இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவை இலக்கு வைத்து ஜே.வி.பி மத்திய குழு உறுப்பினரும் தேசிய மக்கள் படையின் தேசிய செயற்குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க விடுத்த மரண அச்சுறுத்தல் காரணமாக ஹட்சன் சமரசிங்கவின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வசந்த சமரசிங்க விடுத்துள்ள கொலைமிரட்டல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றதுடன், அதன் உள்ளடக்கத்தில் ஹட்சன் சமரசிங்கவின் உயிருக்கு பெரும் ஆபத்து உள்ளது. தேர்தலின் மூலம் இந்த கொடுக்கல் வாங்கலை தீர்த்துக்கொள்வதாகவும் நாட்டை விட்டு தப்பிச்செல்ல இடமளிக்கப்போவதில்லையெனவும் ஒளிந்துகொள்வதற்கு இடம் கிடைக்க மாட்டாதென்றும் அவ்வாறு நாட்டை விட்டு தப்பிச்சென்றாலும் அந்த நாடுகளிலும் இருப்பது தமது கட்சியினரே என்றும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் முன் தப்பிக்க முடியாதென்றும் குறிப்பிட்டுள்ள வசந்த சமரசிங்க, உலக நாடுகளிலுள்ள இலங்கையர் தமது திசைகாட்டி கட்சியுடன் கைகோர்த்து நிற்கிறார்கள் என்றும், ஹட்சன் போன்றோர் சந்திரனில் தான் இருக்கவேண்டிவரும் என அச்சுறுத்தும் தொனியில் அவர் தெரிவித்துள்ளார். இந்நாட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த இலத்திரனியல் ஊடக தொடர்பாளர்களில் ஒருவரான ஹட்சன் சமரசிங்க, அனுபவமிக்க ஊடக நிர்வாகி ஆவார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இவர் ஆறாவது முறையாகவும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியைப் பெற்றுள்ளார்.