கடந்த இருபது ஆண்டுகளாக பாரம்பரிய தேயிலை உற்பத்திப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்துவரும் பெட்னா நிறுவனம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு புலமைப் பரிசில் மூலம் கைகொடுக்க முன்வந்துள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான இரு தரப்பு ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி கொழும்பு கங்காராமவில் நடைபெற்ற எளிய நிகழ்வில் பெட்னா நிறுவனத்துக்கும் மொரட்டுவை நியூஹொரைசன் அரிமா சங்கத்துக்கும் இடையில் கைச்சாத்தானது. சமகி செவன புற்றுநோய் நிலைய நிர்வாகி வண.பிதா ஜூட் நிக்கலாங்ஸ முன்னிலையில் பெட்னா சார்பாக அதன் நிர்வாக பணிப்பாளர் சமென்ந்த சோமதுங்கவும் அரிமா சங்கத்தின் நிர்வாகி வஜிர திலகுமாரவும் இப்புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
இத் திட்டத்தின் கீழ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள உயர்தர மாணவர்களுக்கு இரண்டுவருட காலத்துக்கு மாதம் ஐயாயிரம் ரூபா உதவித் தொகையாக வழங்கப்படும். தற்போது 25 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தொகை படிப்படியாக அதிகரிக்கப்படவுள்ளது. இலங்கையில் புற்றுநோய் நோயாளர்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதோடு குறைந்த வயதுடையோர் மத்தியிலும் இது அதிகரித்து வருகிறது. வருடாந்தம் முப்பதாயிரத்துக்கும் அதிகமானோர் இலங்கையில் புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். மாணவ பருவத்தில் இந்நோயால் பாதிக்கப்படும் போது அவர்கள் பலவிதமான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். எனவே மாணவர்களுக்கு உதவுவது அவசியம் என்பதால் தாம் இத்தீர்மானத்துக்கு வந்ததாக இங்கு உரையாற்றிய பெட்னாவின் நிறுவனத் தலைவர் சோமதுங்க தெரிவித்தார்.
இந்நிறுவனம் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரித்த புற்றுநோய்க்கான மருந்து தற்போது ‘வேர்நோலக்’ என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது. இம் மருந்து விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபம் மாணவர் உதவித் தொகை திட்டத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளது.