பிரேஸிலின் சாவ் பாலோ மாநிலத்தில் 62 பேருடன் வானில் பறந்துகொண்டிருந்த விமானமொன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் பறந்துகொண்டிருந்தது. வின்ஹெடோ நகருக்கு மேலாக இந்த விமானம் பறந்துகொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறி கீழே விழுந்து வெடித்ததை உள்ளூர் தீயணைப்புப்படையினர் உறுதி செய்துள்ளனர்.
விமானம் விழுந்த அந்த இடமே தீப்பிளம்பாக மாறியது. எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில் விமானம் விழுந்த வேகத்தில் வெடித்து சிதறியது. அதில் ஏற்பட்ட தீப்பிளம்பு காண்போரை கண்ணீரில் ஆழ்த்தியது.
58 பயணிகள் மற்றும் விமானிகள் உட்பட 4 பணியாளர்களுடன் சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான குருல்ஹாஸ் (Guarulhos) நோக்கிச் சென்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இந்த விபத்தை அறிந்த பிரேஸில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ஆழ்ந்த கவலை வௌியிட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.