அரச நிதி முகாமைத்துவம், பொருளாதார நிலை மாற்றம் சட்டமூலங்கள் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார செயற்பாட்டுக்கு பாராளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் வழங்கிய அங்கீகாரமென பொருளாதார, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலை மாற்றம் ஆகிய இரு சட்டமூலங்களும் கடந்த 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன. மேற்படி சட்டமூலங்கள் மீதான விவாதம் 25 ஆம் திகதி முழு நாள் விவாதமாக சபையில் முன்னெடுக்கப்பட்டதுடன் விவாதத்தின் முடிவில் திருத்தங்களுடன் சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதற்கான வாக்கெடுப்பை எந்தக் கட்சியும் கோரவில்லை. இதன் மூலம் ஜனாதிபதியின் பொருளாதார முன்னெடுப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு பின்னர் இலங்கை 2001ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பாரிய நிதி நெருக்கடியை சந்தித்தது. அந்த சந்தர்ப்பங்களில் இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சி முறையே எதிர்மறை 1.4 மற்றும் எதிர்மறை 7.8 ஆக வீழ்ச்சி கண்டது.
அந்த இரண்டு நிலைகளிலும் இருந்த நாட்டின் பொருளாதார நிதி ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாடுபட்டார்.
கடந்த வருடம் முதல் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து நாட்டில் பல மாதங்களாக மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முடிவு கட்டி, நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை ஒட்டுமொத்த சமூகமும் அங்கீகரித்திருப்பதை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதையே இது காட்டுவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் 2027ஆம் ஆண்டுவரை வெளிநாட்டு கடன்களை செலுத்தாமல் இருப்பதற்கான ஒப்பந்தங்களை செய்து, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சட்டமூலங்களை முன்வைத்து நாட்டை நேரடி பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் இதன் மூலம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவே விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.