ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வருகின்றது. அரசியல் கட்சிகள் அனைத்தும் உஷாரடைந்து விட்டன. ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குபவர்கள் மாத்திரமன்றி, ஏனைய அனைத்துக் கட்சிகளுமே பரபரப்படைந்திருக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தாத கட்சிகளும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிக கரிசனை காண்பிப்பதைக் காண முடிகின்றது. தென்னிலங்கை பெரும்பான்மையின அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி, சிறுபான்மையின கட்சிகளும் இத்தேர்தல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
இலங்கையின் வரலாற்றைப் பொறுத்தவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச நாடுகளாலும் உன்னிப்பாக நோக்கப்படுகின்றது. இதற்கான காரணம் எமது நாட்டில் இரண்டு வருட காலத்துக்கு முன்னர் நிலவிய பொருளாதார நெருக்கடி ஆகும்.
சுதந்திர இலங்கையின் வரலாற்றை எடுத்துக் கொள்வோமானால், அது போன்றதொரு பொருளாதார வீழ்ச்சியானது முன்னர் ஒருபோதுமே நிலவியதில்லை. முன்னைய ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாலேயே அத்தகைய அவலநிலைமைக்கு எமது நாடு உள்ளானது.
அக்காலத்தில் இலங்கையை ‘திவால்’ ஆகிப்போன நாடு என்று உலகமே கைவிட்டு விட்டது. இலங்கையைக் கைதூக்கி விடுவதற்கு ஒருசில நாடுகள் உதவிகள் புரிந்த போதிலும், அந்த உதவிகள் தற்காலிக நிவாரணமாகவே அமைந்திருந்தன. தினமும் கிடைக்கின்ற வருமானத்தை வைத்துக் கொண்டு எரிபொருள் கப்பலின் வருகையை எதிர்பார்த்திருக்கும் அவலத்தில் நாடு இருந்தது. குடும்ப வருமானம் இழந்து போனதால், அன்றாட உணவுக்கு மக்கள் அல்லல்பட்டனர். எரிபொருள் நிலையங்களில் இரவுபகலாக நீண்ட கியூவரிசையில் காத்துக் கிடந்தனர்.
பொருளாதார நெருக்கடியைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் மக்கள் வீதியில் இறங்கிப் போராடியதன் விளைவாக அன்றைய ஆட்சியே அகன்று போனது.
பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் அதலபாதாளத்தில் வீழ்ந்திருந்த எமது நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்பதற்கு அரசியல் தலைவர்கள் எவருமே முன்வராத நிலையில், சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொண்டவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார்.
அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. இலங்கையின் பொருளாதாரம் உலகமே ஆச்சரியப்படும் வகையில் மீண்டெழுந்திருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆற்றல், அனுபவம், ஆளுமை ஆகியவற்றின் காரணமாகவே இது சாத்தியமாகியது.
எமது நாடு பொருளாதாரத்தில் தொடர்ந்தும் வேகமான முன்னேறி வருகின்றது.
ஆனால் நாட்டைப் பொறுப்பேற்பதற்குத் தயங்கியவர்களும், பொருளாதார ஆலோசனை கூறாதவர்களும் இன்று வீரவசனங்கள் பேசுகின்றனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரத்தை முன்னேற்றப் போவதாக சூளுரைக்கின்றனர்.
எதிரணியினரின் வீரவசனங்களை கவனத்தில் கொண்டு, நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்ய வேண்டியவர்கள் மக்களாவர்.