தமிழக மக்களால் ஈழத்து நவீன இலக்கியங்களும்; அறியப்படவேண்டும், போற்றப்படவேண்டும் என்ற தேசியப் பற்றுக் காரணமாக சிற்பி ‘ஈழத்துச் சிறுகதைகள்’ என்ற ஈழத்தின் முதலாவது சிறுகதைத் தொகுதியை 1958இல் வெளிக்கொணர்ந்தார். இந்தத் தொகுப்பு வெளிவந்தபோது ஈழத்து இலக்கிய உலகம் பெருமை கொண்டது. தன்னை ஒருக்கால் சிலிர்த்துக்கொண்டது. இலக்கிய உலகில் ஓர் அற்புதம் நிகழ்ந்து விட்டதைப்போல வியப்படைந்தது எனக் குறிப்பிட்டுள்ளார் செங்கை ஆழியான்.
இலங்கையர்கோன், சம்பந்தன், வைத்திலிங்கம், வ.அ.இராசரத்தினம், கனக செந்திநாதன், வரதர், இராஜ அரியரத்தினம், சகிதேவி தியாகராஜா, சு.இராஜநாயகன், தாழையடி சபாரத்தினம், கே.டானியல், செ.கணேசலிங்கன் ஆகியோரது சிறுகதைகள் இந்த ஈழத்தின் முதலாவது சிறுகதைத் தொகுப்பில்; அடங்கியுள்ளன.
சிற்பி அவர்கள் எழுதிய முதற்சிறுகதை ‘மலர்ந்தகாதல்| 1952இல் சுதந்திரனில் வெளிவந்தது. 1955இல் உதயம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது ‘மறுமணம்’ என்ற சிறுகதை முதற்பரிசினைப் பெற்றது. இருந்தபோதிலும் தான் வெளிக்கொணர்ந்த ஈழத்தின் முதலாவது சிறுகதைத் தொகுப்பில் அவர் தனது சிறுகதை எதனையும் சேர்த்துக்கொள்ளவில்லை என்பது சிற்பியின் இலக்கியப் பண்புக்குச் சிகரமிடுவதாய் அமைந்தது.
1958ஆடி முதல்1966 ஆவணிவரை எட்டு வருடகாலம் இலக்கிய உலகில் சிற்பி அவர்கள் வெளியிட்ட கலைச்செல்வி சஞ்சிகை பவனிவந்தது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் அதிகூடிய புகழ்பூத்த எழுத்தாளர்களைத் தனது கலைச்செல்வி மூலம் உருவாக்கியவர் சிற்பி.
செங்கைஆழியான், செம்பியன்செல்வன், செ.யோகநாதன், யாழ்நங்கை, சா.வே.பஞ்சாட்சரம், பெனடிக்ற்பாலன், சாந்தன், வே.குமாரசாமி, மயிலன், பொ.சண்முகநாதன், மு.பொன்னம்பலம், தி.ஞானசேகரன், மு.கனகராஜன், பா.சத்தியசீலன், மட்டுவிலான், கவிதா, பாமாராஜகோபால், கானமயில்நாதன், து.வைத்திலிங்கம், வி.க.ரட்னசபாபதி, இமையவன், செ.கதிர்காமநாதன், முனியப்பதாசன் ஆகியோர் கலைச்செல்விப் பண்ணையில் வளர்ந்தவர்களே” எனச் சிற்பி பதிவுசெய்துள்ளார்.
1933இல் காரைநகரில் சிவஸ்ரீ சு.சிவசுப்பிரமணிய ஐயர், ஸ்ரீமதி சௌந்தரம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த சிற்பியின் இயற்பெயர் சிவசரவணபவன். இவர் தனது ஆரம்பக் கல்வியை கந்தரோடை தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் பெற்றவர். இலண்டன் இன்ரர் பரீட்சையில் சித்திபெற்றவர். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் கலைமாணி பட்டம்பெற்றவர். பின்னர் யாழ். பல்கலைக்கழகத்தின் முதுமாணி பட்டம் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளில் புலமையுள்ளவர். ஈழத்துச் சஞ்சிகையாளர் வரிசையில் இவரே அதிகூடிய கல்வித்தகைமை கொண்டவர். சிற்பி அவர்களின் மனைவி பெயர் சரஸ்வதி.
திருநெல்வேலி செங்குந்தா கல்லூரியில் ஆசிரியராகவும் உசன் இராமநாதன் மகாவித்தியாலயம், யாழ்.வைத்தீஸ்வர வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகக் கடமையாற்றியவர் சிற்பி.
இவர், சிறுகதை, நாவல், கவிதை கட்டுரை, விமர்சனம், நாடகம், வானொலி நாடகம் ஆகிய துறைகளில் எழுதியவர்.
இவரது சிறுகதைத் தொகுதிகளாக ‘நிலவும் நினைவும்|, ‘சத்திய தரிசனம்’ ‘நினைவுகள் மடிவதில்லை’ ஆகியவை வெளிவந்துள்ளன. ‘உனக்காகக் கண்ணே’ இவர் எழுதிய நாவலாகும்.
2015இல் தனது 82ஆவது வயதில் 09-11-2015 அன்று சிற்பி அமரரானார்.
ஞானம் சஞ்சிகையில் அவர் தொடராக எழுதிய ‘கலைச்செல்விக் காலம்| பின்னர் நூலாக வெளிவந்து அரச தேசிய சாகித்திய விருதினை 2017 இல் பெற்றுக்கொண்டது. அவர் அமரராகிய நிலையில் அவ்விருதை அவரது மனைவி சரஸ்வதிஅம்மா பெற்றுக்கொண்டார்.