- 120 பேரின் இதய, சத்திரசிகிச்சைக்காக 75 மில்லியன் ரூபா
கேள்வி: உங்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த முடியுமா?
பதில்: ஆம். எனது பெயர் செந்தில் குமரன். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நான், சிறுவயதிலேயே கனடாவுக்கு புலம்பெயர்ந்து டொரொண்டோவிற்கு அருகிலுள்ள ஓக்வில் நகரத்தில் வாழ்கிறேன். விளம்பர நிறுவனமொன்றில் ஆலோசகராகவும் பங்காளராகவும் இருக்கின்றேன். அதுவே எனது பிரதான தொழில்.
அதேநேரம் ‘மின்னல் மியூசிக்’ என்ற பெயரில் யூரியூப் செனல் ஒன்றை நடத்திவரும் நான், ‘சிங்கர் செந்தில்’ என்ற பெயரில் முகநூல் பக்கத்தையும் கொண்டுள்ளேன். எனது வேட்கை பாடுவதாகும்.
2003இல் முதன் முதலாக ‘மின்னல்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினேன். இவ்வாறான சூழ்நிலையில் 2004 இல் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது. அதனால் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிக்கவென நானும் மனைவியும் இணைந்து ‘நிவாரணம்’ என்ற பெயரில் இசை நிகழச்சிகளை ஆரம்பித்தோம். அதன் ஊடாகக் கிடைக்கப்பெற்ற நிதியுதவிகளைக் கொண்டு ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினோம்.
பின்னர் அதன் தொடர்ச்சியாக நிவாரணம் மற்றும் இசை நிகழ்வுகளின் மூலம் கிடைக்கப்பெறும் நிதியுதவியைக் கொண்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் வீடமைப்புத் திட்டம், அகதிகளுக்கான உணவு, இதய நோய், சிறுநீரகப் பாதிப்பு போன்ற நாட்பட்ட நோய்களுக்கு உள்ளாகியுள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சிகிச்சையளித்தல் என 2005 முதல் 2008 வரை அந்த நிதியைப் பயன்படுத்தினோம்.
ஆனால் யுத்த சூழல் காரணமாக நோயாளர்களை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டதோடு, 2008இல் எமது இப்பணியை இடைநிறுத்தினோம். ஆனால் மக்களின் வேண்டுகோள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் 2016 முதல் இப்பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.
இதற்காக டொரொண்டோவை மையமாகக் கொண்டு இலாப நோக்கற்ற நிதியமொன்றை அமைத்துள்ளேன். ‘செந்தில் குமரன் நிவாரண நிதியம்’ என்ற பெயரிலான இந்நிதியத்தின் ஊடாக இலங்கையில் முன்னெடுக்கப்படும் இதய மற்றும் சிறுநீரக பாதிப்பு நோயாளர்களுக்கு உயிர் காக்கும் சத்திரசிகிச்சை, நடமாடும் வைத்திய சேவை (கிளிநொச்சி), நோயாளர்கள் குடும்பங்களுக்கான வாழ்வாதாரங்கள் மற்றும் வைத்தியசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன்.
கேள்வி: உங்களது இசை நிகழ்ச்சிகளின் நோக்கம் குறித்து கூறுங்கள்?
பதில்: இசையும் நிவாரணமும் எனது இரு கண்கள். நெடுங்காலத்துக்கு முன்னரே கனடா சென்றதால், நானும் எனது துணைவியாரும் நல்ல தொழில்செய்து வசதியோடு வாழ்கிறோம். அதேவேளையில் இறைவன் கொடுத்த பாடல் திறமையினை கொண்டு எம் தாயகத்து மக்களுக்கு, குறிப்பாக நோயாளர்களுக்கு அவர்களது இருதய சத்திர சிகிச்சைக்கான உதவிகளை செய்வதென்று முடிவெடுத்தோம்.
என்னுடைய சிறு வயதில், எனது தாயார் பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் பிள்ளைகளைக் காணும் போது ‘யார் பெற்ற பிள்ளையோ…’ எனக் கருணையோடு குறிப்பிடுவார்.
அப் பின்புலத்தில் தான் எமது சொந்த செலவில் இசைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி, அதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதியை ஒட்டுமொத்தமாக கணக்குடன் முகநூலில் பொது மக்களின் பார்வைக்கு சமர்ப்பித்து, முழுமையாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மருத்துவ செலவுகளுக்காகவும் அவர்களுக்கு சேவை வழங்கும் பிரதேச மட்ட வைத்தியசாலைகளின் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் செலவிடுகின்றேன். எமது இசை நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கப்பெறும் நிதியில் ஒரு சதம் கூட எமது நிர்வாக செலவிற்கோ, தாயகத்தில் பணியாற்றும் எங்கள் அமைப்பாளர்களுக்கோ, நாங்கள் இலங்கை வந்து போகும் செலவுகளுக்கோ பயன்படுத்துவதில்லை.
கேள்வி: நாட்பட்ட நோயாளர்களையும் அவர்களுக்கு சேவை வழங்கும் வைத்தியசாலைகளையும் எந்த அடிப்படையில் தெரிவு செய்து உதவுகிறீர்கள்?
பதில்: யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைதீவு, பதுளை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் பணியாற்றும் இதய சத்திரசிகிச்சை நிபுணர்களான லக்ஷ்மன், குருபரன், அருள்நிதி, ரகுநாதன், அம்பிகா, கார்த்திக், சரித் போன்றோர் அவசரமாக நோயின் தாக்கம் கூடிய நிலையில் உள்ள இதய சத்திர சிகிச்சை செய்ய வேண்டியவர்களின் விபரங்களை எமக்கு அனுப்பி வைப்பார்கள். அதில் அவர்களது பொருளாதார நிலைமை, சிகிச்சையின் அவசரத்தன்மை என்பவற்றைக் அவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். அதற்கேற்ப எனது அமைப்பாளர் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களது நிதி நிலைமையினை ஆராய்ந்த பின்னர் அவர்களை கொழும்பிலுள்ள முன்னணி தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அநேகமானோருக்கு சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் நாமே பொறுப்பேற்று இலவசமாக சிகிச்சை அளித்து குணப்படுத்தி அனுப்பி வைக்கின்றோம். இதற்காக தங்கள் நேரத்தினை இலவசமாக தந்துதவும் லங்கா மருத்துவமனையின் இதய சத்திர சிகிச்சை நிபுணர்களான டொக்டர்களான காந்திஜி, லுஷாந்த உள்ளிட்ட மருத்துவ குழுவினருக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுளோம். இத்திட்டத்தின் கீழ் ஒரு இதய சத்திர சிகிச்சைக்காக 07-18 இலட்சம் ரூபாய் வரை செலவிடுகின்றோம். அந்த வகையில் இற்றை வரையும் 120 இதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த உயிர் காக்கும் இதய சத்திர சிகிச்சைகளுக்கு மட்டும் இது வரை 75 மில்லியன் (7.5 கோடி) ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இதய சிகிச்சைப் பிரிவின் மருத்துவ உபகரண வசதிகளை மேம்படுத்தவும், சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கும் வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மாஞ்சோலை, மல்லாவி, சாவகச்சேரி ஆகிய வைத்தியசாலைகளில் இரத்த சுத்திகரிப்பு உபகரண வசதிகளையும் மேம்படுத்தியுள்ளோம்.
கேள்வி: நீங்கள் இற்றை வரையும் முன்னெடுத்துள்ள வைத்தியசாலை உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடுகள் குறித்து குறிப்பிடுவதாயின்?
பதில்: 2022 இல் மல்லாவி வைத்தியசாலைக்கு ஒரு கோடியே 28 இலட்சம் ரூபா (48 ஆயிரம் கனேடிய டொலர்கள்) செலவில் சிறுநீரக, இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் 2 யுனிட்டுகளையும், ஆர்.ஒ. இயந்திரம் ஒன்றையும் ஜெர்மனி நாட்டிலிருந்து தருவித்து வழங்கியுள்ளோம். இதனுடாக சிறுநீரக பாதிப்புக்கான இரத்த சுத்திகரிப்பு நிலையமொன்று இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
‘சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளான பலர் இரத்த சுத்திகரிப்புக்காக மாதா மாதம் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு உரிய வேளையில் செல்வதில்லை அதற்கு அவர்களது பொருளாதாரம் பெரும் இடைஞ்சலாக விளங்குகிறது. இதன் விளைவாக பலர் உயிரிழந்துமுள்ளனர்’ என்று யாழ்ப்பாண வைத்தியசாலையின் சிறுநீரக மருத்துவ நிபுணர்களான பவன்தன் மற்றும் பிரம்மா, ஆகியோர் முறைப்பட்டனர். இதனைக் கருத்தில் கொண்டு தான் இந்நிலையம் மல்லாவியில் அமைக்கப்பட்டது. இதேவேளை முல்லைத்தீவு மாஞ்சோலை மருத்துவமனையின் இரத்த சுத்திகரிப்பு நிலையத்தை 35 இலட்சத்து 83 ஆயிரம் ரூபா (14 ஆயிரம் கனேடிய டொலர்கள்) செலவில் புனரமைத்து வழங்கினோம்.
அத்தோடு முல்லைத்தீவு இதய நோயாளர்களின் நலன்கருதி மாஞ்சோலை வைத்தியசாலையில் அவசர இதய சிகிச்சைப் (ஹார்ட் கெயார் நிலையம்) பிரிவொன்றையும் 20 இலட்சம் ரூபா (9 ஆயிரம் கனேடிய டொலர்கள்) செலவில் அமைத்து திறந்து வைத்துள்ளோம். வடபகுதியிலுள்ள மேலும் சில வைத்தியசாலைகளுக்கு சிறுநீரக நோயாளர்களின் நலன்கருதி இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கேள்வி: நீங்கள் முன்னெடுக்கும் திட்டத்தின் கீழ் எத்தகைய வயது மட்டத்தினருக்கு இதய சத்திர சிகிச்சை இலவசமாகப் பெற்றுக் கொடுக்கப்படுகிறது?
பதில்: வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் வளர்ந்தவர்கள் வரை இதய சத்திர சிகிச்சைகளுக்காக உதவிகளைப் பெறுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் வளர்ந்தவர்களுக்கு உதவி செய்வதன் நோக்கம் யாதெனில், அந்த வளர்ந்தவர் தாயோ அல்லது தந்தையோ யாராக இருப்பினும் அவர்களுக்கு ஏதாவது
நேர்ந்துவிட்டால் அதனால் அவர்களது பிள்ளைகள் அநாதைகளாகிவிடக் கூடாது என்பதுதான்.
கேள்வி: நீங்கள் இம்முறை இலங்கைக்கு வருகை தந்ததன் நோக்கம்?
பதில்: தற்போது இலங்கையில் இதயம் தொடர்பிலான சிகிச்சைகளில், குறிப்பாக பதினெட்டு வயதிலிருந்து ஐம்பது வரையிலான இதய நோயாளிகளுக்கு வால்வு மாற்று சிகிச்சைகளே அதிகளவில் இடம்பெறுகின்றன.
கடந்த ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இதய சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சிவசங்கர், இதய நோய் நிபுணர்களான லக்ஷ்மன் மற்றும் குருபரன் ஆகியோர் எம்மிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்கள். Philips நிறுவனத்தின் Echo Machine with TOE Probes என்ற இயந்திரத்தை அமெரிக்காவில் இருந்து தருவித்து தந்தால் வளர்ந்தவர்களுக்கான இதய சத்திர சிகிச்சைகளை யாழ்ப்பாண வைத்தியசாலையிலேயே மேற்கொள்ளலாம் என்பதே அக்கோரிக்கையாகும்.
அதற்கேற்ப இக்கோரிக்கையை கனடா பொது மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பொன்மனசெம்மல் எம்.ஜி.ஆரின் பாடல்கள் நிறைந்த எம்.ஜி.ஆர் 107 என்ற மாபெரும் இசைநிகழ்வினை நடத்தினேன். அதன் ஊடாகவும், நன்கொடைகள் மூலமும் 212,000 கனேடிய டொலர்களை திரட்டினேன்.
அதன் பின் 4 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான இந்த இயந்திரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் கலந்துரையாடி இரண்டே கால் கோடி ரூபா செலவில் தருவித்து மக்களின் உயிர் காக்கும் சிகிச்சைகளுக்காக வழங்கியுள்ளோம். கனேடிய டொலரில் இது 95 ஆயிரம் டொலர்கள் (ரூபாய் 21,688,956) பெறுமதியானதாகும். இந்த இயந்திரத்தைக் கையளிக்கவே இம்முறை இங்கு வருகை தந்தேன். இக்கையளிப்பு வைபவத்தில் கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரான எரிக் வால்ஷ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
அதே தினம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கும் சிறுநீரகப் பிரிவிற்கு 30 ஆயிரம் கனேடிய டொலர் (ரூ. 6,613,900) பெறுமதியான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களை கையளித்தோம். அத்தோடு 15 ஆயிரம் கனேடிய டொலர் (ரூ. 3,306,950) பெறுமதியான மேலுமொரு இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தையும் மல்லாவி வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளோம். இம்முறை விஜயத்தின் போது மொத்தமாக 140 ஆயிரம் கனேடிய டொலர்கள் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வடக்கிலுள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவை பல உயிர்களை காப்பாற்ற உதவப் போகின்றது.
கேள்வி: நாட்பட்ட சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கும் வேறு பல நோய்களுக்கு ஆளான சிறு பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கும் நீங்கள் வாழ்வாதார உதவியும் அளிப்பதாகக் கூறப்படுகிறதே?
பதில்: ஆம். கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு தொடக்கத்தில் உதவிகளை வழங்கினோம். அதேநேரம் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இரத்த சுத்திகரிப்பு டயலிஸிஸ் சிகிச்சை பெறுவது அவசியம். ஆனால் இப்பாதிப்புக்கு உள்ளானவர்கள் பொருளாதார ரீதியில் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பர். தீர்க்க முடியாத நோய்களுக்கு ஆளான சிறு பிள்ளைகள் உள்ள குடும்பங்களும் பெரும் நிதி நெருக்கடிகளை எதிர் நோக்குகின்றன. அதனால் அவர்களது குடும்ப, பொருளாதார சிரமங்களைக் குறைக்கவும் அவர்களது நலன்களைக் கருத்தில் கொண்டும், இருநூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதார உதவிகளை செய்து கொடுத்துள்ளோம். குறிப்பாக அவர்களுக்கு தெரிந்த சுயதொழில்களில் ஈடுபட உதவியளித்துள்ளோம். இதன்படி தையல் இயந்திரம், கால்நடை வளர்ப்புக்கென ஆடு, மாடு போன்றவற்றைப் பெற்றுக் கொடுத்து அவர்கள் சொந்த காலில் நிற்க உதவியுள்ளோம்.
மேலும் பொருளாதார சிரமங்களுக்கு முகம் கொடுத்திருப்பவர்களுக்கு பணமாக உதவி வழங்கினால் அவர்கள் தொடர்ந்தும் பண உதவியை எதிர்பார்த்தவர்களாக இருப்பார்கள். ஏனையவர்களிடமும் கையேந்தும் நிலைக்கு அவர்கள் உள்ளாவார்கள். அதனைத் தவிர்க்கவே இவ்வாறான வாழ்வாதார உதவிகளை வழங்கி ஊக்குவிக்கின்றோம்.
கேள்வி: கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் இயங்கும் உங்கள் நடமாடும் சேவை குறித்து கூற முடியுமா?
பதில்: நிச்சயமாக. கடந்த ஏழரை வருடங்களாக கிளிநொச்சியில் நடமாடும் மருத்துவ சேவையை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்காக, அவர்களது வீடுகளுக்குச் சென்று முதுகுப் புண்ணுக்கு சிகிச்சை அளிக்கவென இச்சேவை முன்னெடுக்கப்படுகிறது. இதற்கென ஒரு முச்சக்கர வண்டியை வாங்கிக் கொடுத்து சாரதியையும் நிமித்து ஒரு தகுதியான தாதியையும் நியமித்துள்ளோம். இச்சேவையை வட மாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்தே முன்னெடுக்கின்றேன்
கேள்வி: கனடாவிலுள்ள தமிழர்களின் ஆதரவு உங்களுக்கு எந்தளவில் உள்ளது?
பதில்: பல நடமாடும் மனித கடவுள்களை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவன் நான். இவ்வளவு உயிர்களை காப்பதற்கும், பல மருத்துவ திட்டங்களுக்கும், வாழ்வாதார உதவிகளுக்கும் காரணமானவர்கள் அவர்களே. தானம் வழங்குபவர்களுக்கும், பெறுபவர்களுக்கு நான் ஒரு பாலமாக இருந்து செயல்படுகின்றேன். குறிப்பாக டொரோண்டோவிலுள்ள கனடா கந்தசாமி ஆலயத்தில் எங்களை நிதி சேகரிக்க சிறப்பு அனுமதி வழங்கி ஊக்கப்படுத்துவார்கள். இங்கு நின்று முக்கிய பண்டிகை தினங்களில் பொது மக்களிடம் நிதி திரட்டி இதுவரை 7 இதய நோயாளிகளின் உயிர் காக்கும் சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். கணக்குகளை காட்டி வெளிப்படையாக செய்யும் நிறுவனங்களுக்கு இங்கு நல்ல ஆதரவு மக்களிடையே உள்ளது.
கேள்வி: உங்களது எதிர்காலத் திட்டங்கள் அடங்கலாக நீங்கள் நிறைவாகக் கூற விரும்புவதென்ன?
பதில்: இலங்கையில் இதய நோய்களுக்கு உள்ளாகியுள்ள சிறுவர்களுக்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை அளிப்பதற்கு சிறுவர் சத்திர சிகிச்சை நிபுணர்கள் இல்லாதுள்ளனர்.
அதனால் அவ்வாறானவர்களுக்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தான் தற்போது சத்திரசிகிச்சை பெற்றுக்கொடுக்கப்படுகிறது. எங்களுக்கு அந்த தனியார் மருத்துவமனை விஷேட கட்டணம் வழங்கினாலும் எண்ணற்ற உயிர்களை காக்க வேண்டுமென்பதனால் பல கோடிகள் தேவைப்படுகிறது.
அதனால் முதற்கட்டமாக இதய நோய்க்கு உள்ளாகியுள்ள சுமார் 20 பிள்ளைகளை இந்தியாவுக்கு அழைத்து சென்று சத்திரசிகிச்சை செய்வதற்கான திட்டத்தை வகுத்திருக்கின்றேன். இது தொடர்பில் இந்தியாவிலுள்ள ஒரு பெரும் நன்கொடை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளேன். அவர்கள் இச்சிகிச்சையை இலவசமாக மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள். அதனால் இவர்களுக்கு கடவுச்சீட்டு, விமான டிக்கட் என்பவற்றை எடுத்து அழைத்து சென்றால் இச்சிகிச்சையை இலவசமாகப் பெற்றுக்கொடுக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன்.
அதேநேரம் மக்கள் மத்தியில் மனிதத்தை கட்டியெழுப்ப வேண்டும். கருணையை மேம்படுத்த வேண்டும். அதன் ஊடாக மனிதாபிமானமும் கருணையும் மேலோங்கும். அதுவே இன்றைய தேவையும் ஆகும். அந்த அடிப்படையில் மனிதாபிமானத்தையும் கருணையையும் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நான் முன்னெடுத்துள்ளேன்.
குறிப்பாக எங்களது திருமண மற்றும் குடும்பத்தாரின் பிறந்த நாட்களில் எங்கள் செலவில் தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை மேற்கொள்கிறேன். நாயும் கடவுளின் படைப்பே. அந்தப் படைப்புக்கும் நாம் கருணை காட்ட வேண்டும். உயிரினங்கள் மீது கருணை காட்டும் பண்பு வளரும் போது மனிதர்கள் மீது கருணை காட்டக்கூடிய மனப்பான்மையும் ஏற்படும். ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது உதவக்கூடிய பண்பும் உருவாகும்.
பேட்டி கண்டவர்: மர்லின் மரிக்கார்