தமிழ்நாடு மாநில அரசுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் இடையேயான உறவுகள் படிப்படியாக மோசமடைந்து செல்வதையே நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.
ஐந்து நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார். தமிழகத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து அவர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் அண்மைய நாட்களாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் போதைப்பொருள் நடமாட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
அதேவேளை பொலிஸ்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக ஆம்ஸ்ட்ரோங் கொலைச் சம்பவத்தை அடுத்து சென்னையின் பொலிஸ் ஆணையராக இருந்த சந்திப் ராய் ராத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டார். அது மட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கை கவனிக்க டேவிட்சன் தேவசீர்வாதம் ஏ.டி.ஜி.பி ஆகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மாதந்தோறும் அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய உள்துறைக்கு ஆளுநர் ரவி அனுப்புவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் ஆம்ஸ்ட்ரோங் கொலைச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது மட்டுமல்லாமல், கள்ளக்குறிச்சி சட்டவிரோத மதுபானம் ஏற்படுத்திய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக பா.ஜ.கவினரும், அ.தி.மு.கவினரும் ஆளுநரை நேரில் சந்தித்து புகார் கொடுத்தனர். இந்த நிலையில்தான் தமிழக ஆளுநர் ரவி சில தினங்களுக்கு முன்னர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
பா.ஜ.க தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை ஆளுநர் ரவி இதுவரை சந்திக்கவில்லை. இந்த நிலையில் ஐந்து நாள் பயணமாக அவர் டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரையும் ஆளுநர் ரவி சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் ஆளுநர் ரவி நடத்திய சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது.
இந்தச் சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், தமிழகத்தில் நிகழும் கொலைகள், சட்டவிரோத மதுபான மரணம் உள்ளிட்டவை குறித்து ஆளுநர் ரவி, அமித் ஷாவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இது இவ்விதமிருக்க, இந்திய மத்திய அரசு மேற்கொண்ட இரண்டு முடிவுகள் தமிழ்நாட்டிற்கு எதிராக திரும்பி உள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு விஷயங்களில் தமிழ்நாட்டிற்கு எதிரான முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
முதல் கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) மற்றும் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டத்தின் (எம்.ஆர்.டி.எஸ்) ஒருங்கிணைப்பு பின்னடைவை சந்தித்துள்ளது. அதாவது சென்னை மெட்ரோ இயக்கம் திட்டத்தை மத்திய ரயில்வே கிடப்பில் போட்டுள்ளது.
சென்னை மின்சார ரயில் செயற்பாடு நாளுக்குநாள் மோசமாகி வரும் நிலையில் அதை மெட்ரோ செயல்படுத்த திட்டமிட்டிருந்தது. கடந்த பெப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இந்தத் திட்டம், ரயில்வே வாரியத்தின் முறையான ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆனால் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.
இன்னொரு பக்கம் சென்னை மெட்ரோ 2 ஆம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியதாக சென்னை ரோட் ஷோவிற்கு இடையே பிரதமர் மோடி ட்விட் செய்து இருந்தார்.
இந்த நிலையில் மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு இரண்டு வருடமாக பணமே தரவில்லை என்று தி.மு.க தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிதி இல்லாமலே வெறும் மாநில அரசின் நிதியிலேயே மெட்ரோ கட்டப்பட்டு வருகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்காமல் கைவிரித்து வரும் நிலையில், கூடுதல் நிதிகளை பல்வேறு சர்வதேச வங்கிகளிடம் இருந்து தமிழ்நாடு அரசு பெற்று வருகிறது. இவர்களின் உதவியுடன்தான் தமிழ்நாடு அரசு மெட்ரோ சேவை கட்டுமானங்களை மத்திய அரசின் உதவி இல்லாமலே மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில்தான் சென்னை மெட்ரோ 2 ஆம் கட்டப் பணிகளுக்கு இப்போதைக்கு பணம் கொடுக்க முடியாது, நிதியை விடுவிக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் தி.மு.க ராஜ்யசபா எம்.பி வில்சனின் கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலில், “சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கான தமிழ்நாடு அரசின் முன்மொழிவை இன்னும் ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோவின் 118.9 கிமீ கட்டம் -II கட்டுமானப் பணிகள் ஏற்கனவே மாநில நிதி மற்றும் JICA இன் வெளி நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திட்டத்தின் முதல் ரயில் டிசம்பர் 2025 இல் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.சாரங்கன்