ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக நேற்று முதல் முறையாக அறிவித்தார்.
அதற்கான கட்டுப் பணத்தை ஏற்கனவே கட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
காலி மாநகர சபை மைதானத்தில் நேற்று நடைபெற்ற “ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்” பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து பேசிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடனான தற்போதைய உடன்பாடுகளை முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்றும், அந்த வரைவுக்கு முரணாக செல்ல முடியுமென எவராவது கூறினால், அவர்கள் நாட்டை ஆபத்தில் தள்ளிவிடும் பொய்யைத்தான் சொல்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை வெல்வதே எனது நோக்கமெனதெரிவித்த ஜனாதிபதி, தான் சவாலிலிருந்து ஒதுங்கியதில்லை என்றும் பேசாமல் என் கடமையைச் செய்தேன் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியும் அவ்வாறே நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வெற்றிக்காக காலியில் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பெருந்திரளானோர் ஒன்று திரண்டிருந்தனர்.
நேற்றைய கூட்டத்தின்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காலி மாவட்ட மக்களின் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை வெற்றிகொள்வதே தனது நோக்கமாகும் என்றும், அரசியல் பேதங்களை விடுத்து நல்லதொரு இலங்கையை உருவாக்க அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர்களான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கலாநிதி ரமேஷ் பத்திரன, மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் சம்பத் அத்துகோரள மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல். எம். அதாவுல்லா, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இஷான் ரஹ்மான்ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.