அவுஸ்திரேலிய மெல்போன், வளர்பிறைப் பதிப்பக வெளியீடாக. சிங்கள மொழி பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள இலங்கையின் வடமத்திய பகுதியில், அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள நேகம என்ற ஊரில் இருந்து மலர்ந்திருக்கின்றது ‘அந்திக் கரை’ கவிதை நூல்.
84 பக்கங்களில் 60 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள இந்நூலின் ஆசிரியர் ஷிபானியா பௌசுல்.
புதுக் கவிதை நூல்களையே பெருமளவில் தந்து கொண்டிருக்கும் நமது புதிய தலைமுறைப் படைப்பாளிகளிடமிருந்து வேறுபட்டவராக, சிங்கள மொழி பேசும் பிரதேசத்தில் இருந்து யாப்பிலக்கணத்தைக் கற்றுக் கொண்டு, மரபுக் கவிதைகளைத் தருபவராக இந்நூலின் மூலம் அடையாளம் பெறுகிறார் இளந் தலைமுறைப் படைப்பாளியான ஷிபானியா பௌசுல்.
பட்டதாரி ஆசிரியராகக் கடமையாற்றும் அவர் பத்திரிகை, வானொலியில் அவ்வப்போது எழுதிய கவிதைகளின் தொகுப்பே இந்நூல். பிரான்ஸ் தமிழ்நெஞ்சம் அமினின் வடிவமைப்பிலும் அவுஸ்திரேலியா தமிழ் வானொலியின் ‘வளர்பிறை’ த் தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹுசீனின்அணிந்துரையோடும் நூல் மலர்ந்திருக்கின்றது.
சமூகத்தின் இழிநிலை கண்டு துள்ளுபவராக, சமூக ஒற்றுமை வேண்டுபவராக, அன்பு, நேசம், காதல் என்பவற்றை எடுத்துச் சொல்பவராக கவிதைகளினூடே வெளித் தெரிகிறார் ஷிபானியா. அவருடைய பெரும்பாலான கவிதைகள் அறுசீர், எண்சீர் விருத்தப் பாக்களாக அமைந்து ஓசை நயம் தருகின்றன.
“மானிடம் சிறக்க வென்று
மதமெலாம் போதித் தாலும்
தேனுடன் பாகு போல
தெளிவுடன் இருந்தி டாமல்
வீணெனப் பிணக்கை யேந்தி
வீழ்கிறோ மிந்த மண்ணில்
காண்கிற வினைகள் நீக்கி
கண்டிடு விடியல் நன்கு!” என்று
‘நாம் இலங்கையர்’ என்ற தலைப்பில் விளம்,மா,மா, என்ற சீரொழுங்கில் கவிதை தந்து சமூக ஒற்றுமையை நாடுகிறார் ஷிபானியா.
அவரின்,
“புல்லில் உறங்கும் பனியைப் பிடிக்கும்
புதிதாய் பூக்கும் பூக்கள் பிடிக்கும்
மல்லிப் பூவின் மணமும் பிடிக்கும்
மலைமேல் உறங்கும் மேகம் பிடிக்கும்
அல்லிப் பூவின் அழகும் பிடிக்கும்
அலைகள் உரசும் கரையும் பிடிக்கும்
இல்லார் கண்டு ஈதல் பிடிக்கும்
நல்லார் நூல்கள் நன்றே பிடிக்கும்! “
என்று தொடரும் அனைத்தும் மாச்சீர்களில் அமைந்த ‘எனக்குப் பிடிக்கும்’ என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள கவிதை நமக்கும் பிடித்ததாக நவில்தொறும் இன்பம் தருவதாக இனிக்கிறது.
புல்லில் உறங்கும் பனி, மலை மேல் உறங்கும் மேகம், அலைகள் உரசும் கரை என்று அவர் சொல்லும் படிமக் காட்சிகள் நம் நெஞ்சத்திரைகளில் ஓவியம் வரைந்து மகிழ்ச்சி தருகின்றன.
“அன்னைத் தமிழே அமிழ்தேநீ
அழகாய் என்னில் விளையாடி
கன்னல் கவிதை நான்பாடக்
கலங்கா மல்நீ சதிராடு! “ என்று தமிழ்த் தாயை வேண்டி நிற்கும் கவிஞர், நல்ல பல கன்னல் கவிதைகளை யாப்பமைதி குன்றாமல் தந்திருக்கின்றார் என்பதற்குப் பலகவிதைகள் எடுத்துக்காட்டாகின்றன.
காற்றில் தேடும் பாடல், மகனின் பாடசாலை முதல் நாள், வாழ நினைத்தால், பிஞ்சு நிலவே, என் தேடல், அன்பு மகள், என்கவிதை, கண்ணீர்ப் பூக்கள், கனி மொழியே என்ற கவிதைகள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை.
“பணத்தைக் குவித்துப்
பாசம் தந்து
பிணத்தைப் போல
நடக்கச் சொன்னாய்
வனத்தை எரித்து
வாய்ப்பைத் தேடி
மனதை உடைத்து
மையல் கொண்டாய்
சினத்தை விதைத்து
சிறகை உடைத்து
சிறுகச் சிறுகச்
சிணுங்கச் செய்தாய்
கனத்த நெஞ்சில்
காலை வைத்துக்
கதறச் செய்தாய்
பாழ்ம னத்தில்” (சிறகுடைந்த மனம்)
என்று துயரத்தை எண் சீர் விருத்தத்தில் பதிவு செய்திருக்கிறார் பௌசுல். அதே கவிதையை நான்கு வரிக் கவிதைகளாகப் பிரித்தும் ‘உடைந்த சிறகுகள் ‘ என்ற கவிதையில் பதிந்து, தொடர்ந்து
“அணையா விளக்காய்
அன்பே உன்னை
ஆரத் தழுவ
நான் துடிப்பேன்
துணையா யின்றித்
துயரைத் தந்து
துகள், துகளாய்
சென்றாய் ஏனோ? “
என்று முடித்திருக்கின்றார்… நெகிழ்ச்சி தரும் வரிகளைக் கொண்ட ஓசைநயம் மிக்க கவிதையாக இருப்பினும், ஒரு கவிதையை இரண்டு இடங்களில் வைக்க வேண்டிய தேவை யென்ன? என்ற கேள்வி நமக்குள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
“இலக்கணக் கவிதைகள்” என்று நூலின் முகப்பில் குறிப்பிட்டு, கவிதையின் சீரொழுங்கையும் கவிதைகளின் முடிவில் குறிப்பிடுவதில் இருந்து, யாப்பமைதி பிசகாமல் கவிதை தர அவர் முனைந்து செயற்படுகிறார் என்பது தெரிகிறது. அந்த முயற்சியில் அவர் பெருமளவில் வெற்றி பெற்றிருக்கின்றார் என்பதை அவரின் இந்த “அந்திக்கரை”உறுதி செய்கிறது என்று கூறமுடியும்.
“சின்ன சின்ன என்தேடல்
சிறக்கும் நாளை பொன்னாக:
தேடல் என்றும் தீராது”
என்று எழுதுபவர் ஷிபானியா. அவர், கலை, இலக்கியத் தேடலினை இன்னும் விரிவாக்கம் செய்து கொண்டு, ஈழத்தில் நமது முன்னோடிக் கவிஞர்கள் வளர்த்துச் சென்ற யாப்பமைதி குன்றாத, பேச்சோசைப் பண்புடைய நவீன கவிதைகளின் தேவைகளையும் வடிவத்தையும் புரிந்து கொண்டு, “யாப்புக்குள் நின்று
எழுதுவது மட்டுமே கவிதையைத் தீர்மானிக்காது” என்ற உண்மையை உணர்ந்தவராக, கவித்துவ நுட்பங்களில் தேர்ந்தவராக இன்னும் சிறந்த கவிதைகளைத் தரவேண்டு மென்பதே நமது எதிர்பார்ப்பாகும்.
கவிஞருக்கு நமது வாழ்த்துகள்.
நூல் :-அந்திக் கரை
ஆசிரியர்:- ஷிபானியா பௌசுல்.
வெளியீடு:-வளர்பிறை பதிப்பகம்,மெல்போன்&அவுஸ்திரேலியா.
விலை:-ரூபா 600/-(இலங்கையில்)
பாவேந்தல் பாலமுனை பாறூக்