இந்திய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் செங்கோலை அகற்றிவிட்டு, அங்கு அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முன்னைய ஆட்சியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு, அதன் திறப்புவிழாவில் ஆதீனங்களுடன் சென்று சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி.
அப்போதே செங்கோல் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன. செங்கோல் என்பது மன்னராட்சியின் அடையாளம் என்று விமர்சித்த எதிர்க்கட்சிகள், ‘மன்னராட்சி முடிந்து, ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியிலிருந்து நாடு சுதந்திரமடைந்து, அதன் பிறகு அரசியல் சாசனப்படி ஜனநாயக ஆட்சி அமைந்துவிட்டது. இப்போது எதற்கு மன்னராட்சியின் செங்கோல்?’ என்று குரலெழுப்பின.
உடனே, ‘இந்திய கலாசாரத்தையும், தமிழ்க் கலாசாரத்தையும் எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன’ என்று பா.ஜ.கவினர் குற்றம்சாட்டினர். இப்போது, 18 ஆவது மக்களவை தெரிவு செய்யப்பட்டு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்து, நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் மன்னராட்சியின் அடையாளமான செங்கோல் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் வைக்கப்பட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.சௌத்ரி கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதமும் அவர் எழுதினார்.
மேலும், “அரசியலமைப்புச் சட்டம் என்பது ஜனநாயகத்தின் சின்னம். பா.ஜ.கவோ, மன்னராட்சியின் சின்னமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியிருக்கிறது. மன்னராட்சி முடிந்து, ஆங்கிலேயர் ஆட்சி வந்து, அதன் பிறகு நாடு சுதந்திரமடைந்துவிட்டது. இப்போது ஏன் மன்னராட்சியின் அடையாளமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியிருக்கிறார்கள்? நாடாளுமன்றத்தில் இருக்கும் செங்கோலை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை வைக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று ஆர்.கே.சௌத்ரி வலியுறுத்திக் கூறினார்.
அவரைத் தொடர்ந்து, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் எம்.பியான மிசா பாரதி உட்பட பலரும் நாடாளுமன்றத்திலிருந்து செங்கோல் அகற்றப்பட வேண்டும் என்ற குரலை ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
“செங்கோலை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும். அங்கு வரும் மக்கள் அதைப் பார்வையிடுவார்கள்” என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
செங்கோல் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையைக் கண்டித்து பா.ஜ.க தலைவர்களும், அதன் கூட்டணிக் கட்சியினரும் பேசி வருகிறார்கள். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘நாடாளுமன்றத்திலிருந்து செங்கோல் அகற்றப்பட வேண்டுமென்று சமாஜ்வாடி எம்.பி பேசியிருப்பது, ‘இந்தியா’ கூட்டணியின் நிலைப்பாடா என்று தி.மு.க விளக்க வேண்டும்” என்றார்.
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், ‘செங்கோல் என்பது நேர்மைக்கும், வெளிப்படைத்தன்மைக்கும், நடுநிலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது’ என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், ‘செங்கோல் மன்னராட்சியின் அடையாளம். ஜனநாயக நாட்டில் அதற்கு இடம் அளிக்க வேண்டியது இல்லை. நாடாளுமன்றத்தில் செங்கோலை அப்புறப்படுத்த வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை’ என்று தி.மு.கவின் முன்னாள் எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருக்கிறார்.
எனினும் செங்கோலை நாடாளுமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாடி கட்சி எம்.பியின் கோரிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்து விட்டார்.
புதிய நாடாளுமன்றத்தில் கட்டுமானங்கள் பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும் நிலையில், அவற்றில் ஒன்றாகவே தமிழகத்தின் செங்கோல் நிறுவப்படுகிறது என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆதீனங்கள் தெரிவித்தனர்.
மேலும், ‘நீதி, நேர்மை, சமத்துவம் ஆகியவற்றை உணர்த்துவதாகவும் செங்கோல் இருக்கிறது. நடுநிலைக்கான அர்ப்பணிப்போடு ஆட்சி விளங்க வேண்டும் என்பதன் குறியீடாகவே செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்படுகிறது’ என்றெல்லாம் அப்போது விளக்கம் தரப்பட்டது.
ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில், நாட்டை வழிநடத்துகின்ற அரசியல் சட்டம்தான் இருக்க வேண்டுமே ஒழிய செங்கோல் அல்ல என்ற நிலைப்பாட்டில் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.
இதேவேளை தமிழர்களின் அடையாளத்தை எதிரணியினர் எதிர்ப்பதாக பா.ஜ.கவினர் பிரசாரம் செய்து வருகின்றனர். செங்கோலை எதிர்ப்பதானது, தமிழ் இனத்தையே அவமதிப்பதாகும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
தமிழர் கலாசாரத்தை, பண்பாட்டை அழிக்க நினைக்கிறார்கள் என பா.ஜ.கவினர் கொந்தளித்து வருகின்றனர்.
வழக்கமாக தமிழர் கலாசாரத்தை, பண்பாட்டை பா.ஜ.க அழிக்கிறது என மற்றைய கட்சிகள் கொந்தளித்ததுபோக, இந்த விவகாரத்தில் அதற்கு நேரெதிராக தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
எஸ்.சாரங்கன்