ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவது உறுதியாகியிருப்பதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க ஊடகமான இலங்கை வானொலிக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கே: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்றதொரு கட்சி இலங்கையில் உருவாக்கப்பட வேண்டிய தேவை பற்றிக் குறிப்பிடுவீர்களா?
பதில்: எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சுப் பதவியை வகித்து செயற்பட்டுக் கொண்டிருந்தார். எனினும், ஐ.தே.கவின் கொள்கைகள் மற்றும் அதனால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியாத சூழ்நிலையில், இடதுசாரிக் கொள்கையுடைய கட்சியொன்றுக்கான தேவையை உணர்ந்தே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அவர் உருவாக்கினார். ஐ.தே.கவிலிருந்து அமைச்சுப் பொறுப்பை உதறிவிட்டு குழுவினருடன் வெளியேறி கட்சியை உருவாக்கி நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். இருந்தபோதும், துரதிர்ஷ்டவசமாகப் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னரே சிறிமாவோ பண்டாரநாயக்க உள்ளிட்ட தலைவர்கள் சுதந்திரக் கட்சியைத் தற்பொழுது இருக்கும் நிலைவரை முன்னேற்றிக் கொண்டுவந்துள்ளனர்.
கே: பண்டாரநாயக்கவின் பின்னர் சிறிமாவோ அம்மையாரின் தலைமைத்துவத்தின் காலத்தில் சுதந்திரக் கட்சியினால் எடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான தீர்மானங்கள் நாட்டில் எந்தளவுக்குப் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
பதில்: 1970 – 77 காலப்பகுதியில் அவருடைய தலைமையிலான அரசாங்கம் பல்வேறு முக்கிய தீர்மானங்களை எடுத்திருந்தது. அந்தக் காலப்பகுதியில் உலகில் காணப்பட்ட போக்குகளைக் கவனத்தில் கொண்டே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. உதாரணமாகக் கூறுவதாயின், தனியார்துறையினரிடம் காணப்பட்ட துறைமுகம் போன்றவை அரசாங்க உடமையாக்கப்பட்டமை போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதற்கு சமாந்தரமாக தொழிற்சாலைகள் பல உருவாகின. இதுவே அந்தக் காலப்பகுதியில் இருந்த உலகப் போக்கு ஆகும். இதற்கு அமைவாக இலங்கையிலும் பாரியதொரு புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டது. உற்பத்திைய அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டது. அவருடைய ஆட்சிக்காலம் மேலும் இரண்டு வருடங்கள் நீடித்திருந்தால் உலக நாடுகளில் கடன் பெறும் நாடாக அன்றி ஏனைய நாடுகளுக்குக் கடன் வழங்கும் நாடாக இலங்கை மாறியிருக்கும். இதனை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். எனினும், அந்த நேரத்தில் இதற்கு எதிராக எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் காரணமான சூழல் மாறியிருந்தது.
அது மாத்திரமன்றி, பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க அனைத்து செயற்பாடுகளையும் உண்மையான நோக்கத்தில் மேற்கொண்டிருந்தார். உதாரணமாக தனியார் சொத்துக்களை பொது உடமையாக்கும்போது, அவரது குடும்பத்திற்குக் காணப்பட்ட பெருமளவு காணிகள் அரச உடமையாக்கப்பட்டிருந்தன. இது அவரின் உண்மையான செயற்பாட்டின் வெளிப்பாடாக அமைந்தது.
கே: ஆரம்பம் முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி அமைத்தே செயற்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு அரசியல் நிலைப்பாட்டை ஆரம்பம் முதல் கடைப்பிடித்து வருவதன் நோக்கம் என்ன?
பதில்: ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு செயற்படுவது வெற்றியை இலகுவாக்கும். அது மாத்திரமன்றி, ஏனைய தரப்பினருடன் இணைந்து அரசாங்கத்தை முன்கொண்டுசெல்லும் போது ஜனநாயத்துக்கான இடம் மேலும் அதிகரிக்கும். பலருடைய கருத்துக்களைக் கேட்க முடியும். இதனை சரியான பாதைக்குத் திருப்பினால் நாட்டுக்கும் சிறந்ததாக அமையும். குழப்பவாதிகள் ஒருசிலர் இருந்தாலும், ஏகாதிபத்திய நிலைமையை மாற்றுவதற்கு இது உதவும். இதனால்தான் மக்களும் தனியானதொரு கட்சி என்பதற்கு அப்பால் கூட்டணிகள் மீதே அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கே: இவ்வாறான பின்னணியில் 2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரக் கட்சியின் அப்போதைய தலைவருக்கும், செயலாளருக்கும் இடையிலான போட்டியாக அமைந்தது. அவ்வாறான நிலைமை ஏன் ஏற்பட்டது?
பதில்: எதுவாக இருந்தாலும், யார் வெற்றி பெற்றாலும் அதில் தீர்மானிக்கும் சக்தியாக சுதந்திரக் கட்சி அமைந்துள்ளது என்பதே உண்மையாகும். யார் வெற்றி பெற்றாலும் அதற்கு நாம் முக்கிய பங்காற்றியுள்ளோம்.
கே: எப்படி அவ்வாறு கூறுவீர்கள்?
பதில்: நீங்கள் கூறியதுபோன்று யுத்தத்தை வெற்றிகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்கும் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரே பங்காற்றியிருந்தார். சுதந்திரக் கட்சியின் குழுவினர் சென்றுதான் அன்று அந்த ஜனாதிபதி வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தனர். அப்படிச் சென்றிருக்காவிட்டால் அந்த வெற்றி கிடைத்திருக்காமல் இருக்கலாம்.
இதன் பின்னர் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெறுவதற்கு சுதந்திரக் கட்சி கூட்டணியுடன் இணைந்து வழங்கிய ஒத்துழைப்பே காரணமாக அமைந்தது. சுதந்திரக் கட்சியின் 17 இலட்சம் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் அவருக்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்திருக்காது. அப்படியாயின் அவர் ஜனாதிபதியாகியிருக்க மாட்டார். நாம் அன்று வேறு பக்கத்துக்குச் சென்றிருந்தால் நிலைமை மாறியிருக்கும். அவ்வாறானதொரு நிலைமையே இன்றும் அரசியலில் காணப்படுகின்றது. இன்று நாம் இணைந்து பணியாற்றும் நபரே இந்நாட்டின் ஜனாதிபதியாவார் என்பதையே நான் மீண்டும் மீண்டும் கூறுகின்றேன்.
கே: அப்படியாயின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்பொழுது என்ன நிகழ்ந்துள்ளது?
பதில்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தாம்தான் எனப் பல்வேறு தரப்பினர் கூறினாலும், நாம் இருக்கும் குழுவே உண்மையான சுதந்திரக் கட்சியாகும். எமது கட்சியின் ஆதரவுடனேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் இந்நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
கேள்வி: ஆரம்பம் தொட்டு சுதந்திரக் கட்சி பல்வேறு அரசியல் சூறாவளிகளுக்கு முகங்கொடுத்த கட்சி. எனினும், மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் பின்னர் இந்தக் கட்சி பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. ஏன் அவ்வாறான நிலைமை ஏற்பட்டது?
பதில்: எமது கட்சியின் தலைமைத்துவத்தை எடுத்துப் பார்த்தால், கட்சி மோசமான சரிவைச் சந்தித்தமை மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழாகும். அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இந்தக் கட்சியைப் பொறுப்பெடுத்துக் கொண்டார். பொறுப்பேற்கும்போது 100 இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பலமான நிலையில் கட்சி இருந்தது. எனினும், அவர் எடுத்த தீர்மானங்கள் காரணமாகக் கட்சி மோசமான சரிவைச் சந்தித்தது. அவரின் பின்னர் நாம் கட்சியைப் பொறுப்பேற்கும்போது இரண்டு உறுப்பினர்களே அவருடன் இருந்தனர். கொள்கை அடிப்படையின்றி எடுக்கும் தீர்மானங்கள் அதிக தாக்கம் செலுத்தின. அவர் இரவில் உறங்கும் போது ஏதாவது கனவு கண்டால் மறுநாள் அவர் எடுக்கும் தீர்மானம் வேறுவிதமானதாக இருக்கும். இவ்வாறே அவரின் நடவடிக்கைகள் இருந்தன. கொள்கை அடிப்படை இன்றி தனித்தனித் தீர்மானங்கள் எடுத்தமையால் இவ்வாறான சரிவு ஏற்பட்டது. எமது கட்சிக்கு ஏற்பட்ட மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு தலைமைப் பதவியிலிருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகத் தடையுத்தரவு கோரி மனுத் தாக்கல் செய்ததன் மூலம் சந்திரிகா குமாரதுங்க கட்சியின் விடயத்தில் மீண்டும் தலையிட்டார்.