யெமன் மீது இஸ்ரேல் முதற்தடவையாக கடும் விமானத் தாக்குதல்களை திடீரென நடத்தியுள்ளது. காஸா மீதான யுத்தத்தைத் தொடங்கி ஒன்பது மாதங்களாகியுள்ள சூழலில், இஸ்ரேலில் இருந்து 1800 கிலோ மீற்றர் அப்பால் உள்ள யெமனின் ஹுதைதா துறைமுகத்தின் மீது இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
இத்துறைமுகத்தின் எண்ணெய் சேமிப்பு களஞ்சியங்கள், மின் நிலையம் என்பவற்றை இலக்கு வைத்து கடந்த சனியன்று (20.07.2024) மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலினால் 06 பேர் கொல்லப்பட்டதோடு, 83 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு எண்ணெய்க் களஞ்சியங்களில் இருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தொன்களுக்கும் மேற்பட்ட எண்ணெய் எரிந்து அழிந்துள்ளதோடு, பல பாரந்தூக்கிகளும் அலைத்தடுப்பணைகளும் சேதமடைந்துள்ளன என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனமொன்றின் சிரேஷ்ட நிபுணர் அல் பாஷா குறிப்பிட்டுள்ளார்.
காஸா மீதான யுத்தத்தை நிறுத்தக் கோரி இஸ்ரேலின் தென்பகுதி மீதும் இஸ்ரேலுடன் தொடர்புள்ள கப்பல்கள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் முன்னெடுத்து வரும் ஹுதிக்கள் கடந்த வெள்ளியன்று (19.07.2024) திடீரென இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ்வின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கட்டடமொன்றின் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தினர். அதனால் ஒருவர் கொல்லப்பட்டதோடு, 10 பேர் காயமடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஹுதைதா துறைமுகத்தின் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் யெமன் மீதான விமானத் தாக்குதலும் ஹுதிக்களின் டெல் அவிவ் மீதான ட்ரோன் தாக்குதலும் உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன. அதிலும் இஸ்ரேல் ரடார், அயன்டோம் உள்ளிட்ட அதிநவீன வான் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை கொண்டிருந்தும் ஹுதிக்களின் ட்ரோன் மத்திய டெல் அவிவ் வில் தாக்குதல் நடத்தியமை அதிக பேசுபொருளாகின.
அதேநேரம் வான் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுத்த இஸ்ரேல், யுத்த விமானங்களை ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. அத்தோடு இந்த ட்ரோன் வான் பரப்புக்கள் பிரவேசித்தும் முன்னெச்சரிக்கை சமிக்ைஞ, அயன்டோம், ரடார் என்பன செயற்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான விசாரணைக்கும் இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
சில போரியல் நிபுணர்களின் கருத்தின்படி, அயன்டோம், ரடார் உள்ளிட்ட ஆகாய பாதுகாப்பு கட்டமைப்புக்களில் பதிவாகாத படி தாழப்பறக்கக்கூடிய வகையில் இந்த ட்ரோனை ஹுதிக்கள் கையாண்டிருக்கலாம்.
இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் டானியல் ஹகரி, ‘இத்தாக்குதலுக்கு ஈரானிய தயாரிப்பான சமாட் 3 ட்ரோனின் மேம்படுத்தப்பட்ட வகை பயன்படுத்தப்பட்டுள்ளது’ என்றுள்ளார். சமாட் 3 ட்ரோன் என்பது சுமார் 8 ஆயிரம் மைல் தூரம் 1500 கிலோ கிராம் வெடிபொருட்களை சுமந்தபடி ஐந்து மணித்தியாலயங்கள் பறக்கக்கூடியது எனத் தெரிவிக்கப்படுகிறது.
டெல் அவிவ் மீது ஹுதிக்களின் இந்த ட்ரோன் தாக்குதல் இடம்பெற்ற மறுநாள் சனிக்கிழமை பின்னேரமே எப் 35, எப் 15 உள்ளிட்ட 12 யுத்த விமானங்களைப் பயன்படுத்தி இத்துறைமுகத்தின் மீது சரமாரியான தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டது.
சோவியத் ரஷ்யாவின் ஆதரவுடன் 1961 இல் நிர்மாணிக்கப்பட்ட இத்துறைமுகம் செங்கடல் கரையில் மூலோபாய மையத்தில் அமைந்துள்ளது. யெமனுக்கான மனிதாபிமான உதவிகளதும் வர்த்தகப் பொருட்களதும் பிரதான நுழைவாயிலாக விளங்குகிறது இத்துறைமுகம்.
இத்தாக்குதல்களினால் ஏற்பட்ட தீ 12 மணித்தியாலயங்களுக்கும் சுடர்விட்டெரிந்துள்ளது. அங்குள்ள துறைமுகத்தின் செயற்பாடுகள் இரண்டு நாட்களாக செயலிழந்திருந்தது. மின்நிலையம் தாக்குதலுக்கு இலக்கானதால் அப்பகுதியே இருளில் மூழ்கி இருந்தது.
இதேவேளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இராணுவத் தளபதியும் இராணுவ கட்டளை தளத்தில் இருந்து இத்தாக்குதலை நேரடியாக அவதானித்த அதேநேரம், ‘இத்தாக்குதலின் ஊடாக ஹுதிகளுக்கு தெளிவான செய்தி வழங்கப்பட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் எந்த இடத்திலும் தாக்குவோம்’ என்றுள்ளார் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட்.
இத்தாக்குதலையிட்டு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை சேதப்படுத்தும் தாக்குதல்களைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் துர்கி அல் மல்கி, ‘இத்துறைமுகத்தின் மீதான தாக்குதலில் நாம் சம்பந்தப்படவில்லை’ என்றும் ‘எமது வான்பரப்பைப் பயன்படுத்த எவருக்கும் அனுமதி வழங்க மாட்டோம்’ என்றும் ‘மோதல்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆன போதிலும் ஹுதைதா துறைமுகத்தின் மீதான தாக்குதலைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஹுதிக்கள் மறுநாளான ஞாயிறன்று தென் இஸ்ரேல் மீது பிளாஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடாத்திய போதிலும், அதனை தாக்கி அழித்துவிட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டிருக்கிறது.
காஸா மீதான யுத்தத்தை நிறுத்துமாறு கோரி யெமனின் ஹுதிக்கள், இஸ்ரேலின் தென்பகுதியிலுள்ள ஈழட் துறைமுக நகர் மீது தாக்குதல்களை தொடங்கினர். சில நாட்கள் கடந்த நிலையில், செங்கடல் வழியாக இஸ்ரேல் துறைமுகங்களுக்கு பயணிக்கும் சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடாத்தப்படும் என்ற ஹுதிக்கள், அதே ஒக்டோபர் 19 ஆம் திகதி ‘கலெக்ஸி லீடர்’ என்ற கப்பலை கடத்திச் சென்றதோடு யெமனின் பாப் அல் மண்டெப் நீரிணை மற்றும் செங்கடல் வழியாக இஸ்ரேல் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல்களை ஆரம்பித்தனர். இற்றைவரையும் 100 இற்கும் மேற்பட்ட கப்பல்களை அவர்கள் தாக்கியுள்ளனர்.
ஹுதிக்களின் தாக்குதல்களால் செங்கடல் ஊடான சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதையில் பாதுகாப்பற்ற நிலை உருவானது. அதனால் பெரும்பாலான சரக்குக் கப்பல் நிறுவனங்கள் இப்பாதையைத் தவிர்க்கலாயின. இதன் விளைவாக இஸ்ரேல் துறைமுகங்களுக்கு வருவாய் வீழ்ச்சியடையத் தொடங்கியதோடு, வட ஆபிரிக்க, ஐரோப்பிய சந்தைகளிலும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாயின. அதனால் அமெரிக்கா தலைமையில் செங்கடல் வழியாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கை இவ்வருடம் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கேற்ப, ஜனவரி 13 ஆம் திகதி முதல் ஹுதிக்களின் இராணுவ கட்டமைப்புக்கள் மீது அமெரிக்க-_பிரித்தானிய கூட்டணி விமானத் தாக்குதல்களை ஆரம்பித்தது. இதன் ஊடாக ஹுதிக்கள் பலமிழக்கச் செய்யப்பட்டுள்ளனரென அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் அறிவித்தது.
ஆன போதிலும் ஹுதிக்களின் தாக்குதல்கள் குறைந்ததாக இல்லை. பாப் அல் மண்டெப் நீரிணை ஊடாக பயணித்த கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடாத்தத் தொடங்கிய ஹுதிக்கள் செங்கடல், ஏடன் வளைகுடா, அரபுக்கடல், இந்து சமுத்திரம் எனத் தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளனர். இதன் விளைவாக செங்கடல் வழியான கப்பல் போக்குவரத்து பாதையைப் பெரும்பாலான சரக்குக் கப்பல்கள் தவிர்த்துக் கொண்டுள்ளன.
அதேநேரம் ஈழட் துறைமுக நகர் மீது தாக்குதல்களை நடாத்தி வந்த ஹுதிக்கள், ஈராக் போராளிக்குழுக்களின் ஒருங்கிணைப்புடன் இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தின் மீதும் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். கடந்த ஜுன் பிற்பகுதியில் ஹைபா துறைமுகத்தின் மீது நடத்திய தாக்குதல்களில் 4 கப்பல்கள் சேதமடைந்ததாக துறைமுக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இவ்வாறான சூழலில் காஸாவில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து அதிக எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டிருந்தன. அந்த சமயத்தில் ஹிஸ்புல்லாஹ்வைப் போன்று ஹுதிக்களும் ‘ஹமாஸ் ஏற்றுக்கொள்ளும் யுத்தநிறுத்தத்தை நாங்களும் ஏற்றுக்கொண்டு இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்துவோம்’ என்று அறிவித்தனர்.
ஆனால் பேச்சுவார்த்தை முடிவுற்றும் யுத்தநிறுத்தம் ஏற்படவில்லை. காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் தான் டெல் அவிவ்வின் மத்திய பகுதியில் அமெரிக்க கிளை தூதரக அலுவலகத்திற்கு கிட்டிய தூரத்திலுள்ள கட்டடத்தின் மீது ஹுதிக்கள் ட்ரோன் தாக்குதலை நடத்தினர். அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் ஹுதைதா துறைமுகத்தின் மீது தாக்குலை மேற்கொண்டிருக்கிறது. இது மத்திய கிழக்கில் போர்ப்பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
மர்லின் மரிக்கார்