Home » இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 570,000 வலி நிவாரணி மாத்திரை

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 570,000 வலி நிவாரணி மாத்திரை

by Damith Pushpika
July 28, 2024 8:15 am 0 comment
  • தமிழகம், இராமநாதபுரத்தில் பறிமுதல்
  • இந்திய ரூபாவில் 1 கோடி 80 இலட்சமென மதிப்பீடு

இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழ்நாட்டில் மானாங்குடி கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் ஒரு கோடி 80 இலட்சம் ரூபா பெறுமதியான 5 இலட்சத்து 70 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இராமநாதபுரம், மானாங்குடி கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த வலி நிவாரண மாத்திரைகள் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (26) பறிமுதல் செய்து, தலைமறைவான சந்தேக நபர் ஒருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இராமேஸ்வரம், மண்டபம் வேதாளை மரைக்காயர் பட்டினம், மானாங்குடி உள்ளிட்ட கடற்கரையிலிருந்து தனுஷ்கோடி கடல் வழியாக கடல் அட்டை, மஞ்சள், இஞ்சி, வலி நிவாரணி மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகின்றன.

கடல் வழியாக நடக்கும் கடத்தல் சம்பவங்களை தடுக்க மத்திய சுங்கத்துறை, கடலோர காவல் படை, கடற்படை மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும் அதையும் மீறி சமீப காலமாக அதிக அளவில் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவுக்கு போதைப்பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்படி சுங்கத்துறையினர் மானாங்குடி வரை உள்ள கடற்கரை பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். இதன்போது இலங்கைக்கு கடத்துவதற்காக மானாங்குடி கடற்கரை பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 பெட்டிகள் கைப்பற்றப்பட்டன. அதை சோதனை செய்த போது அதில் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து பெட்டிகளை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்துக்கு எடுத்து வந்து ஆய்வு செய்தபோது ஒரு பெட்டியில் 57,000 மாத்திரைகள் வீதம் 10 பெட்டியில் 05 லட்சத்து 70 ஆயிரம் மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து வலி மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளை சரக்கு வாகனம் மூலமாக ராமநாதபுரம் சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் எடுத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு வௌளிக்கிழமை இரவு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாகவும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகி உள்ளதால் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மன்னார் குறூப் நிருபர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division