வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை நிறைவேற்றுவதற்காக ஜூலை 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் விசேட பாராளுமன்ற அமர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்விசேட பாராளுமன்ற அமர்வை நாளை மறுதினம் 02ஆம் திகதியும் புதன்கிழமை 03ஆம் திகதியும் கூட்டுவதற்கு கடந்த வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்ததாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
முழு நாட்டு மக்களினதும் கவனமும் இந்த விடயத்தில் குவிந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜூலை 02ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பிலான விவாதமும் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலும், பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்புடனும் கடந்த வெள்ளிக்கிழமை (28) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இக்குழு வெள்ளிக்கிழமை கூடியபோது, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை அமுல்படுத்துவதற்கான முன்மொழிவுகள் குறித்து இரண்டு நாள் விவாதம் நடத்துமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அதற்கமையவாக விவாதம் நடத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் அமைச்சர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆய்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படுமெனவும், தேவைப்பட்டால் எதிர்வரும் 03 ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்த முடியுமெனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.
எனவே எதிர்வரும் 03 ஆம் திகதி ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் கட்டாயம் பாராளுமன்றத்துக்கு சமுகமளிக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜூலை 02 ஆம் திகதி அதாவது நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுக்கும் (Official Creditor Committee) 2024 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட இறுதி உடன்படிக்கையும் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் சீனாவின் ஏற்றுமதிக்கும் மற்றும் இறக்குமதி வங்கி (EXIM வங்கி)க்குமிடையே கடந்த ஜூன் 26 அன்று மேற்கொள்ளப்பட்ட இறுதி கடன் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்கான ஒப்பந்தமும் இதில் உள்ளடக்கபட்டுள்ளன.
இதேவேளை, பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தெரிவிக்கையில், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை ஜூலை 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜூலை 02 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், மாலை 5.00 மணிவரை விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அன்றையதினம் விசேட உரையொன்றை நிகழ்த்தவிருப்பதாகவும் பிரதிச் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
ஜூலை 03ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரண்டாவது நாளாகவும் விவாதத்தை நடத்த இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு தீர்மானம் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இந்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் இலங்கை அரசாங்கமும், உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் குழுவும் (OCC) கடந்த 2024.06.26ஆம் திகதி கைச்சாத்திட்ட இறுதி உடன்படிக்கை, இலங்கை அரசாங்கம் மற்றும் சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (EXIM Bank) ஆகியவற்றுக்கிடையில் 2024.06.26 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இறுதி உடன்படிக்கை ஆகியவற்றை நடைமுறைப்படுது்துவதற்குத் தேவையான அனுமதியை, நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கு வழங்குவதற்காக இந்தத் தீர்மானம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.