Home » எழுத்தாளர்களுக்கு களம் அமைக்கும் பெருமுயற்சி

எழுத்தாளர்களுக்கு களம் அமைக்கும் பெருமுயற்சி

by Damith Pushpika
June 23, 2024 6:00 am 0 comment

கொழும்பு, வெள்ளவத்தையில் அமைந்துள்ள சைவமங்கையர் கழக மண்டபத்தில் கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை வரையான மூன்று தினங்களும் புத்தகக் கண்காட்சி, ஆய்வரங்கு, தமிழிலக்கிய ஆர்வலர்கள் சந்திப்பு ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

தமிழ்மொழி பேசுகின்ற சமூகங்களின் மத்தியில் வாசிப்பு மற்றும் இலக்கியம் மீதான நாட்டம் குன்றி வருகின்ற இக்காலத்தில், வெள்ளவத்தை உருத்திரா மாவத்தை 23 ஆம் இலக்கத்திலுள்ள சைவமங்கையர் கழக மண்டபத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது பாராட்டப்பட வேண்டியதாகும்.

இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள இலக்கியவாதி எம். பௌசர் மற்றும் தமிழ் ஆர்வலரும், சமூக செயற்பாட்டாளருமான எச்.எச். விக்கிரமசிங்க ஆகியோரைப் பாராட்டுவது மிகவும் அவசியம்.

தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தாய்மொழி மீதான ஆர்வம் வேகமாகக் குன்றி வருகின்றது. அக்காலத்தில் இவ்விரு சமூகத்தினரும் தமிழ்மொழியிலும், இலக்கியத்திலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தனர்.

இன்று சமூக ஊடகங்களின் ஆக்கிரமிப்பினால் வாசிப்புப் பழக்கம் பெருமளவு குன்றிப் போயுள்ளது.

இவ்வாறான நிலையில், தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற வெள்ளவத்தையில் அமைந்துள்ள சைவமங்கையர் கழக மண்படத்தில் இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள எம். பௌசர் அவர்களின் தமிழ்ப்பற்றுதல் பாராட்டுக்குரியதாகும். அதேவேளை பௌசர் அவர்களுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கி ஊடகங்களில் இந்நிகழ்வுகளுக்கான பிரசாரங்களை வழங்கியுள்ள எச்.எச். விக்கிரமசிங்கவும் பாராட்டுக்குரியவர் ஆவார்.

மூன்று தினங்களாக நடைபெற்று வருகின்ற இந்நிகழ்வுகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இலங்கை, இந்திய மற்றும் புலம்பெயர் நாடுகளிலுள்ள எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியலாளர்கள், கலைஞர்கள் சமூக செயற்பாட்டாளர்களின் ஒன்றுகூடுகையும் கலந்துரையாடல்களும் கலை இலக்கிய நிகழ்வுகளும் நடைபெற்றிருக்கின்றன.

புத்தகக் கண்காட்சி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இன்று ஞாயிறு காலை 10 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகின்றது. அங்கு நடைபெறுகின்ற நிகழ்வுகளில் பங்கேற்பது தமிழ்மொழி ஆர்வலர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகின்றது.

இப்புத்தகக் கண்காட்சி அரங்கில் இலங்கை, இந்திய , புகலிடப் பதிப்பகங்கள், புத்தகசாலைகளின் நூல்களைப் பார்வையிட முடியும். ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களுக்கான தனி அரங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஈழத்து எழுத்தாளர்கள் தங்களது நூல்களை அங்கு கொண்டு வந்து காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி தமிழ்மொழி ஆளுமைகள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியலாளர்கள், பதிப்பாளர்கள், கலை இலக்கியவாதிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கின்றது.

இந்நிகழ்வுகள் தொடர்பாக எஸ். காண்டீபன் (0767427596 ) , எம். பௌசர்(0044 7817262980- Whatsapp) ஆகியோருடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த அரிய நிகழ்வுகளை Maanudam Foundation- UK அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்மொழியையும், வாசிப்புப் பழக்கத்தையும் வளர்க்கும் பணியும் ஈடுபட்டுள்ள இவ்வாறான ஆர்வலர்களை வாழ்த்துவதும் பாராட்டுவதும் எமது கடமையாகும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division