பஸ் கட்டணங்கள் நாளை முதலாம் திகதி முதல் கணிசமான அளவு குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண குறைப்பு சதவீதம் நாளை 01ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்தார். பஸ் சங்கங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், கட்டணத்தை குறைப்பதற்கு பஸ் சங்கங்கள் இணக்கம் தெரிவித்ததாகவும் ஷஷி வெல்கம தெரிவித்தார்.
தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் பிரகாரம் எதிர்வரும் முதலாம் திகதி கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்த ஷஷி வெல்கம, அதற்கமையவே கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படுமெனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை பஸ் கட்டணம் 05 வீதத்தால் குறைக்கப்படும் எனவும், அதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ரூபாயிலிருந்து 28 ரூபாவாக குறைக்கப்படுமெனவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும் தெரிவித்துள்ளார். நாளை பிற்பகல் 01.00 மணியளவில் தகவல் திணைக்களத்தில் நடபெறவுள்ள விசேட ஊடக சந்திப்பொன்றின்போது,தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம, ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன, ஆணைக்குழுவின் பணிப்பாளர் ( திட்டமிடல்) கே.ஏ.சி.கருணாரட்ண ஆகியோர் கட்டணத் திருத்தம் மற்றும் குறைப்பு பற்றியதான அறிவித்தலை விடுக்கவுள்ளனர்.