இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில், தமிழ் அரசியல் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சிகளும் முனைப்புப் பெற்று வருகின்றன. இதுவரை காலமும் போலன்றி தமக்கான வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில் தமிழர் தரப்பு பிடிவாதமாக இருப்பதுபோலத் தெரிகின்றது. வடக்கு,கிழக்கில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பிலான உடன்பாடு அங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் தேசிய கட்சிகளுக்குமிடையில் அண்மையில் எட்டப்பட்டது. ஆனால் இந்த உடன்பாட்டுக்கு தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் ஆதரவாக இருந்த போதும், அவ்வுடன்பாட்டில் தமிழரசுக் கட்சி கைச்சாத்திடவில்லை.
ஆனாலும் அதற்கான பெயர்கள் பல்வேறு மட்டங்களிலும் பிரேரிக்கப்பட்டு பொது வேட்பாளரின் பெயர் இன்னும் ஒரு வாரத்தில் இறுதி செய்யப்படுமென்று, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இதுவரைகாலமும் பெரும்பான்மை தேசிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து பயன் ஏதும் பெறாததாலேயே அவ்வாறு தமக்கான பொது வேட்பாளரை நிறுத்தப்போவதாக வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர். இலங்கையின் அரசியல்யாப்பில் சிறுபான்மையைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என கூறப்படாத போதும், சிறுபான்மையினத்தவர் ஒருவர் ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டுமானால் பெரும்பான்மையினத்தவர்களின் ஆதரவு நிச்சயம் வேண்டும். ஆனால் தமிழ் தரப்பினர் வேண்டுவது அவ்வாறான ஜனாதிபதிப் பதவியை அல்ல. மாறாக தமது ஒற்றுமை உலகறியப்பட வேண்டும் என அவர்கள் கருதுகின்றனர். இதுதான் அவர்களது தூரநோக்கற்ற சிந்தனையாக இருக்கின்றது. 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமல் பகிஷ்கரித்ததன் மூலம் மற்றைய வேட்பாளரை அமோக வெற்றியடையச் செய்தவர்கள். கடந்த முறை அதாவது 2019இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளை மட்டுமே கொண்டு ஜனாதிபதியாக வந்தவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. சிறுபான்மையினர் தமக்கு வாக்களிக்கவில்லையென்பதை அவர் பதவியேற்பின்போது சுட்டியும் காட்டினார்.
இம்முறை நிலைமைகள் அவ்வாறல்ல. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச. மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவரும் ஏறக்குறைய சம பலத்துடன் மோதுபவர்கள். இன்றுள்ள நிலைமைகளில் சிறுபான்மைக் கட்சியினரின் வாக்குகள் அவர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக அமையும்.
ஜனாதிபதி வேட்பாளர்களில் ஐக்கிய இலங்கைக்குள் சிறுபான்மையினரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கடப்பாட்டினை ரணில் அடிக்கடி வலியுறுத்து வந்திருக்கிறார். அதுமாத்திரமல்ல நாடு பெருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் நிலையிலும், ஐ.எம்.எப் ஒப்பந்தங்களின் பிரகாரம் நாட்டை பொருளாதார ரீதியாக ஸ்திரமடையச் செய்யவும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கான வாக்குகள் இம்முறை சிறுபான்மையினரது வாக்குகளாகவே அமையும். அதன் மூலம் அவர்கள் தங்கள் பேரம் பேசும் சக்தியை மீண்டும் நிலைநிறுத்தலாம் என்பதில் ஐயமில்லை. இந்நிலையில் 2005 ஆம் ஆண்டில் விட்ட தேர்தலை பகிஷ்கரித்தல் என்ற தவறை மீண்டும் விடாமலும் பொதுவேட்பாளரை நிறுத்தாமலும் சாதுர்யமாக சிந்திப்பார்களா தமிழர்கள்?