ஜனவரி 10 ஆம் திகதியை மலையக தொழிற்சங்க தியாகிகள் தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்த அரசாங்கம் உரிய கவனம் செலுத்துமென அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்
தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பி. வேலுகுமார் தனது தனி நபர் பிரேரணையை சபையில் சமர்ப்பித்த பின்னர் அதற்கு பதிலளித்துப் பேசும்போதே அமைச்சர் சுசில் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் மலையக தொழிற்சங்க தியாகிகள் தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டுமென்ற தனி நபர் பிரேரணையை முன்வைத்து சபையில் உரையாற்றிய வேலுகுமார் எம் பி,
வரலாற்றில் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ள சமூகமாக மலையக பெந்தோட்டத் தொழிலாளர்கள் காணப்படுவதாலும், மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஜனநாயக வழியில் போராடியே தமது உரிமைகளை வென்றெடுத்தனர் என்பதாலும், அத்தகைய ஜனநாயக உரிமைப் போராட்டங்களில் உயிர்நீத்த தொழிற்சங்க தியாகிகளைப் பொதுவானதொரு நாளில் நினைவுகூர வேண்டுமென்பது இலங்கை வாழ் இந்திய வம்சாவழி மலையக மக்களின் நெடுநாள் கோரிக்கையாக காணப்படுகிறது.
1939 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை சம்பள உயர்வு கோரி இடம்பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் முதலாவது தொழிற்சங்கப் போராட்டத்தின் போது வெள்ளையரின் துப்பாக்கிச் சூட்டில் “முல்லோயா கோவிந்தன்” என்ற தொழிலாளர் உயிர்நீத்துள்ளதாலும், இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அறவழிப் போராட்டத்தில் உயிர்நீத்த முதலாவது தொழிலாளியையும் மற்றும் அதன்பின் இடம்பெற்ற பலதொழிற்சங்கப் போராட்டங்களில் மலையகப் பெருந்தோட்ட மக்களின் உரிமைக்காகவும் நலனுக்காகவும் போராடி உயிர்நீத்த ஏனையோரையும் நினைவுகூரும் வகையில், முதலாவது மலையகத் தொழிற்சங்கத் தியாகி உயிர்நீத்த தினமாகிய ஜனவரி 10 ஆம் திகதியை மலையகத் தொழிற்சங்கத் தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென பிரேரிக்கின்றது என்றார். மேற்படி பிரேரணையை வழிமொழிந்து வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி , மனோ கணேசன் எம்.பி. உள்ளிட்டபலர் சபையில் உரையாற்றினர். இப் பிரேரணை தொடர்பில் பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்