13ஆவது திருத்தச் சட்டமானது வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்காக மாத்திரமல்ல. அது இலங்கை மக்களுக்குரியதென, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று முன்தினம் (14) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென்று வடக்குக்கு பயணம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளார்.
மக்கள் மத்தியில் 13ஆவது திருத்தம் தொடர்பில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. இலங்கையிலுள்ள அனைத்து மாகாணங்களுக்கும் உரியது.
13ஆவது திருத்தம் தொடர்பில் கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை தயாரிக்க கலந்துரையாடல் நடத்தினார். ஆனால் அந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்கவில்லை. எனவே எதிர்க்கட்சி தலைவரின் கூற்றிலுள்ள உண்மைத்தன்மை தொடர்பாக சந்தேகம் எழுகிறது” எனத் தெரிவித்தார்.