புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்பு ஓகஸ்ட் 15ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறுமென்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார். வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன் ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் பாதுகாப்பு கட்டுப்பணம் செலுத்துவது கட்டாயமாகும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளருக்கு 50,000 ரூபாவும், ஏனைய வேட்பாளருக்கு 75,000 ரூபாவும் வைப்புத் தொகையாக கட்டுப்பணம் செலுத்துவது கட்டாயமாகும்.
ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட தினமான கடந்த 26ஆம் திகதி முதல் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்வது ஆரம்பிக்கப்பட்டு ஓகஸ்ட் 13 ஆம் திகதி வரை அலுவலக நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை தேர்தல் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்தில் நடைபெறும். கட்டுப்பணம் ஏற்பு ஓகஸ்ட் 14 மதியம் 12.00 மணியுடன் நிறைவடைகிறது.
கட்டுப் பணத்தை ஒப்படைக்கும் போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களைத் தவிர மற்றைய அனைத்து வேட்பாளர்களும் தாங்கள் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்லது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதை பாராளுமன்றச் செயலாளரின் கையொப்பமிடப்பட்ட சான்றிதழின் மூலம் நிரூபிக்க வேண்டியது கட்டாயமாகும்.
சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளைத் தெரிவிக்க ஓகஸ்ட் 15 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளது, ஆட்சேபனைகளை எதிர்தரப்பு வேட்பாளர்கள் அல்லது எதிர்தரப்பு வேட்பாளர்களின் வேட்புமனுவில் கையெழுத்திட்டவர்கள் தெரிவிக்கலாம். அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்துக்கமைய தேர்தல் விதிமுறைகள் கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும், தேர்தல் ஆணைக்குழு பிறப்பித்துள்ள உத்தரவுகள் எதிர்காலத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படுமென்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.