ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவது, யார் யாரை வேட்பாளர்களாகக் களமிறக்குவது என்பதில் தென்னிலங்கை அரசியல் களம் பரபரப்படைந்திருக்கும் நிலையில், தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை அடிப்படையாகக் கொண்டு வடபகுதியில் சில அரசியல் கட்சிகள் இன்னமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை இம்முறை களமிறக்குவது தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் சிலவற்றுக்கும், ஏழு தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. கடந்த 22 ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள போதும், இதுவரை பொதுவேட்பாளர் யார் என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
பொதுவேட்பாளரைத் தெரிவு செய்வதில் சிக்கல்கள் காணப்படுகின்ற போதும், விரைவில் ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஒத்துழைப்பு வழங்குவது என்பது பற்றித் தமது கட்சி இன்னமும் முடிவு செய்யவில்லையென்றும், அரசியல் ரீதியான முன்னேற்றங்களை ஆராய்ந்து யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவு எட்டப்படும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களைத் தொடர்ந்தும் நலிவடையச் செய்யும் நோக்கிலேயே தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை ஒரு சில அரசியல் தரப்புக்கள் தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பதாக அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய சுமந்திரன் சாடியுள்ளார். அதேநேரம், ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறக்கூடிய பொதுத்தேர்தலில் உதிரியாக இருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் கபட நோக்கமே இந்தத் தமிழ் வேட்பாளர் விவகாரம் என ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் விமர்சித்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்துள்ள தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் தமிழ் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு எடுபடப் போகின்றது என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது. பிரதான தமிழ்க் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுவேட்பாளர் விடயத்துக்கு ஆரம்பத்திலிருந்தே உத்தியோகபூர்வமான ஆதரவை வழங்கவில்லை.
அது மாத்திரமன்றி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சியும் இவ்விடயத்தை எதிர்த்துள்ளது. இந்த நிலையில் இதற்கு யார் ஆதரவு வழங்கி வருகின்றனர் என்று பார்த்தால், ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளவர்கள், தமிழ் மக்கள் கூட்டணயின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் சார்பில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொ. ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்ற ஏழு கட்சிகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் காணப்படுகின்றனர்.
இதுவரை மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசியல் தரப்பினரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்காத நிலையில், தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை உலகிற்கு எடுத்துக் கூறும் நோக்கத்திலேயே பொதுவேட்பாளர் களமிறக்கப்படவிருப்பதாக விக்னேஸ்வரன் உள்ளிட்ட அதற்கு ஆதரவு வழங்குவோர் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.
இதனை நடைமுறை ரீதியில் அவர்கள் செயற்படுத்தப் போகின்றனர் என்பது பற்றிய எந்தத் தெளிவுபடுத்தல்களும் முன்வைக்கப்படாமல், ஒரு சில அரசியல் கட்சிகளும், ஒரு சில சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்த பொதுவேட்பாளர் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆகக் குறைந்தது தமிழ் மக்கள் இது விடயத்தில் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனர் என்பதை அறிவதற்கு சிறியதொரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் காய்நகர்த்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்றால் இல்லை. கடந்த காலங்களில் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்துக் கூட்டணியொன்றை அமைக்க எடுத்த முயற்சியின் நீட்சியாகவே இதனைப் பார்க்க முடியும்.
சரி… இவர்கள் கூறுவதைப் போன்று தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும்? உலக நாடுகள் நேரடியாக வந்து தமிழருக்கு எந்தத் தீர்வுகளையும் வழங்காது என்பது ஏற்கனவே நாம் கண்ட உண்மை. இவ்வாறான பின்னணியில் பொதுவேட்பாளரை களமிறக்கி தமிழர்கள் முன்வைக்கப் போகும் செய்திக்கு எவ்வாறு உலக நாடுகளின் ஒத்துழைப்புக் கிடைக்கும். இது வெறும் கண்துடைப்பு மாத்திரமே. மக்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி தொடர்ந்தும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வைத்திருப்பதே அவர்களின் நோக்கமாகும்.
மறுபக்கத்தில், ஜனாதிபதித் தேர்தல் களத்தில் போட்டி அதிகமடைந்துள்ளது. ஆரம்பத்தில் மும்முனைப் போட்டிக்கான வாய்ப்புக்களே இருந்தபோதும், இது தற்பொழுது பலமுனைப் போட்டியாக மாறியுள்ளது.
பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு அப்பால், விஜேயதாச ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அரகல போராட்டக்காரர்களின் வேட்பாளர் என பலரும் போட்டியிடுவதால் வாக்குகள் சிதறுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். அவ்வாறான நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே ஜனாதிபதியாகத் தெரிவாக முடியும்.
பலமுனைப் போட்டி என்பதால் வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலையில் வடக்கு, கிழக்கிலிருந்து பொதுவேட்பாளரைக் களமிறக்கி மேலும் வாக்குகளைச் சிதறடிப்பதால் எந்தப் பயனும் யாருக்கும் கிடைக்கப் போவதில்லை. எனவே, முற்போக்கான முறையில் சிந்தித்து, சகல வேட்பாளர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தி தமிழ் மக்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கு ஆதரவாக இருக்கும் ஒருவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்ததாக அமையும்.
பி.ஹர்ஷன்