இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களின் ஒரு பகுதியை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க அமெரிக்க நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அந்த ஆயுதங்கள் இவ்வாரம் இஸ்ரேலை சென்றடையலாம் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் ‘வோல்ட் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு கூறியுள்ளனர்.
ரபா மீது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தி வந்த நிலையில், அதனையும் பொருட்ப்படுத்தாமல் கடந்த மே 6 ஆம் திகதி இஸ்ரேல் நடவடிக்கையை ஆரம்பித்தது. அதனால் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க தயார்படுத்தப்பட்டிருந்த 500 இறாத்தல் நிறை கொண்ட 1800 குண்டுகளையும், 2000 இறாத்தல் நிறைகொண்ட 1700 குண்டுகளையும் அனுப்புவதை அமெரிக்கா தடுத்து நிறுத்தியிருந்தது.
அந்தச் சமயத்தில் காஸாவில் இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 1.4 மில்லியன் பேர் ரபாவில் தங்கியிருந்தனர். ஒரு சிறிய பரப்புக்குள் பெருந்தொகை மக்கள் தங்கியுள்ளதால் அப்பிரதேசத்தின் மீது இக்குண்டுகள் பாவிக்கப்பட்டால் அதிக சேதங்கள், உயிரிப்புக்கள் ஏற்படும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இக்குண்டுகள் அடங்கிய தொகுதியை இஸ்ரேலுக்கு அனுப்புவதை நிறுத்துவதாக அமெரிக்கா குறிப்பிட்டது.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்து வந்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கடந்த ஜுன் மாத நடுப்பகுதியில் அமெரிக்க நிர்வாகத்தை வெளிப்படையாகவே விமர்சித்தார். அதனால் அமெரிக்க நிர்வாகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் முறுகல் நிலை உருவானது. இம்முறுகலை சீராக்கி மீண்டும் ஆயுதங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் ஜுன் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்து அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்ரிடன், இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட 500 இறாத்தல் நிறை கொண்ட குண்டுகளை இப்போதைக்கு இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க அமெரிக்க நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதோடு, அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம், காஸா மீது தொடராக யுத்தத்தை முன்னெடுத்துவரும் இஸ்ரேல், கடந்த சில தினங்களாக தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த வியாழக்கிழமை வரையான பத்து நாட்களுக்குள் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள யூ.என்.ஆர்.டப்ளியூ. நிறுவனத்தின் 08 பாடசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதனால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும் மேலும் நூற்றுணக்கானோர் காயமடைந்துமுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள அந்நிறுவனத்தின் ஆணையாளர் நாயகம் பிலிப்பே லசாரினி, இந்த யுத்தம் ஆரம்பமானது முதல் காஸாவிலுள்ள 70 சதவீதமான எமது பாடசாலைகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றுள்ளார்.
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள ஐ.நா. நிறுவனங்களின் பாடசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமைக்கு ஜக்கிய நாடுகள் சபை அடங்கலாக, சவுதி அரேபியா, அவுஸ்திரேலியா, எகிப்து, ஜோர்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சி.என்.என். ஊடகவியலாளர் ஒருவர் இத்தாக்குதல்கள் குறித்து பதிவு செய்துள்ள வீடியோ காட்சிகளில் பகுப்பாய்வுகளை மேற்கொண்ட சி.என்.என், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஜி.பி.யூ-39 ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. வெடிக்கும் ஆயுதங்கள் தொடர்பான ஆய்வுச் சேவைகளின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் பற்றிக் சென்பட்டும், அமெரிக்க இராணுவ வெடிகுண்டுகளை அகற்றும் முன்னாள் தொழில்நுட்ப வல்லுநர் ட்ரெவர் பாலும் சி.என்.என். மேற்கொண்ட பகுப்பாய்வை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த ஜி.பி.யூ-39 குண்டு குறித்து வெடிகுண்டுகள் தொடர்பான ஆயுத நிபுணர் கிறிஸ் கோப்-ஸ்மித் குறிப்பிடுகையில், ‘இது ஒரு உயர் துல்லியமான தாக்குதல் வெடிமருந்து, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளைத் தாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்றுள்ளார்.
‘இவ்வாறான வெடிமருந்துகளை பயன்படுத்தும் போது மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் எப்போதும் ஆபத்துகள் ஏற்படும்’ என்று பிரித்தானிய இராணுவ பீரங்கி பிரிவு முன்னாள் அதிகாரியான கோப்-ஸ்மித் கூறியுள்ளார்.
இஸ்ரேல் பயன்படுத்தும் குண்டுகள் குறித்து வெடிகுண்டுகள் தொடர்பான நிபுணர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ள சூழலில், அமெரிக்கா அனுப்பி வைக்கும் 500 இறாத்தல் நிறை கொண்ட ஒரு குண்டு வெடித்தால் 20 மீற்றர் (65 அடி) சுற்று வட்டத்திலுள்ள அனைத்தையும் அல்லது எவரையும் கடுமையாக பாதிக்கும் அல்லது சேதப்படுத்தும், அழிவுகளையும் ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு கொள்கை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வை நடத்தும் பாதுகாப்பு திட்டம் சுட்டிக்காட்டியுள்ளதோடு, தரைமட்டத்தில் இருந்து 1.4 மீற்றர் ஆழம் மற்றும் 4.11 மீற்றர் அகலம் (13.36 அடி) வரையும் பாதிப்புகளை இக்குண்டுகள் ஏற்படுத்தும் என்று கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனீவா சர்வதேச நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் 2,000 இறாத்தல் நிறைகொண்ட குண்டு வெடித்தால் 35 மீற்றர் (115 அடி) சுற்றடளவில் உள்ள அனைத்தையும் எவரையும் அது பாதிக்கும் அல்லது சேதப்படுத்தும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு இக்குண்டுகள் நேரடியாக நிலத்தில் விழுந்தால் பாரிய கிடங்குகளும் கூட உருவாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், காஸா மீதான யுத்தம் ஆரம்பமானது முதல் தொடக்க காலப்பகுதியில் 240 தடவைகள் அமெரிக்காவினால் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பிற்பட்ட காலப்பகுதியில் அது 120 தடவைகளாகக் குறைவடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதேநேரம் பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரியொருவர் ரொய்ட்டருக்கு குறிப்பிடுகையில், கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இவ்வருடம் ஜூன் 28 ஆம் திகதி வரையும் குண்டுவீச்சு விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் சுமார் 14 ஆயிரம் எம்.கே-. 84 குண்டுகள், 227 கிலோ நிறை கொண்ட 6,500 வெடிகுண்டுகள், துல்லியமாகத் தாக்கக்கூடிய 3,000 ஹெல்ஃபயர் ஏவுகணைகள், பதுங்கு குழிகளைத் தாக்கி அழிக்கும் 1000 குண்டுகள், சிறிய அளவிலான 2,600 கலிபர் குண்டுகள் என்பன யுத்த விமானங்கள் மற்றும் பிற ஆயுதங்கள் மூலம் காஸாவில் பயன்படுத்தப்பட்டுள்ளன’ என்றுள்ளார்.
சி.என்.என். தரவுகள் படி, யுத்தம் ஆரம்பித்தது முதல் ஜனவரி வரையும் தினமும் சராசரியாக 15 சரக்கு விமானங்களில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அமெரிக்காவினால் அனுப்பப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் ஹாரெட்ஸ் பத்திரிகை நடத்திய ஆய்வில், காஸா யுத்தம் ஆரம்பமான பின்னர் உலகின் பல பாகங்களிலுமுள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் இருந்து 173 இராணுவ மற்றும் சிவிலியன் சரக்கு விமானங்கள் மூலம்இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கொண்டு வரப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதன்படி கடந்த வருடம் ஒக்டோபரில் 22 விமானங்கள், நவம்பரில் 47 விமானங்கள், டிசம்பரில் 32 விமானங்கள், இவ்வருடம் ஜனவரியில் 20 விமானங்கள், பெப்ரவரியில் 08 விமானங்கள், மார்ச்சில் 11 விமானங்கள், ஏப்ரலில் 17 விமானங்கள், மே மாதம் 7 விமானங்கள் ஜுனில் 9 விமானங்கள் என்றபடி இஸ்ரேலின் விமானப்படைத் தளங்களில் தரையிறங்கியுள்ளன.
அப்படியிருந்தும் இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் 500 இறாத்தல் நிறை கொண்ட குண்டுகளை அனுப்பி வைக்க அமெரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளதோடு, அவற்றினால் தீக்காயங்களும் உடலில் எரிவு அரிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இவ்வாறான ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்தவும் அப்பாவி மக்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற குற்றங்களை கண்டிக்கவும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கையும் விடுத்துள்ளது.
இந்த யுத்தம் காரணமாக காஸாவில் 38ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் 89 ஆயிரம் பேர் காயமடைந்தும், இஸ்ரேலில் 1139 பேர் கொல்லப்பட்டும் 8730 பேர் காயமடைந்தும் மேற்குக் கரையில் 576பேர் கொல்லப்பட்டும் 5300 பேர் காயமடைந்துமுள்ளனர். இக்கொடூர யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதே அமைதி சமாதானத்தை விரும்பும் அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாகவும் வலியுறுத்தலாகவும் உள்ளது.
மர்லின் மரிக்கார்