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் நோக்கத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து லோக்சபாவில் அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெறும் 31 எம்.பிக்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்தக் கூட்டு குழு மசோதாவை ஆராய்ந்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும். அதனை பரிசீலனை செய்து மத்திய அரசு மீண்டும் வக்பு வாரிய திருத்த மசோதாவை அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யும்.
இந்நிலையில்தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. அது என்னவென்றால் ராகுல் காந்தி உறங்கும் வீடியோவாகும். அதாவது வியாழனன்று லோக்சபாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த வேறையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிரே அமர்ந்து இருந்தார். அப்போது திடீரென்று ராகுல் காந்தி உறக்கத்தில் மூழ்கினார்.
ராகுல் காந்தி உறக்கத்தில் இருப்பதை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ராகுலை நோக்கி கையை நீட்டி சுட்டிக்காட்டினார். இதையடுத்து அவர் அருகில் இருந்த பா.ஜ.க எம்.பியான கிரிராஜ் சிங், ராகுல் காந்தியை நோக்கி விரலை நீட்டி, “அங்கே பாருங்கள். அவர் (ராகுல் காந்தி) உறங்குகிறார்” என்று சிலதடவை கூறினார்.
இதையடுத்து அங்கிருந்த மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் மற்றும் பா.ஜ.க எம்.பிக்கள் ராகுல் காந்தியை பார்த்துச் சிரித்தனர். மேலும் மேசையைத் தட்டினர். ஆனாலும் ராகுல் காந்தி கொஞ்சம் கூட அசைந்து கொடுக்காமல் உறங்கிக் கொண்டிருந்தார். இந்த வேளையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது நெற்றியில் கையை வைத்து அடித்துவிட்டு, “குறுக்கே குறுக்கே பேசாதீர்கள் என்று சொன்னால் கேட்க வேண்டும். தொடர்ந்து குறுக்கே பேச முயன்றால் அது உங்களை உறக்கத்துக்கு அழைத்து சென்றுவிடும்” என்று கிண்டல் செய்தார்.
இதனைக் கேட்டவுடன் மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க எம்பிக்கள் அனைவரும் சிரித்தனர். மறுபுறம் காங்கிரஸ் எம்.பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் என்பது நிழல் பிரதமர். அவர் முழு எதிர்க்கட்சித் தரப்புக்கும் தலைவர் என்பதோடு மட்டுமல்லாது, பல முக்கிய நியமனங்களிலும் பிரதமருடன் இணைந்து செயற்படுவார்.
இத்தனை பொறுப்பு வாய்ந்த ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் உறங்கியது பரவலாக விமர்சிக்கப்படுகின்றது. அரசியல் தலைமைத்துவத்துக்கு அவர் பொருத்தமற்றவர் என்ற கருத்து இந்திய அரசியலில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற சூழலில் இவ்வாறான சம்பவமொன்று நாடாளுமன்றத்தில் நிகழ்ந்துள்ளது.
அவர் ஒரு முதிர்ந்த தலைவராகத் தன்னை மேலும் வலுப்படுத்துவது அவசியமென்று அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் பங்கு மிகவும் முக்கியமானது. நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளின் குரலாக மாறுவது மட்டுமல்லாமல், அவருக்கென சொந்த அதிகாரமும் சலுகைகளும் உள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் என்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி, அதற்கென சிறப்புச் சலுகைகள் உள்ளன
ராகுல் காந்தி 2004ஆம் ஆண்டு முதன் முறையாக தேர்தல் அரசியலுக்கு வந்தார். ராகுல் காந்தி கடந்த 2004ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ராகுலின் தந்தை ராஜீவ் காந்தியும் அமேதி தொகுதியில் இருந்து மக்களவைக்குப் போட்டியிட்டவரென்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.சாரங்கன்