IMF செல்ல இலங்கை தாமதித்துள்ளது
- பொருளாதார நிபுணர்கள்
கடும் அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) செல்வதற்கு தற்போது மிகவும் தாமதமாகியுள்ளது என பொருளாதார நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டியதன் அவசியம் சில மாதங்களுக்கு முன்னர் வலியுறுத்தப்பட்ட போதிலும், இலங்கை தனது உள்நாட்டு கொள்கைகளுடன் பயணித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கூட தனது நிதிப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியாத இக்கட்டான நிலையை அடைந்துள்ளதாகவும் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை அடுத்த வருடத்தில் கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டப்ளிவ். ஏ. விஜேவர்தன எச்சரித்துள்ளார்.
2021 டிசம்பர் 28
****
தற்போது செல்லும் வழி மிகவும் ஆபத்தானது
- முன்னணி நடிகரும், மேடை நாடக இயக்குனருமான ஸ்ரீயந்த மெண்டிஸ்
நல்ல விஷயமல்லவா நடந்திருக்கிறது? என மக்கள் எங்களை திட்டக் கூடும். எம்மைத் திட்டுவதில் அர்த்தமில்லை. நாமும் அவர்களைப் போன்று இன்று வரிசைகளில்தான் நிற்கின்றோம். நாம் இவ்வாறான ஒன்றை எதிர்பார்த்திருக்கவில்லையே. அந்தச் சந்தர்ப்பத்தில் இருந்த ஒரே ஒரு மாற்று வழியைத்தான் நாம் தெரிவு செய்தோம். மக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது செல்லும் வழி மிகவும் ஆபத்தானது. எல்லா பக்கத்திலிருந்தும் ஒவ்வொரு பிரச்சினை சேர்ந்து கொண்டுள்ளது. நாம் ஒன்று சேர்ந்து என்ன செய்ய வேண்டும்? இன்று எமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க வழியில்லை என்பது உண்மைதான். நாம் ஒரு துரதிர்ஷ்டவசமான யுகத்தை கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். இன்று வரிசைகளில் நிற்பதால் இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது. உணவு இல்லாமல் வெயிலில் மணிக்கணக்கில் காத்திருப்பதால் அவர்கள் கோபமடைகின்றனர். உண்மையில் மக்களை நினைத்து மிகவும் வருந்துகிறேன். அந்த நிலை தற்போது எமக்கும் ஏற்பட்டுள்ளது.
****
அரச வங்கிகள் வங்குரோத்து அடைந்துள்ளன
- வைப்பாளர்களின் பணம் அவர்களுக்கு கிடைக்காது சுனில் ஹந்துனெத்தி
2023 ஜூன் 07
தற்போது இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக இந்திய சமுத்திரத்தில் முடிசூடிக் கொண்டுள்ளது. எந்தவித பொருளாதார நோக்கும் இல்லாத ராஜபக்ஷ கூட்டத்திடம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சிக்கிக் கொண்டனர்.
2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, ராஜபக்ஷ கூட்டத்திடம் நாட்டை முன்னேற்றும் திட்டம் இல்லை என்று தோன்றியது.
எனினும் ஈஸ்டர் தாக்குதலின் ஊடாக மக்கள் மத்தியில் மனோரீதியான அச்சத்தை ஏற்படுத்தி, மக்கள் பொறுப்பற்ற வகையில் வாக்களிக்கும் நிலைக்கு உள்ளானார்கள்.
ஒரு மாதத்திற்கு இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாம் என நாம் வெளிநாட்டில் தொழில் புரிபவர்களிடம் கூறுகின்றோம்.
அவர்கள் இந்த தீர்மானத்தை எடுப்பார்களாயின், ஒரு மாதத்திற்கு இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவணியை அனுப்பாமல் விடுவார்களாயின், மூன்று மாதங்கள் வெளிநாட்டுச் செலாவணியை அனுப்ப மாட்டோம் என தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார்களாயின் அவர்களால் அரசாங்கத்தை ஆட்டம் காண வைக்க முடியும்.
இந்நாட்டு அரச வங்கிகள் தற்போது வங்குரோத்து அடைந்து விட்டன என்றும், வரும் காலங்களில் வைப்பாளர்களின் வட்டியினை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
சிலவேளை வரும் காலத்தில் வைப்பீட்டாளர்களின் வைப்புக்களையும் கூட திரும்ப பெற முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
****
- இலங்கைக்கு ஒரு சதமேனும் அனுப்ப வேண்டாம்!
இலங்கையில் அரச பயங்கரவாதம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அரச பயங்கரவாதம் செயற்படும் ஒரு நாடு என்ற வகையில் இலங்கைக்கு பணம் அனுப்புவதிலிருந்து விலகி இருக்குமாறு வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களிடம் கேட்டுக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினா் சரத் பொன்சேகா வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
“இந்த அரச பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரையில் இலங்கைக்கு ஒரு சதத்தையும் கூட அனுப்ப வேண்டாம் என வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் கௌரவமாகக் கேட்டுக்கொள்கிறேன். நாம் பசியால் மரணிப்பதற்கும் ஆயத்தமாக இருக்கிறோம்.
இந்த நாட்டிற்கு ஐந்து சதத்தைக் கூட அனுப்ப வேண்டாம். இந்த அரசுக்கு உதவ வேண்டாம்.
IMF இடமிருந்து கிடைப்பவை கிடைக்கும் என்றார். நாங்கள் பெருமைப்படுகிறோம்.
இது சரியாக ஒரு பிச்சைக்காரனுக்கு ஸ்வீப் டிக்கெட் பரிசு கிடைத்ததைப் போன்றதாகும். எனினும் இந்த அரச பயங்கரவாதம் இருக்குமாக இருந்தால், இவை கிடைப்பதற்கு நாம் தகுதியானவர்களா இல்லையா என்பதில் எனக்குள் ஒரு கேள்வி எழுகின்றது.
****
வீட்டிலேயே நோயைக் குணமாக்க முடிந்தால் வைத்தியசாலைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை
- IMF செல்லாததற்கான காரணத்தை கூறும் கப்ரால்
2021 செப்டெம்பர் 27
இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவு தேவையற்றது என்றும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொண்டால் அதிலிருந்து வெளியேறுவதற்கு சுமார் 10 வருட காலம் எடுக்கும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரவித்தார். அண்மையில் எட்வோகாடா நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் (ஒன்லைன்) இணையத்தள கலந்துரையாடலின் போதே மத்திய வங்கி ஆளுநர் இதனைக் கூறனார். “தற்போதைய சூழ்நிலைக்கு முகங்கொடுக்க எம்மால் முடியும் என்று நான் நினைக்கிறேன். எமக்கு எமக்கேயுரிய வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். அதனால்தான் நாங்கள் அதைச் செய்கிறோம். அதன் ஊடாக முன்னேறிச் செல்லக் கூடிய பயணத்தைத்தான் நாம் மேற்கொள்கிறோம்” என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார். .
“IMF எமது போட்டியாளர் அல்ல. IMF உடன் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் ஒரு சந்தர்ப்பத்தில் தொழில்நுட்ப உதவியை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டோம். அதற்காக நாம் அவர்களின் நிகழ்ச்சிக்குள் செல்ல வேண்டியதில்லை. அதைத்தான் நாம் கூறுகின்றோம். நம் நாட்டில் எழுத்தறிவில் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளோம். எங்களிடம் தகவல்கள் உள்ளன. எம்மால் எமக்குத் தேவையான வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். அதனால்தான் நாம் அதனைச் செய்கிறோம். இதன் ஊடாக நாங்கள் ஒரு பயணத்தை மேற்கொள்ளப் போகிறோம், அதன் மூலம் நாம் முன்னேற முடியும்”
“வாஷிங்டனில் இருந்து ஒருவர் வந்து இரண்டு வாரங்கள் நம் நாடு தொடர்பில் ஆராய்ந்து பார்த்து, அது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பதா எமக்கு மிகவும் பொருத்தமானது, அல்லது இந்த நாட்டிலேயே, இந்நாட்டிற்குப் பொறுப்புக் கூறக்கூடியவர்கள் செய்வது பொருத்தமானதா என்பதை நாங்கள் முதலில் தீர்மானிக்க வேண்டும். நான் இதற்கு முன்னர் IMF மற்றும் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட போது கூறியிருக்கின்றேன், உங்களுக்கு இலங்கை என்பது நீங்கள் எழுதும் அறிக்கையாகும். அந்த அறிக்கை வெற்றியளித்தாலும், தோல்வியடைந்தாலும் அதே நிலைதான். நீங்கள் அந்த அறிக்கையை எழுதிவிவிட்டு பின்னைய காலத்தில் உங்களது சுயவிபரக் கோவையை எழுதும்போது இந்த அறிக்கையை நீங்கள் எழுதியதாகக் கூறுவீர்கள். எமக்கு அவ்வாறில்லை. இது எங்கள் நாடு. இது எங்களது பொருளாதாரம், இது எமது மக்கள். யாரிடம் அதிக அக்கறை இருக்கும்? மத்திய வங்கியில் பொருளாதார நிபுணர்கள் பலர் பணியாற்றுகின்றார்கள். அவர்கள் துறை தொடர்பில் சிறந்த அறிவினைக் கொண்டவர்கள். இந்த நாட்டைப் பற்றி நன்கு புரிந்து கொண்டவர்களால் திட்டம் உருவாக்கப்படுவது சிறந்ததா? அல்லது எமது நாட்டைப் பற்றித் தெரியாதவர் உருவாக்கும் திட்டம் சிறந்ததா என்பதுதான் முக்கியமானது”
****
நெருக்கடிக்கான காரணம் மோசமான பொருளாதார முகாமைத்துவமா?
- ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன
தவறான முகாமைத்துவத்தின் காரணமாகவே நாட்டிற்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
“எந்த ஒரு நாட்டிலும் பணவீக்கம் இலங்கையைப் போன்று உயர்வடையவில்லை. 2019ஆம் ஆண்டிலிருந்து தற்போது 2021ஆம் ஆண்டு வரைக்கும் பணவீக்கம் 10.5இனால் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் 600 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை மக்கள் விற்பனை செய்துள்ளனர்”
இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற வேண்டுமா இல்லையா?
“பொருளாதார மந்தநிலை” என்றால் என்ன?
“இலங்கையை விட கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகள் உள்ளன. எனினும் அந்த நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை. இவ்வாறு பொருளாதார சுனாமி ஏற்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம், 1.5 டிரில்லியன் பணம் அச்சிடப்பட்டுள்ளது.
பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் வேகத்தை கற்பனை செய்து கொள்ள முடியும்” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார். தவறு அரசின் பொருளாதார முகாமைத்துவத்தில்தான் உள்ளது. டொலரின் மதிப்பைச் சரியாக நிர்ணயித்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது”
****
மக்கள் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வை எதிர்பார்க்கிறார்கள்
- ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. சி. அலவத்துவல
“நாட்டின் தற்போதைய நிலையைப் புதிதாகச் சொல்லத் தேவையில்லை. முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளன. அது எப்போது குறுகியதாக மாறும்? வரிசையில் நிற்காமல் எவ்வாறு மக்கள் எரிபொருளை நிரப்பிக் கொள்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்கள் தங்கள் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வை எதிர்பார்க்கிறார்கள். இந்த நாட்டில் குடும்ப ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்துள்ளது, கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குச் சென்றது.
அதன் மூலம் தற்போது பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியை நியமிக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
69 இலட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்நாட்டு மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொருட்களின் விலை விண்ணைத் தொடுமளவுக்கு உயர்ந்தது. பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மக்கள் வீதிகளில் மரணிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். தமது குழந்தைகளுக்கு மூன்று வேளை அல்ல, ஒரு வேளை கூட உணவு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசியலமைப்பின் படி மீதமுள்ள காலத்திற்கு ஒரு ஜனாதிபதியை நியமித்துக் கொள்ளும் வாய்ப்பே அதுவாகும்.
இங்கு, மக்கள் என்ன சொல்கிறார்கள், கோரிக்கைகள் என்ன, மக்களின் அன்றாட பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும்.
அமைச்சரவை கூடித்தான் உரங்களை தடை செய்ய முடிவு செய்தது. வரிச்சலுகை வழங்குவதற்கு அவர்கள் இணைந்து செயல்பட்டனர்.
****
வெளிநாட்டுக் கடனாக ஒரு சதம் கூட இந்நாட்டிற்கு கிடைக்காது
சர்வதேசம் எதிர்பார்க்கும் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொள்ளும் வரைக்கும் வெளிநாட்டுக் கடனாக ஒரு சதம் கூட இந்நாட்டிற்கு கிடைக்காது.
சர்வதேச சமூகம் எதிர்பார்க்கும் அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களை நிறைவேற்றும் வரையில் வெளிநாட்டுக் கடனாக ஒரு சதம் கூட நாட்டுக்கு கிடைக்காது என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரி எல்ல கொழும்பில் தெரிவித்தார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவையான பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் சர்வதேச கடன் உதவிகள் தொடர்பில் கனவு காண்பதில் பயனில்லை எனவும் கிரியெல்ல குறிப்பிட்டார்.
****
இலங்கைக்கு கடன் வழங்கல் ஐ.எம்.எப் பரிசீலிக்க வேண்டும்
இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் கடன் வழங்குவது தொடர்பில் ஐ.எம்.எப் பரிசீலனை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சீனா தற்போது உலகில் குறைந்த பணத்தை கூடிய வட்டிக்கு கொடுக்கும் நாடாக மாறி வருகிறது.
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் சீனாவே அதிக கடன்களை வழங்கியுள்ள நிலையில் தான் வழங்கிய கடனை எந்த வழியிலும் சீனா மீளப்பெறுவது நிச்சயம்.
சர்வதேச நாணய நிதியம் சீனா இலங்கைக்கு வழங்கிய கடன் தொடர்பில் சரியான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு கூறி வரும் நிலையில் இதுவரை அவ்வாறு நடந்ததாக தெரியவில்லை.நாங்கள் ஒன்றை கூறுகிறோம், இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் கடன் வழங்குவது தொடர்பில் ஐ எம் எப் பரிசீலனை செய்ய வேண்டும்.