இந்த யுத்தத்தினால் 365 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட காஸாவிலுள்ள 23 இலட்சம் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். இற்றை வரையும் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்களாவர். அதேநேரம் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த யுத்தத்தினால் காயமடைந்துள்ளனர்.
இப்போரினால் காஸாவே சாம்பல் மேடாகக் காட்சியளிக்கிறது. மக்களின் இடப்பெயர்வு அன்றாட நிகழ்வாகியுள்ளது. அவர்கள் அடிப்படை வசதிகளற்ற கூடாரங்களிலும் முகாம்களிலும் தங்கியுள்ளனர்.
போரை ஆரம்பித்த பின்னர் காஸாவுக்குள் உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகளை இஸ்ரேல் விதித்துள்ளது. மனிதாபிமான உதவிகள் செல்லக்கூடிய ரபா, அபு சலம் உள்ளிட்ட காஸாவுக்கான எல்லா நுழைவாயில்களும் மூடப்பட்டும், இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியுமுள்ளன.
அதனால் உணவு, தண்ணீர் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள், மருந்துப் பொருட்கள் அனைத்துக்குமே காஸாவில் பற்றாக்குறை நிலவுகின்றது. பசியும் பட்டினியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போஷாக்கின்மை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இவ்வாறான சூழலில் ஐ.நா. சபையின் பசியைக் கண்காணிக்கும் கட்டமைப்பின் (United Nation’s hunger monitoring system) ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு விபரிப்பு திட்டம் (Integrated Food Security Phase Classification – IPC) இவ்வார முற்பகுதியில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கை உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
அதனால் ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை போதியளவில் அனுப்பி வைக்க துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளன. தவறும் பட்சத்தில் காஸாவில் பசியாலும் பட்டினியாலும் மக்கள் உயிரிழப்பதை தவிர்க்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள மனிதாபிமான சர்வதேச தொண்டர் நிறுவனங்கள், தீவிர போஷாக்கின்மைக்கு உள்ளாகியுள்ள சிறுவர்கள் ஏற்கனவே உயிரிழக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளன.
இப்போர் ஆரம்பிக்கப்பட முன்னர் நாளொன்றுக்கு 500 – 600 ட்ரக் மனிதாபிமான உதவிகள் காஸாவுக்குள் சென்றுள்ளன. ஆனால் தற்போதைய பட்டினி நிலையைப் போக்குவதற்கு தினமும் 1000 – 1500 ட்ரக் மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கப்பட வேண்டிய தேவை நிலவுகிறது என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
காஸா மீது தொடராக யுத்தத்தை முன்னெடுக்கும் இஸ்ரேல் யுத்தத்தை ஆரம்பித்த இரண்டு நாட்களில் உணவு, மின்சாரம், தண்ணீர், மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் காஸாவுக்கு செல்வதை இடைநிறுத்தியது. காஸா மக்கள் எகிப்துக்குள் வருவதைத் தவிர்க்கும் வகையில் ரபா எல்லையும் மூடப்பட்டது.
ஆனாலும் ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் கோரிக்கைகள் மற்றும் அழுத்தங்களின் பின்புலத்தில் அத்தியாவசியப் பொருட்களை காஸாவின் கான்யூனுஸ் பகுதியில் விநியோகிக்க இஸ்ரேல் அனுமதித்தது. இருப்பினும் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் காஸாவுக்கு செல்வதற்கு இறுக்கமான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் நடைமுறைப்படுத்தியது.
அதனால் ஐ.நாவின் மனிதாபிமான தொண்டர் நிறுவனங்கள் கடந்த வருடம் நவம்பராகும் போதே காஸாவில், பட்டினியும் போஷாக்கின்மையும் தீவிரமடையக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டன. இந்த சூழலில் ஐ.நா. பொதுச்சபை மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தி ஒக்டோபர் 27 ஆம் திகதியும் டிசம்பர் 13 ஆம் திகதியும் பிரேரணைகளை நிறைவேற்றியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலும் இவ்வாறான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. ஆன போதிலும் அவை முழு அளவில் நடைமுறைக்கு வரவில்லை.
அதனால் காஸா மக்களின் அவலநிலையைக் கருத்தில் கொண்ட ஜோர்தான், நவம்பரின் தொடக்கம் முதல் வடக்கு காஸா பகுதியில் ஆகாய மார்க்கமாக அத்தியாவசியப் பொருட்களை போடத் தொடங்கியது. அந்நடவடிக்கையில் அமெரிக்கா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் பின்னர் இணைந்து கொண்டன.
ஆனால் இவ்வாறு போடப்பட்ட உணவுப் பொதிகள் சில சிலிவியன்கள் மீது விழுந்து அவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரிருவர் கடலில் வீழ்ந்த பொதிகளை எடுக்கச் சென்று கடலில் மூழ்கியும் இறந்துள்ளனர்.
ஆனால் இப்போர் ஆரம்பமானது முதல் காஸாவுக்கு போதியளவு மனிதாபிமான உதவிகளை அனுப்பிவைக்குமாறும், சிவிலியன்கள் யுத்தத்தினால் பாதிக்கப்படுவதைக் குறைக்குமாறும் இஸ்ரேலுக்கு ஆதரவு, ஒத்துழைப்பு அளித்துவரும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
ஆனால் அமெரிக்காவினதோ, ஐ.நாவினதோ, சர்வதேச தொண்டு நிறுவனங்களினதோ கோரிக்கைகளை இஸ்ரேல் பெரிதாக கருத்தில் கொண்டதாக இல்லை. அதனால் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை கடல் மார்க்கமாக அனுப்பி வைக்கவென அமெரிக்கா மத்திய தரைக்கடலில் தற்காலிக நீர்த்தடுப்பணையை பாரிய செலவில் அமைத்தது. ஆனால் அந்த நீர்த்தடுப்பணை இரு வாரங்களில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டது.
இவை இவ்வாறிருக்க, காஸாவுக்குள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்து சென்ற ஐ.நா. வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச்சென்ற ஐ.நா. ட்ரக் வண்டியும் தாக்கப்பட்டது. மனிதாபிமான உதவிப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக காஸா நகரில் காத்திருந்தவர்கள் மீது பெப்ரவரி 29 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 118 பேர் கொல்லப்பட்டனர். 750 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
அதனால் யுத்தத்திற்கு மத்தியில் மனிதாபிமான உதவிகளை காஸாவுக்குள் கொண்டு செல்வது பெரும் சவாலாகியுள்ளது.
அங்கு குழந்தை உணவு மற்றும் போஷாக்கான உணவு உள்ளிட்ட அனைத்து உணவு வகைகளுக்கும் மருந்துப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் பசியைப் போக்க இலைகளை உணவாகக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போஷாக்கின்மைக்கு உள்ளான குழந்தைகள் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவும் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் இற்றை வரையும் 34 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிழந்துள்ளதோடு எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கடும் போஷாக்கின்மைக்கு உள்ளாகியுள்ளதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
அதனால் காஸா மக்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளும் எவ்வித தடங்கல்களும் இன்றி கிடைக்கப்பெற தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு காஸா மக்களும் உலக மக்களும் இஸ்ரேலைக் கோரி வருகின்றனர்.
காஸா மக்கள் மனிதாபிமான உதவிகளிலேயே முழுமையாகத் தங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடி முகாமைத்துவ ஆணையாளர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில் மே 27 முதல் ஜூன் 4 வரை காஸாவில் பசியைக் கண்காணிப்பதற்கான ஐ.நா. கட்டமைப்பு நடாத்திய ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாட்டு பகுப்பாய்வின் சமீபத்திய கண்டுபிடிப்புகள், உணவு பாதுகாப்பு நிலை குறித்த விஷேட அறிக்கையை ஐ.நா. வெளியிட்டிருக்கிறது. அவ்வறிக்கையில் காஸாவில் 04 இலட்சத்து 95 ஆயிரம் பேர், அதாவது 22 சதவீத்தினர் கடும் பட்டினிக்கு உள்ளாகியுள்ளதாகவும் எதிர்வரும் செப்டெம்பராகும்போது 2.15 மில்லியன் பேர் அல்லது 96 சதவீதத்தினர் கடும் உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகம்கொடுப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு மக்கள் இடம்பெயர்ந்துள்ள பகுதிகளில் போதிய நீர் வசதியின்மை, மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார சேவை என்பன தொற்றுநோய்கள் தலைதூக்கக்கூடிய அபாயத்தை அதிகரித்துள்ளன. போஷாக்கு குறைபாடு, சுகாதார நிலைமைகளிலும் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட வழிவகுக்கும் அச்சுறுத்தல் நிலவுகிறது. காஸாவிலுள்ள குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வீட்டில் சாப்பிடுவதற்கு உணவு இல்லை என்றும், 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரவும் பகலும் சாப்பிடாமல் இருக்கின்றனர் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான சூழலில், ஐ.நா. வுக்கான அமெரிக்க தூதுவர் தோமஸ் கிறீன் பீல்ட், பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றும் போது ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையின்படி காஸாவில் மனிதாபிமான தேவைகளால் பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் காஸாவுக்கான மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும். அந்த உதவிகள் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். ஏனெனில் காஸா மக்களில் பெரும்பாலானவர்கள் பசியின் பேரழிவு நிலைமையை எதிர்கொண்டிருப்பதை இவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது’ என்றுள்ளார்.
இதேவேளை ‘ஒக்ஸ்பாம்’ என்ற தொண்டர் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், ‘அனைத்துத் தரப்பினரும் நிரந்தரப் போர்நிறுத்தத்திற்கு உடன்படுவதற்கான அழுத்தத்தை உலகத் தலைவர்கள் அதிகரிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் சுயாதீனப் புலனாய்வாளர்கள், காஸாவில் பசியும் பட்டினியும் ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அதனால் காஸாவுக்குள் இடையூறுகள், தடங்கல்கள் இன்றி மனிதாபிமான உதவிகளை அவசர அவசரமாக அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தப்படுகின்றது. இருந்தும் ஐ.நாவின் இவ்வறிக்கை வெளிவந்த பின்னரும் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. யுத்தநிறுத்தத்திற்கான சமிக்ஞைகளும் வெளிப்படவில்லை. மக்கள் முகம்கொடுக்கும் அவலங்கள் உள்ளத்தை வாட்டுகின்றன.
மர்லின் மரிக்கார்