மக்களிடமிருந்து வரி அறவிடுவதென்பது உலகுக்குப் புதுமையானதல்ல. உலக நாடுகளின் அரசாங்கங்கள் சாதாரண மக்களிடமிருந்து மாத்திரமன்றி, வர்த்தகர்களிடமிருந்தும் வரிகளை அறவிடுகின்றன.
உலக நாடுகளில் ஜனநாயக ஆட்சிமுறைமை தோற்றம் பெறுவதற்கு முன்பாகவே வரி அறவிடும் நடைமுறையானது அமுலில் இருந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன. பண்டைய மன்னராட்சிக் காலத்தின் போது விவசாயிகள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களிடமிருந்தும் அரசனால் வரி அறவிடப்பட்டு வந்துள்ளது. அதாவது மக்கள் தாங்கள் பெறுகின்ற வருமானத்தின் சிறியளவான ஒரு பகுதியை அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டுமென்பது உலக நியதியாகும்.
மன்னராட்சி யுகம் படிப்படியாக முடிவுக்கு வந்து, ஜனநாயக ஆட்சிமுறைமை தோற்றம் பெற்ற போதிலும், வரி நடைமுறையானது இன்னுமே தொடர்கின்றது. அதற்கான காரணமும் இல்லாமலில்லை.
மக்கள்நலத் திட்டங்களை குறைவின்றி முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு ஒரு அரசாங்கத்துக்கு உள்ளது. முதியோர், நலிவடைந்த மக்கள், வறியோர் போன்றோருக்கான நலன்திட்டங்கள், இலவசக் கல்வி, இலவச சுகாதாரம், மக்களுக்கான அடிப்படைச் சேவைகள் போன்ற பல்வேறு திட்டங்களுக்காக அரசாங்கம் பெருமளவு நிதியைச் செலவிட வேண்டியிருக்கின்றது.
இ.போ.ச பஸ் சேவை, ரயில் சேவை உட்ப பலவிதமான துறைகள் நஷ்டத்தில் இயங்குகின்ற போதிலும், பொதுமக்களின் நலன் கருதி அச்சேவைகளை அரசாங்கம் குறைவின்றி மேற்கொண்டு வருகின்றது. இந்த நஷ்டத்தை ஈடு செய்வதற்காக அரச நிதியிலிருந்தே பணம் செலவாகின்றது.
நாட்டு மக்களுக்கான இலவச சேவைகளை குறைவின்றி செயற்படுத்துவதற்குத் தேவையான நிதிக்கு அரசாங்கம் எங்கே போவது? நிதியை ஒதுக்குவதென்பது வெறுமனே பணநோட்டுகளை அச்சிடுவதல்லவே! பல்வேறு வழிகளிலும் வரிகளைச் சேகரித்துக் கொண்டே மக்களுக்கான சேவைகளை அரசாங்கம் தொடர வேண்டியிருக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வரிகள் குறைக்கப்பட்டதே, அன்றைய பொருளாதார வீழ்ச்சிக்குப் பிரதான காரணமென்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
நிலைமை இவ்வாறிருக்கையில், இன்றைய அரசாங்கம் மக்களிடமிருந்து வரியை அறவிடுவதாக அரசுக்கு எதிரான சக்திகள் குற்றம் சாட்டி வருகின்றன. மக்களிடமிருந்து வரிகளை அறிவிடாமல் நாட்டின் நிர்வாகத்தை எவ்வாறு நடத்துவதென்ற ஆலோசனைகள் எதனையும் எதிரணிகள் முன்வைக்கவில்லை. மாறாக, வரி அறவிடக் கூடாதென்றே கோஷம் எழுப்புகின்றன.
இலவச மருத்துவம், இலவசக் கல்வி, வறுமை ஒழிப்புத் திட்டங்கள், விசேட தேவையுடையவர்களுக்கான உதவித் திட்டங்கள், மக்களுக்கான அத்தியாவசிய சேவைகள் போன்றவற்றை முன்னெடுப்பதற்கான நிதியை எங்கு போய்த் திரட்டுவதென் ஆலோசனையை எதிரணியினர் முன்வைக்கவில்லை.
அரசாங்கத்தைக் குறை கூற வேண்டுமென்ற குறிக்கோள் ஒன்றையே எதிரணியினர் கொள்கையாகக் கொண்டுள்ளனர். அதற்காகவே வரி என்ற விடயத்தை கோஷமிட்டு வருகின்றனர். அதல் பாதாளத்தில் வீழ்ந்துள்ள நாட்டை மீட்டெடுத்துள்ள இன்றைய அரசாங்கத்தின் திறமையை அவர்கள் பாராட்டாமல் விட்டாலும் பரவாயில்லை. தவறான கருத்துகளை மக்கள் மத்தியில் விதைப்பதை எதிரணியினர் நிறுத்திக் கொள்வது அவசியம்.