உலகளாவிய அரசியல் வலுவான போட்டிக் களத்தை திறந்துள்ளது. புரட்சியாளன் லெனின் குறிப்பிட்டது போல் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நிலவும் போட்டியே முதலாம் இரண்டாம் உலக போர்களுக்கான அடிப்படை எனக் குறிப்பிட்டார். ஆனால் அதன் பின்னர் உலகம் அடைந்த மாற்றங்களினால் ஏகாதிபத்தியம் தனக்குள் உள்ள முரண்பாடுகளை சமரசம் செய்து கொண்டு தமக்குள் மோதல்களைத் தவிர்த்திருந்தது என்ற வாதம் நிலவியது. இருபதாம் நூற்றாண்டு பிற்பகுதி முழுவதும் அத்தகைய நியதிக்குள்ளேயே உலக ஏகாதிபத்தியம் நகர்ந்ததாக பிரதாப் பட்நாயக் எனும் இந்தியப் பொருளியல் பேராசிரியர் குறிப்பிடுகின்றார். அதற்காக ஏகாதிபத்திய சக்திகளிடம் முரண்பாடுகள் இல்லை என்று அர்த்தம் கொள்ள முடியாது எனவும் அவர் விபரிக்கின்றார். ஆனால் மீளவும் ஏகாதிபத்தியங்கள் மோதலுக்கான களங்களை உருவாக்க முயல்வதாகவே உலகப் போக்கு தெரிகிறது. அதனாலேயே மூன்றாம் உலகப் போர் உருவாகும் என்ற விவாதப் பொருள் அனேக ஆய்வாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. இக்கட்டுரையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்யப் பயணம் மேற்கு வல்லரசுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள நிலையை தேடுவதாக உள்ளது.
10.07.2024 அன்று ரஷ்யாவுக்கு அரசமுறைப் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். இந்திய- – ரஷ்ய உச்சி மகாநாட்டில் கலந்து கொள்ளும் இரு தலைவர்களும் முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்களை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக இரு நாட்டுக்கும் இடையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் உரையாடப்பட்டதுடன் ஒன்பதுக்கும் மேற்பட்ட உடன்பாடுகளும் எட்டப்பட்டன. இந்தியாவுக்கான ரஷ்யாவின் பெற்றோலிய இறக்குமதி தொடர்பில் அதிக கவனம் கொண்ட இந்தியப் பிரதமர் அத்தகைய வர்த்தக நடவடிக்கைக்கான ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். இரு நாட்டுக்குமான நீண்ட நட்புறவின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டுக் காட்டிய மோடி இரு நாட்டுக்குமான நட்புறவை தொடர்ந்து ஒன்றிணைந்து முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் உலகளாவிய ரீதியில் அமைதிக்கும் உறுதியான தன்மைக்காகவும் செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதே நேரம் ரஷ்யாவின் உயரிய விருதான செயிண்ட அப்போஸ்ஸல் விருதினை நரேந்திர மோடிக்கு வழங்கி ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியப் பிரமரை கௌரவித்தார்.
எல்லாவற்றையும் கடந்து உக்ரைன்- ரஷ்ய மோதலை முதன்மைப்படுத்திய இந்தியப் பிரதமர், இந்தப் போரில் அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்படுவது வேதனை அளிக்கிறது என்று புட்டினிடம் தெரிவித்தார். போர்க்களத்தில் அமைதிக்கான எந்த தீர்வும் கிடையாது. பேச்சுவார்த்தையால் மட்டுமே அது சாத்தியம். அமைதியைக் கொண்டுவர இந்தியா ஒத்துழைக்கும் என்றார் மோடி. இதனை ஏற்றுக் கொண்ட புட்டின் அமைதிப் பேச்சுக்களில் உக்ரைன் நிலைப்பாட்டையும் ரஷ்யா ஏமாற்றப்பட்டதையும் வெளிப்படுத்தினார். ஹங்கேரி முன்னெடுத்த அமைதிப் பேச்சுக்களையும் உக்ரைனே தட்டிக்கழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்குலகத்தின் ஆயுதங்களை நம்பி உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி போரை முதன்மைப்படுத்துவதாக தெரிகிறது.
இதேநேரம் ரஷ்யாவுடனான இந்திய உறவு உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர உதவும் என வெள்ளைமாளிகை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ரகசிய விஜயத்தை அதிகம் எதிர்த்த அமெரிக்கா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா அழுத்தம் கொடுக்கும் என தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் மேக்லியோட் குறிப்பிடுகையில், இந்தியாவும் ரஷ்சியாவும் சிறப்பான கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன.போருக்கு எதிராக ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா இத்தகைய சிறப்புக் கூட்டாண்மையைப் பயன்படுத்த விரும்புகிறது என்றார்.
75 ஆவது நேட்டோ உச்சிமாநாடு வோசிங்டனில் (11.07.2024) நடைபெற்ற போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அடுத்துவரும் மாதங்களில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு கூடுதல் வான்பாதுகாப்பு அமைப்புக்கள் உள்ளடங்கலாக ஏராளமான ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது அமெரிக்கா வான்பாதுகாப்பு இடைமறிப்பு ஆயுதங்களை வழங்கும் போது உக்ரைன் முன்னோக்கிச் செல்வது உறுதி செய்யப்படும். இந்தப் போரில் ரஷ்யா தோல்வியடையும் உலகப் பாதுகாப்பின் அரணாக நேட்டோ உள்ளது நேட்டோ உடைந்துவிடும் என்று புட்டின் கருதினார். ஆனால் நேட்டோ வரலாற்றில் இருந்ததைவிட பலமடைந்துள்ளது என்றார்.
இங்கு உரையாடப்பட வேண்டிய விடயங்கள் பலவுள்ளன. அவற்றை விரிவாக நோக்குதல் அவசியமானது.
ஓன்று, நேட்டோவுக்கு தலைமை தாங்கும் அமெரிக்கா உட்பட மேற்குலகம் உக்ரைன் போரை விரும்புகிறதா அல்லது சமாதானத்தை உருவாக்க முனைகிறதா? என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. அடிப்படையில் இந்தியாவை பயன்படுத்தி சமாதானத்தை அடைவதென்று உரைக்கும் அமெரிக்க ஆட்சியாளர்கள் உக்ரைன் ஜனாதிபதியை அழைத்து நேட்டோ அரங்கில் ஆயுதங்களை வழங்குவதும் பொருளாதார உதவிகளுக்கு உத்தரவாதம் கொடுப்பதும் எதற்காக என்பது முக்கியமானது.
இது ஒரே நேரத்தில் போரையும் சமாதானத்தையும் நேட்டோ நகர்த்துகிறதா அல்லது போருக்கான வாய்ப்புக்களை தூண்டுகிறதா என்பது முக்கியமானது. நேட்டோவுக்கு போர் அவசியமானது. ரஷ்ய ஏகாதிபத்தியத்தை நேரடியாக எதிர் கொள்ளாது உக்ரைன் மூலம் நகர்த்துகிறது. அமெரிக்க பெரும் ஏகாதிபத்தியத்திற்குள் ரஷ்யா உள்ளடங்க மறுதலித்ததன் விளைவே உக்ரைன்-ரஷ்யப் போர். இந்தப் போரின் பலியிடல் உக்ரைன் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவின் ஏகாதிபத்தியமும் ரஷ்ய ஏகாதிபத்தியமும் பாதுகாக்கப்படுகிறது.
இரண்டு, மேற்குலகம் போன்று இந்தியாவும் காஸாவில் நிகழ்வதை கவனத்தில் கொள்ளாது ரஷ்யாவின் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குகிறது. ஏகாதிபத்தியங்களின் இயல்பும் கட்டளைகளும் அவ்வாறானவையாகவே இருக்கும். உக்ரைனில் கொல்லப்படும் சிறுவர்கள் வேறு காஸாவில் கொல்லப்படும் சிறுவர்கள் வேறானவர்களா என்ற கேள்விதான் மேல்எழுகிறது. மேற்குலகம் போல் இஸ்லாமியர் மீது இந்திய ஆட்சியாளர்களுக்கு வெறுப்பிருக்கலாம். அல்லது இஸ்ரேலுக்கு ஆத்திரம் வரும் என்று மோடி கருதலாம். ஆனால் அடிப்படையில் உலக நியதிகளும் சட்டங்களும் சர்வதேச விதிகளும் அனைவருக்கும் பொதுவானவையே. அதனை அமுல்படுத்தும் ஏகாதிபத்தியங்களும் அதன் ஆட்சியாளர்களுமே பாரபட்சத்தை உருவாக்குகிறார்கள். சர்வதேச விதிகளை பற்றிய விவாதத்தைவிட அதனை கையாளும் ஏகாதிபத்தியங்களின் அணுகுமுறையே ஆபத்தானதாக அமைந்துள்ளது. இதனால் உக்ரைனை நியாயப்படுத்த மேற்கொள்ளும் அணுகுமுறைக்கும் காஸாவை நியாயப்படுத்தும் செயலுக்கும் ஒரே தன்மை இல்லாதுள்ளது. இது மேற்குலகத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டதே அன்றி குழந்தைகளதும் சிறுவர்களதும் மனிதர்களதும் இருப்புக்கான வடிவமல்ல. பலக்கோட்பாட்டின் நியமமே உலகளாவிய இருப்பின் நியதியாகிறது.
மூன்று, இந்தியாவும்; ரஷ்யாவும் நீண்ட நட்பு நாடுகள் என்பதற்கு அப்பால் சமகாலத்தில் எழுந்துள்ள புதிய பொருளாதார திசைகாட்டிகளாக விளங்குகின்றன. அதனை சகித்துக் கொள்ள முடியாத மேற்குலகம் இருநாட்டுக்குமான உறவை பலவீனப்படுத்த முயலுவதையே கண்டு கொள்ள முடிகிறது. ரஷ்யா, சீனா, இந்திய கூட்டின் பலம் வலுவடையும் போது பொருளாதாரத்தின் இருப்பு மேற்கைவிட்டு கிழக்கு நோக்கி நகர்ந்துவிடும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. அதனை உடைப்பதற்கே இந்திய பிரதமரது ரஷ்ய விஜயத்தை எதிர்த்த மேற்குலகம் திடீரென பயன்படுத்துவது பற்றி உரையாட முனைகிறது. இவை அனைத்துமே ஏகாதிபத்தியங்களின் எச்சங்களே. மேற்கு ஏகாதிபத்தியமும் கிழக்கு ஏகாதிபத்தியமும் தமக்குள் போட்டியை மட்டுமல்ல முரண்பாட்டையும் கூர்மைப்படுத்திக் கொண்டு நகர்கின்றன. இவற்றுக்கிடையே போர் மூளாத வரையுமே உலகத்தின் சமாதானம் பற்றிய உரையாடல் நிகழும். அது சமாதானத்திற்கானதல்ல. அது போருக்கான முனைப்புக்களே. ஏகாதிபத்தியங்கள் மோதுவதே அடுத்த உலக போராகும்.
நான்கு, இந்திய- ரஷ்ய பொருளாதார உறவு பலமானது மட்டுமல்ல இராணுவ உறவும் வலுவானதாக உள்ளது. அவை எல்லாவற்றையும் கடந்து புவிசார் அரசியல்-பொருளாதாத்தின் வலிமை இரு நாடுகளது கூட்டாண்மையை கட்டமைத்துள்ளது.
அதனால் அத்தகைய கூட்டாண்மை காலம் காலமாக வலுவானதாக உள்ளது. அதனை மேற்குலகத்தால் இலகுவில் தகர்க்க முடியாது. அது மட்டுமல்லாது இந்திய அரசியல் தத்துவார்த்த ரீதியில் உலக நாடுகளை கையாளும் கலையைக் கொண்டுள்ளது. அதாவது கௌதம புத்தர் முதல் மகாத்மா காந்தி வரையும் அத்தகைய தத்துவார்த்த அரசியலையே கட்டிவளர்த்துள்ளது. அதற்குள்ளாலேயே இந்திய வெளியுறவும் அதன் உத்திகளும் காணப்படுகிறது. அது ஒரே நேரத்தில் ரஷ்யாவையும் அமெரிக்காவையும் கையாளும் திறன் கொண்டது.
எனவே இந்தியப் பிரதமரது ரஷ்யப் பயணம் அதிக மாற்றங்களை உலகளாவிய அரசியலில் தந்துள்ளது. உலகம் ஒரு பலமான ஏகாதிபத்திய போட்டிக்குள் நகர்கிறது. இது வெறும் வர்த்தகப் போட்டியாக அமைந்தால் அமைதியடையும். அது ஒரு இராணுவ போட்டியாக மாறுமாக இருந்தால் மீளவும் ஒரு போரை உலகம் சந்திக்க வேண்டிய நிலை தவிர்க்கவியலாததாக அமையும்.