இலங்கைக்கும், சர்வதே நாணய நிதியத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுவரும் நீடித்த நிதியுதவித் திட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு அங்கீகரிக்கப்பட்டு மூன்றாவது தவணைக்கான அனுமதி கடந்த வாரம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச கடன் வழங்குனர்களுடன் கடன் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பது பற்றி அறிவித்திருந்தார். இந்த இரண்டு விடயங்களும் இலங்கையின் பொருளாதார மீட்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளாக அமைந்துள்ளன.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வீதியோரங்களில் இரவுபகலாகக் காணப்பட்ட மக்களின் நீண்ட வரிசைகள் இல்லாமல் செய்யப்பட்டு, நாடு பொருளாதாரத்தின் மீட்சியை நோக்கி சரியான பாதையில் பயணிப்பதை இந்த வெற்றிகள் பறைசாற்றியுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைத் தொடர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் கடன் மறுசீரமைப்புக்கு இலங்கை கட்டாயம் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை காணப்பட்டது. இது தொடர்பில் அரசாங்கம் கொள்கையளவிலான இணக்கப்பாட்டை எட்டியிருந்தபோதும், கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் செய்வதில் காலதாமதம் இருந்த போதும், பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கப்பாட்டை எட்ட முடிந்தது.
இந்த அடிப்படையில் ‘பரிஸ் கிளப்’ என அறியப்படும் உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவுடனும், மற்றுமொரு கடன் வழங்குனருமான சீனாவின் எக்ஸிம் வங்கியுடனும் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடிந்துள்ளது. இந்த அடிப்படையில் இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் காணப்பட்ட பார்வையை மாற்ற முடிந்திருப்பதுடன், அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள்:
இந்த ஒப்பந்தங்களின் மூலம், வெளிநாடுகளில் உள்ள அனைத்து இருதரப்பு கடன் தவணைகளையும் 2028 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்க முடியும். அதன் பின்னர் சலுகை நிபந்தனைகள் அடிப்படையில் அனைத்துக் கடன்களையும் செலுத்த 2043 வரை நீண்டகால அவகாசம் இலங்கைக்குக் கிடைத்துள்ளது.
2022 ஆம் ஆண்டில்,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2வீதத்தினை, வெளிநாட்டுக் கடனை செலுத்துவதற்கு செலவிட வேண்டியிருந்தது. எனினும், கடன்மறுசீரமைப்புக்கான ஒப்பந்தத்தின் மூலம் 2027ஆம் ஆண்டு முதல் 2032ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிவரையில் கடன்களைச் செலுத்துவதற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 வீதத்தினை மாத்திரமே ஒதுக்குவதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைத்துள்ளது.
2022 இல் அரசாங்கத்தின் வருடாந்த நிதித் தேவை, மொத்த தேசிய உற்பத்தியில் 34.6 சதவீதமாகும். இந்த இணக்கப்பாடுகள் காரணமாக 2027-2032 வரையான காலப்பகுதியில் அந்த நிதித் தேவை 13 சதவீதத்தை விடக் குறைவாக அமையவுள்ளது.
தொடர்ந்து 6 காலாண்டுகளாக சுருங்கிச் சென்ற இலங்கையின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து வளர்ச்சியடையத் தொடங்கியிருந்தது. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் மீண்டு வர வழியின்றி, வற்றிப் போயிருந்த எமது வெளிநாட்டு கையிருப்பு, தற்போது 5,500 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பதுடன், வங்கி வட்டிவீதங்கள் குறைந்துள்ளன. 2022 செப்டம்பரில் 70 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. முதன்மைக் கணக்கு இருப்பை உபரியாக மாற்றக்கூடிய நிலைமை உருவாகியிருக்கிறது.
கடன் மறுசீரமைப்புப் பணியின் முக்கியமான கட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதால், வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி முன்னெடுத்த அனைத்துத் திட்டங்களையும் மீண்டும் தொடங்க அந்தந்த நாடுகளுக்கு சட்டபூர்வ வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி, இலகு ரயில் பாதை, அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட பல திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இது மாத்திரமன்றி, புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பங்கள் பலவும் ஏற்பட்டுள்ளன.
கடன்மறுசீரமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கப்பாடு குறித்து நாட்டுக்கு அறிவித்து விசேட உரை நிகழ்த்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடனை செலுத்த முடியாமல் வங்குரோத்தான நாடென்று முத்திரை குத்தப்பட்ட ஒரு நாடு இரண்டு வருடங்களில் இந்தளவு முன்னேற்றத்தைப் பெற முடிந்திருப்பது வெற்றி எனவும், அண்மைய வரலாற்றில் பொருளாதார படுகுழியில் விழுந்த உலகின் எந்த நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வாறான நிலையை அடைந்ததில்லை எனவும் குறிப்பிட்டார்.
‘நாடு எதிர்நோக்கும் சவால்களை உண்மையாகப் புரிந்துகொண்டு அவற்றுக்கு நடைமுறைத் தீர்வுகளை வழங்கி, முடிவுகளைக் காட்டிய தன்னுடன் சேர்ந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வீர்களா? இல்லையேல் இன்னும் பிரச்சினையை புரிந்து கொள்ளாத மற்றும் அதிகாரத்திற்காக இருட்டில் தடவிக் கொண்டிருக்கும் குழுக்களுடன் இணைவதா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
தவறான பாதையில் செல்வதால் ஏற்படும் ஆபத்துகளை அனைவரும் அறிந்து வைத்துள்ளதால், அது தொடர்பில் தீர்மானத்தை எடுப்பதற்கு மக்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் உள்ளது. மக்கள் எடுக்கும் தீர்மானம் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்காது, அது நாடு மற்றும் எதிர்கால குழந்தைகளின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும்’ என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வங்குரோத்து அடைந்து நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் வீழ்ந்திருந்த போது நாட்டை மீட்பதற்கு தனது கட்சிக்குப் பாராளுமன்ற அதிகாரம் இருக்கவில்லை எனவும், தன்னால் நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளோ தான் நியமித்த அமைச்சரவையோ இருக்கவில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவை எதுவும் இன்றி உலகையே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இரண்டு வருடங்களில் நிலையான நாட்டைக் கட்டியெழுப்ப தன்னால் முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் தலைமைத்துவம்:
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த நாட்டின் நிலைமையையும், தற்போதைய நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அடைந்திருக்கும் வெற்றி குறித்து எவரும் சந்தேகம் கொள்ள முடியாது. வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என அறிவிக்கப்பட்ட நாட்டைப் பொறுப்பேற்பதற்கு எவரும் முன்வராத நிலையில், தனியொரு ஆளாக இந்தச் சவாலை ஏற்றுக் கொள்ள முன்வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம், முதிர்ச்சி, தொலைநோக்குப் பார்வை போன்றவையே இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளன.
இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்தை வடிவமைப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மூலோபாயப் பார்வை முக்கியமானது. பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அவரது நடைமுறை அணுகுமுறை மற்றும் நிதி ஒழுங்குமுறைக்கான அர்ப்பணிப்பு ஆகியவை சர்வதேச நாணய நிதியம் மற்றும் முக்கிய கடன் வழங்குநர்கள் உட்பட சர்வதேச பங்குதாரர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன.
நீண்ட கால கட்டமைப்பு சீர்திருத்தங்களுடன் உடனடி பொருளாதார தேவைகளை சமநிலைப்படுத்தும் அவரது திறன் இதுவரை எட்டப்பட்ட முன்னேற்றத்தில் முக்கிய காரணியாக உள்ளது.
முக்கிய சர்வதேச பங்காளிகளுடன் வலுவான உறவுகளை வளர்ப்பதிலும், இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதிலும் ஜனாதிபதியின் முழுமையான ஒத்துழைப்பு சிறப்பானது. இராஜதந்திர ரீதியில் விடயங்களை அணுகும் விதம் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான சூழலை நாட்டுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இலங்கை பல முக்கியமான கொள்கைச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. வருமான வசூலிப்பை மேம்படுத்துதல், பொதுச்செலவினங்களை முறைப்படுத்துதல் மற்றும் வணிகச் சூழலை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்குகின்றன. அவரது நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் மீதான கவனம் இலங்கையின் பொருளாதார கொள்கைகளின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் ஜனாதிபதியின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் நாடு பொருளாதா மீட்சியை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட நீண்ட வரிசைகள் என்ற நிலைமைகள் முற்றாக நீங்கி, மக்கள் ஓரளவுக்கு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. இவை அனைத்துக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலும், அவருடைய தொலைநோக்கு சிந்தனையுமே என்றால் அது மிகையாகாது.
ஒத்துழைப்பு வழங்காத எதிர்க்கட்சிகள்:
நாட்டை சரியான பாதையில் வழிநடத்திச் செல்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் குறிப்பாக எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த இரண்டு வருடங்களில் பல தடவைகள் அழைப்பு விடுத்துள்ளார். இருந்தபோதும் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும், தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து மக்களைக் குழப்பாமலாவது இருக்கலாம்.
எனினும், எதிர்க்கட்சிகள் இலங்கை அரசியலின் வழமையான சம்பிரதாயங்களுக்கு அமைய எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்பு என்ற ஆயுதத்தையே தொடர்ந்தும் கையில் ஏந்தியுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிச் செல்லும்போது தேவையற்ற அச்சத்தையும், விமர்சனங்களையும் முன்வைத்த எதிர்க்கட்சி, மக்களை குழப்பத்துக்கு உள்ளாக்கியது. இருந்தபோதும் அந்தத் தடை தாண்டப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர், தாம் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுசீரமைப்போம், மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையிலான ஒப்பந்தத்தைச் செய்வோம் எனக் கூறத் தொடங்கினர்.
சர்வதேச கடன் வழங்குனர்களுடன் கடன் மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிகளை எடுத்தபோது, அதனை முடியாத காரியம் என்பது போல எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. எனினும், அந்தத் தடையையும் அரசாங்கம் தற்பொழுது தாண்டியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் செயற்பாடு குறித்து தனது உரையில் குறிப்பிட்டிருந்த ஜனாதிபதி, “எங்களை விமர்சிக்கும் சில குழுக்கள் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. எதிர்காலத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படுவோர் இப்போதே ஜனாதிபதியையும் தெரிவு செய்து விட்டனர். அவர்களில் சிலர், ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் ஆழமாக ஆலோசனை நடத்துகிறார்கள்” என்று தெரிவித்தார்.
‘தேவையற்ற பொய்களை மக்கள் மத்தியில் விதைக்கின்றனர். நாட்டுக்கு எவ்வாறான வெற்றி கிட்டினாலும், ஏன் அவர்கள் இன்னும் இதனை வன்மமாகப் பார்க்கிறார்கள்? நாட்டிற்குக் கிடைக்கும் நற்செய்தியை எதிர்மறையாக பார்ப்பது ஏன்? எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் பெற ஏன் முயற்சிக்கிறார்கள்? அதிகாரத்தைப் பெறுவதற்காக ஏன் நாட்டுக்குத் துரோகம் செய்கின்றனர்? இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசியல் செய்வது ஏன்? அதற்கு இதுதான் காரணம். ஜனாதிபதி பதவிக்காக கடுமையாகப் போராடுகிறார்கள். நாம் நாட்டுக்காக போராடுகிறோம். அவர்களோ தங்களுக்குக் கிடைக்கும் பதவிகள், பட்டங்கள் பற்றிக் கனவு காண்கிறார்கள். ஆனால் நாம் நாட்டின் வளர்ச்சி பற்றி கனவு காண்கிறோம்’ என ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றிய விசேட உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது நாட்டை பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீட்க வேண்டும் என்பதில் யார் உறுதியாக இருக்கின்றனர் என்பது தெளிவாகப் புரிகின்றது. இரண்டு வருடங்களில் நாட்டை சரியான பாதைக்குக் கொண்டு சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் இந்நாட்டுக்கு மிகவும் முக்கியமானது என்பதை அண்மைய கால செயற்பாடுகள் வலியுறுத்தியுள்ளன.
தற்பொழுதிருக்கும் தெரிவுகளில் நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்கு அவருடைய தலைமைத்துவமே சிறந்ததாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
‘அவர்கள் அமைச்சுக்களைப் பகிர்ந்துகொள்ள திட்டமிடுகிறார்கள். நாம் நாட்டை கட்டியெழுப்ப திட்டங்களை வகுக்கிறோம். அதிகாரத்தைக் கோரி இலங்கையைச் சுற்றி வருகிறார்கள். பாடசாலைகளுக்குச் சென்றும் அதிகாரத்தை கேட்கிறார்கள். உலகம் முழுவதும் பறந்து நாட்டின் அதிகாரத்தைக் கேட்கிறார்கள். அதிகாரத்துக்காக அல்லும் பகலும் ஓடித் திரிகின்றனர்.
ஆனால் நாம் நாட்டுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கிறோம். நாடு முழுதுமாகச் சென்று மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களை ஆரம்பிக்கிறோம். நான் உலகம் முழுவதும் சென்று நமது நாட்டின் வளர்ச்சிக்காக சர்வதேச ஆதரவைப் பெற்று வருகிறேன்’ என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டிருந்தார்.