பாடசாலை வாகனங்கள், முச்சக்கரவண்டிகள், அலுவலகப் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட அனைத்துப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டு கட்டணங்கள் செப்டம்பர் மாதம் முதல் நிர்ணயிக்கப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்தார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அது விரைவில் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் சுட்டிக்காட்டிய அவர், அதன் பின்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அனுமதியின் பின்னர் நடைமுறைப் படுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் திருத்தச் சட்டத்தின் பிரகாரம், எதிர்காலத்தில் படகுச் சேவைகளும் (Ferry Service) ஒழுங்குபடுத்தப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்படுவதற்காக உள்வாங்கப்படுமெனவும் பயணிகளுக்கான வசதிகளை வழங்கும் நோக்கத்துக்காக அமைச்சருக்குத் தேவைப்படும் பட்சத்தில் எந்தவொரு பயணிகள் போக்குவரத்தையும் சட்டத்தின்படி ஒழுங்குமுறைக்கு உட்படுத்த முடியுமென்றும் அவர் கூறினார்.
பெற்றோருக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டுப்பாடின்றி வசூலிக்கப்படும் பாடசாலை வேன் கட்டணங்களும், அதிகப்படியான முச்சக்கரவண்டிக் கட்டணங்களும், அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள் (அலுவலக பஸ் மற்றும் வேன்கள்) மற்றும் வாடகை வாகனங்களும் (Rent/ Hire Vehicle) இச்சட்டத்தின் கீழ் சிறப்பு ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை. இதன் கீழ் கட்டணங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு பரிந்துரைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.