பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் 1922ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பொது நம்பிக்கையாளர் சட்டத்தின் மூலம் உருவான கூட்டிணைந்த நிறுவனமாகும். அந்தச் சட்டத்தின் மூலம், பொது நம்பிக்கையாளர் என்ற பதவி சட்டரீதியான பதவியாகியது. பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் என்பது இந்த நாட்டிலுள்ள முன்னணி சுயாதீன நிறுவனங்களுள் ஒன்றாகும். நாட்டில் எத்தனை அரசு அதிகாரிகள் இருந்தாலும், பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் என்பது நாட்டிலுள்ள முதன்மையான இணைக்கப்படாத அதிகாரியாகும். நாம் பதவி நிலையின் பிரகாரம் பார்த்தால், நாட்டின் ஏழாவது குடிமகன் என்பவர் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் பதவியை வகிக்கும் அதிகாரியாகும்.
இந்த திணைக்களத்தின் மூலம் ஒருவரது கடைசி உயிலில் வழங்கப்பட்டுள்ள அனைத்துப் பொறுப்புகளும் அந்தந்த உரிமையாளர்களிடம் வழங்கப்படுகின்றது. நாட்டில் அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமே இந்த பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களமாகும். இந்த நிறுவனம் பொதுவான நம்பிக்கைப் பொறுப்பாளர் நிறுவனமாகச் செயற்பட்டாலும், இந்நிறுவனம் சமூக நலனுக்காக பல்வேறு செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.
கல்வி நலன் உள்ளிட்ட பல்வேறு பொதுநலப் பணிகளுக்காக சிறப்பு அர்ப்பணிப்புடன் செயற்படும் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் பிரதான பதவிக்காக நியமிக்கப்படுவது ஒரு நீதிபதி அல்லது சட்டத் துறையில் உயர் மட்ட அதிகாரி ஒருவராகும். பல்வேறு வகையிலான உயர் பதவிகள் இருந்தாலும், நாட்டிலேயே இருக்கும் விசேட நபர் பொது நம்பிக்கைப் பொறுப்பாளராகும். நாட்டு மக்கள் அவர் மீது பூரண நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை எந்தளவுக்கானது என்றால், பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் தொடர்பில் இருக்கும் நம்பிக்கை சமுதாயத்தில் வேறு யார் தொடர்பிலும் இல்லை என்பதாகும். தற்போது, கிஹான் பிலப்பிட்டிய, பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் பொது நம்பிக்கைப் பொறுப்பாளராகச் செயற்பட்டு வருகின்றார்.
நீண்ட காலமாக நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், முறைகேடான வகையில் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கட்டுப்படுத்தி பொது நம்பிக்கைப் பொறுப்பாளருக்குச் சொந்தமான சொத்துக்களை உரியவாறு தனது கட்டுப்பாட்டிற்குள் மாற்றிக் கொண்டு செயற்படுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் நீண்ட காலமாக நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் அனைத்தும் இந்தளவுக்கு வெற்றியடைந்ததற்கு காரணமாக அமைந்திருப்பது பொது நம்பிக்கைப் பொறுப்பாளர், பிரதி நம்பிக்கைப் பொறுப்பாளர் மற்றும் அதன் ஏனைய அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் குழுவாகச் செயற்படுவதேயாகும்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் கிஹான் பிலப்பிட்டிய
“எமது ஒரே நோக்கமாக அமைந்திருப்பது பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தை உருவாக்குவதற்கு காரணமாக இருந்த நோக்கத்தை உரியவாறு முன்னெடுத்துச் செல்வதாகும். அதற்கு முக்கியமான கொள்கைகள் இருக்கின்றன. அந்தக் கொள்கைகளை உரியவாறு நடைமுறைப்படுத்திச் செல்வதே எமது பிரதான நோக்காக அமைந்துள்ளது. நான் இங்கு பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் என்ற சுயாதீன பதவியை வகிக்கின்றேன். இந்தப் பதவி உண்மையிலேயே நாட்டிலேயே இருக்கும் சுயாதீனமான மற்றும் இணைக்கப்படாத பதவியாகும். என் மீது மாத்திரமல்ல, முழு திணைக்களத்தின் மீதும் அந்த நம்பிக்கை உள்ளது. இந்தத் திணைக்களத்தை ஒரு குழுவாக முன்னெடுத்துச் செல்வதே எங்கள் குறிக்கோள். பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் அமைந்துள்ள கட்டடத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது. இது டி. பி. ஜயதிலகவுக்குச் சொந்தமான வீடாகும்.
அந்த நோக்கத்திற்காக நீங்கள் இந்த திணைக்களத்தை வழிநடத்தும் முறைகள் உள்ளதா? என நாம் பொது நம்பிக்கைப் பொறுப்பாளரிடம் கேட்டோம்.
“இந்தத் திணைக்களம் இந்தச் செயற்பாடுகளுக்காகத் தனியாக அன்றி ஒரு குழுவாகவே செயற்படுகின்றது.
இதற்காக எம்மோடு பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் பணியாளர்களைப் போன்று மற்றொரு தரப்பும் ஒத்துழைப்புக்களை வழங்குகின்றது. முன்னாள் நீதிபதியான எம். இஸட். எம். அம்ஜாட் எனது சட்ட ஆலோசகராகச் செயற்பட்டு வருகின்றார். மேஜர் மாதவ அபேசுந்தர பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்துடன் சுயாதீனமாகவே இணைந்து கொண்டு பெரும் பணிகளைச் செய்து வருகின்றார்”
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்களிடையே பரந்த புரிதல் உள்ளதா? என நாம் பொது நம்பிக்கைப் பொறுப்பாளரிடம் வினவினோம்.
“அனைத்து இலங்கையர்களும் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தையும் அதன் செயற்பாடுகளையும் பொதுவாக ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். அதனால்தான் அவர்களுக்குரிய பெரும் நிதி மற்றும் பாரம்பரிய மதிப்புள்ள சொத்துக்களை எங்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கின்றார்கள். இந்தத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு சொத்தை மிகவும் நம்பகமான முறையில் தமது மரணத்தின் பின்னரும் கூட பாதுகாப்பார்கள் என மக்கள் நம்புகிறார்கள். உண்மையில், இதை மிக முக்கியமான விடயமாகக் குறிப்பிடலாம்”
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு புரிந்துணர்வு உள்ளதா? என பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் கிஹான் பிலப்பிட்டியவிடம் கேட்டோம். அதற்கு அவர் பின்வரும் பதிலை அளித்தார்.
“நாம் முன்னாள் நீதிபதியான எம். இஸட். எம். அம்ஜாதுடன் வடக்கிற்கு விஜயம் செய்தோம். அதன்போது அங்குள்ள மக்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்ள எம்மால் முடிந்தது. இப்போது மீண்டும் அந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்யுமாறு எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. உண்மையில், வடக்கில் உள்ள சாதாரண மக்களுக்கு மாத்திரமல்ல, அரச அதிகாரிகளுக்கும் கூட பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் செயற்பாடுகள் பற்றிய புரிதல் இல்லை. இந்த நிலையை மாற்றியமைக்க முடியும் என்பதில் எமக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எங்களிடம் உள்ள சொத்துக்களில் கிடைக்கும் பணத்தை முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை சமூக நலனுக்காக தேவைப்படும் விடயங்களுக்குச் செலவு செய்வதற்கு எமது திணைக்களத்தினால் முடிந்திருக்கின்றது”
உதித குணவர்தன தமிழில் - எம். எஸ். முஸப்பிர்