ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான இரு விடயங்கள் இவ்வாரம் ஊடகங்களில் பேசுபொருளாகியிருந்தன. ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதை இடைநிறுத்துமாறு கோரி வர்த்தகர் ஒருவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை வழக்குக் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தைத் தீர்மானிப்பது தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரவைக்குத் தாக்கல் செய்திருந்த யோசனை குறித்த இரண்டு விடயங்களுமே ஊடகங்களின் அதிக கவனத்தை ஈர்த்திருந்தன.
பாணந்துறையைச் சேர்ந்த சமிந்திர டி. லெனாவா எனும் வர்த்தகர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அரசியலமைப்பின் 30 (2) ஆவது பிரிவு 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் மூலம் திருத்தப்பட்டதாகக் கருதப்படவில்லையெனக் கூறியே அவர் இந்த நிவாரணத்தைக் கோரியிருந்தார்.
ஆறு வருடங்களாக இருந்த ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாகக் குறைக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அரசியலமைப்புக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தமே இவ்வாறு சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டதும், இவ்விடயம் எதிர்பார்த்தது போல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு ‘அவல்பொரி’ போன்று மாறிவிட்டது.
ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடும் நோக்கில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும், இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார விடுத்த கோரிக்கைக்கும் இந்த மனுவுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாகப் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யத் தொடங்கின.
இருந்தபோதும் இது பற்றி ஜனாதிபதி தரப்பிலிருந்து தெளிவான பதில் வழங்கப்பட்டிருந்தது. ‘லெனாவா தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளிடமோ இவ்வாறு மனுவொன்றைத் தாக்கல் செய்வது பற்றிக் கலந்துரையாடவில்லை. ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன். 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்துவது தொடர்பில் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றேன்’ என ஜனாதிபதி அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் உயர்நீதிமன்றத்தை நாடிய வர்த்தகர் யார் என்பது பற்றியும் அவருடைய அரசியல் பின்புலம் பற்றியும் தேடத் தொடங்கினர்.
2020 பொதுத்தேர்தலின் போது குறித்த வர்த்தகர் அரசியல் கட்சியொன்றின் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தார்.
2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் ஆறு வருடமா அல்லது ஐந்து வருடமா என்பது தொடர்பில் உச்சநீதிமன்றத்திடம் கருத்துக் கேட்டிருந்தார்.
அப்போது 19 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் சூழல் காணப்பட்டிருந்தது. அவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டாலும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில், ஆறு வருட காலத்திற்கு வாக்காளர்களால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக சிறிசேன வாதிட்டார்.
அப்போது சட்டமா அதிபர் என்ற வகையில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலை வகித்திருந்தார்.
அப்போதைய பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், ஈவா வனசுந்தர, புவனேகு அலுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ மற்றும் கே.டி.சித்ரசிறி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்ததுடன், அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைய மைத்திரிபாலவின் பதவிக் காலம் ஐந்து வருடங்கள் என முடிவு செய்யப்பட்டிருந்தது.
2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் காலியின் முன்னாள் மேயர் மெத்சிறி சில்வாவும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானியை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார். அந்த வழக்கிலும் உயர்நீதிமன்றம் ஏகமனதாக குறித்த மனுவைத் தள்ளுபடி செய்திருந்தது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக்காலத்தைப் பூர்த்திசெய்ய முன்னர் பதவி விலகியதால் அவரின் பதவிக்காலத்தில் எஞ்சிய காலத்துக்கே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எனவே, ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என சட்ட வல்லுனர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலம் தொடர்பான இந்த வழக்கு விசாரணை கடந்த திங்கட்கிழமை பிரதம நீதியரசர் தலைமையிலான நீதியரசர்கள் குழு முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள்தான் என்பதை அரசாங்கத்தின் சார்பில் சட்டமா அதிபரும் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார். இந்த வழக்குத் தொடர்பில் முன்வைக்கப்பட்ட வாதப்பிரதிவாதங்களை செவிமடுத்த நீதிமன்றம் குறித்த மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்த நீதிமன்றத் தீர்மானத்தைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. அதேநேரம், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல்யாப்பில் நிலவும் தெளிவின்மையை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி அரசியல் யாப்பில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆறு ஆண்டுகளுக்கு மேல்’ என்ற சொற்றொடருக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் என்ற சொற்றொடரை இணைக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்திருந்தார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதித் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகத் தொடங்கியுள்ளன. இதனால் சில அரசியல் கட்சிகள் மத்தியில் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பொதுஜன பெரமுன கட்சிக்குள் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மாற்றுக்கருத்துக்கள் எழுந்துள்ளன. இதனால் அரசியல் களம் பரபரப்பாகி வருகின்றது.
பி.ஹர்ஷன்