ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அங்கம் வகிக்கின்ற கட்சிகளும், அக்கட்சிகளின் தேர்தல் கூட்டணிக் கட்சிகளும் பிரசாரக் களத்தில் இறங்கியுள்ளன. அக்கட்சிகளின் தலைவர்கள் நாடெங்கும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக தமது அரசாங்கம் கடந்த சுமார் இரண்டு வருடகாலத்தில் மேற்கொண்டு வருகின்ற சீரமைப்புத் திட்டங்களை மக்கள் முன்னிலையில் ஆதாரங்களுடன் பட்டியலிட்டுக் கூறி வருகின்றார்.
ஜனாதிபதி கூறுவது ஒளிவுமறைவற்ற, பகிரங்கமான, தெளிவான ஆதாரங்களாக இருக்கின்றன. வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இன்றைய முன்னேற்ற நிலைமைக்குக் கொண்டுவருவதற்காக கடந்த இருவருட காலத்தில் அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பான உழைப்பை அவர் பாராளுமன்றத்திலும் வெளிப்படுத்தியிருக்கின்றார். ஜனாதிபதி கூறுகின்ற ஆதாரங்கள் வெளிப்படையானவை என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.
நாட்டின் தலைமையை தாம் பொறுப்பேற்ற சமயத்தில் நாடு எவ்வாறான வீழ்ச்சி நிலைமையில் இருந்ததென்பதையும், நாடு படிப்படியாக இன்றைய நிலைமைக்கு மீண்டெழுந்து வருவதற்கு இதுவரை அரசாங்கம் மேற்கொண்ட திட்டங்களையும் ஜனாதிபதி எடுத்துக் கூறியுள்ளார். இருவருட காலத்தில் தாம் மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்புகளை கவனத்தில் கொண்டும், நாட்டின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டும் மக்கள் எதிர்வரும் தேர்தலில் தங்கள் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது அவரது கருத்து ஆகும்.
ஜனாதிபதியின் கருத்து இவ்வாறிருக்கையில், எதிரணியினரும் பலவாறான கருத்துகளை பிரசார மேடைகளில் வெளியிட்டு வருகின்றனர். அக்கருத்துகளில் பெரும்பாலானவை உண்மைக்குப் புறம்பானவையாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
எதிரணியினர் அரசாங்கத்தைக் குற்றம் கூறுகின்றனரே தவிர, இன்றைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கான திட்டங்கள் எதனையும் இதுவரை வெளிப்படுத்தியதில்லை. அரசாங்கத்தைக் குற்றம் சுமத்தி கூக்குரலிடுகின்ற அவர்கள், பொருளாதார முன்னேற்றத்துக்கான தங்களது திட்டம் என்னவென்பதை இன்னுமே மக்களிடம் முன்வைக்கவில்லை.
அதேசமயம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை மேற்கொண்ட உடன்படிக்கைகளை மீளாய்வு செய்யப் போவதாகவும், அந்த உடன்படிக்கையை ரத்து செய்யப் போவதாகவும் சிறுபிள்ளைத்தனமாகக் கூறி வருகின்றனர்.
சர்வதே நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சாதாரண உள்நாட்டு விவகாரமாக அவர்கள் கருதுவது நகைப்புக்கிடமானதாகும். அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேற முற்பட்டால் அதன் எதிர்விளைவான தீங்குகளை அறியாதவர்களாக அவர்கள் பேசுகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தின் போது அரசாங்கத்தைத் தாக்க வேண்டுமென்பதற்காக மக்கள் மத்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை தெரிவிப்பது அரசியல்நெறி அல்ல. அரசியல் பாதை எப்போதும் நேரானதாகவும், வெளிப்படையானதாகவுமே அமைந்திருக்க வேண்டும்.