ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும் என்பது இறை நியதியாகும். இம்மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம் என்பது உண்மைதான். ஆனால் நாம் என்னதான் தத்துவம் பேசினாலும் உறவைப் போல பிரிவை எந்த ஓர் இதயமும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை அல்லவா? அது எமது இதயத்தின் பலவீனம் என்று தான் சொல்ல வேண்டும்.
நாம் நேசித்த, அதிலும் நாம் அதிகம் அன்பு செலுத்தியவர்களின் பிரிவை எம்மால் ஜீரணிக்க முடியாமல் உள்ளது. அதனால் தானோ என்னவோ ‘நேசிக்கும் நெஞ்சம் சதா நோகின்ற நெஞ்சம் ‘ என்று சொல்லி இருக்கிறார் ஓர் அறிஞர். இந்த வகையில் கடந்த ஜூன் ஏழாம் திகதியன்று எம்மை மாறாத துயரத்தில் ஆழ்த்திவிட்டு மீளாத் துயில் கொண்ட என் உயிர் நண்பி சுலைமா ஏ. சமி இக்பால் மறைந்து வாரம் ஒன்றாகியும் அவரின் பிரிவால் என் மனதை இன்னும் சுதாகரித்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறேன்.
இலக்கிய பரப்பிலேயே தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து பயணித்தவர். இலக்கியத்தால் என் இதயத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர். அவருக்கும் எனக்குமான நட்புக்கு வயது 40. நான் பாடசாலையில் உயர்கல்வி படிக்கும்போதே எங்கள் இருவரினதும் நட்பு மலர்ந்தது. அதுவும் எழுத்துலக நட்புதான். நான் தினபதி, சிந்தாமணி பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தில் கடமை புரிந்த காலம். தபால் மூலம் எனக்கு வரும் ஆக்கங்களில் பெரும்பாலானவை நண்பி சுலைமாவினதாகத்தான் இருக்கும். அன்று மலர்ந்த இந்த தூய நட்பு, அவர் மீளாத் துயில் கொள்ளும் வரை தொடர்ந்தது. வாரம் ஒரு முறை அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறையேனும் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ள மறக்க மாட்டார். அவரது அன்பு மழையில் அடிக்கடி நனைந்தவள் நான். சுக துக்கங்களையும், இலக்கியச் செயற்பாடுகளையும் பற்றியே எங்களது உரையாடல் அமையும். இன்று அந்தக் குரல் ஓய்ந்து விட்டதே ? எழுதும் அவர் பேனா தன் எழுத்துப் பயணத்தை நிறுத்திக் கொண்டு விட்டதே என்பதை நினைக்கும் போது தான் என் கண்கள் குளமாகின்றன. என் நெஞ்சம் கனக்கின்றது.
தர்கா நகரை பிறப்பிடமாகவும் மாவனல்லை கிரிங்கதெனியவை வசிப்பிடமாகவும் கொண்ட என் அன்பு நண்பி சுலைமா, கிரிங்கதெனிய இக்பால் மௌலவியுடன் இல்லறத்தில் இணைந்தார். அவர் மூலம் பாத்திமா இன்சிராஜ், பாத்திமா இன்சிபா, அஸ்பாக் அஹமத் ஆகிய மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். இவர்கள் மூலம் இன்று அவருக்கு மூன்று பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
இவர் இல்லறத்தில் ஈன்றது 3 பிரசவங்கள்தான். ஆனால் இலக்கியத்தில் அவர் பிரசவித்ததோ ஆறு நூல்களை. இவரது முதலாவது நூலான “வைகறைப் பூக்கள்”, “மனச்சுமை” , “திசை மாறிய தீர்மானங்கள்” போன்ற சிறுகதைத் தொகுதிகளை அடுத்து “ஊற்றை மறந்த நதிகள்” என்ற சமூக நாவலை எழுதினார். இந்த நூல் அவரது கணவரின் பெருமுயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட எக்மி என்ற பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. இந்தியாவின் நர்கீஸ் சஞ்சிகையும், மல்லாரி பதிப்பகமும் நடத்திய சிறுகதைப் போட்டியில் இந்த நூலுக்கு சிறப்புப் பரிசு கிடைத்தது. “நந்தவன பூக்கள்” இவரது சிறுவர் இலக்கியமாகும். “உண்டியல்” சிறுகதை தொகுதியே இவரது இறுதி நூலாகும் .
இவரது எழுத்தாளுமையை கௌரவித்து பல அமைப்புகள் இவருக்கு ‘கலாஜோதி’, ‘காவிய பிரதீப’ உட்பட பல கௌரவப் பட்டங்களைச் சூட்டின. பல விருதுகளுக்கு சொந்தக்காரியான இவர், 2022ஆம் ஆண்டு அரச மட்ட விருதான கலாபூசண விருதையும் பெற்றார். இவரது மகள்மார் இருவரும் கலை ஆர்வமும் எழுத்தார்வமும் மிக்கவர்கள், இருவரும் ஆசிரியர்களாக பணி புரிகின்றனர். மூத்த மகள் இன்சிராஜ் எழுத்தாளுமை மிக்கவர்.
இவரும் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். இலக்கிய வானிலே மின்னும் தாரகையாக திகழ்ந்த, சுலைமா இக்பாலின் வெற்றிடத்தை நிரப்பும் நம்பிக்கை நட்சத்திரமாக மகள் இன்சிராஜ் திகழ்வார் என்பது எனது எதிர்பார்ப்பாகும். இவரது ஒரே மகன் அஸ்பாக் அஹமத் சிறந்த ஓவியராகவும் குறுந்திரைப்பட இயக்குனராகவும் திகழ்கிறார். எனவே உம்மாவின் பெயர் சொல்லும் பிள்ளைகளாக இந்தச் செல்வங்கள் தமது பயணத்தைத் தொடர வேண்டும் என்பதும் எனது வேணவாவாகும். தனது மனைவியான சுலைமாவின் உணர்வுகளையும், திறமைகளையும் மதித்து அவரது கணவர் இக்பால் மௌலவி, கொழும்புக்கு வரும் வேளைகளில் எனது இல்லத்துக்கும் அவரை அழைத்து வந்து எம் இருவரது உறவுக்கும் உரமிட்டார்.
இந்த நல்ல உள்ளம் கொண்ட இக்பால் மௌலவி அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று எம்மிடமிருந்து விடைபெற்றது 2020 ஜூன் மாதம் 23ஆம் திகதி ஆகும். என் அன்பு சுலைமாவும் எம்மிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றது ஜூன் மாதம் ஏழாம் திகதி. என் அன்பு நண்பி சுலைமா பிறந்ததும் 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆகும்.
ஜூன் மாதத்துக்கும் இவர்கள் இருவருக்கும் உள்ள இணக்கப்பாடு இதிலிருந்து தெரிகிறது. தனது 64வது வயதில் இறை அழைப்பை ஏற்றுக் கொண்ட என் இனிய நண்பியின் இழப்பு ஆறாத வடுவாக இதயத்தில் குடியிருக்கும். எம்மை விட்டும் இவ்வுலகை விட்டும் விடை பெற்றுக் கொண்ட என் அன்பு நண்பி சுலைமாவுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைக்க வேண்டும் என்ற கண்ணீர் கலந்த பிரார்த்தனைகளுடன் விடை கொடுக்கின்றேன். நண்பி சுலைமா நம்மை விட்டு பிரிந்தாலும் அவரின் இலக்கியப் படைப்புகள் உலகம் உள்ளவரை உயிர் வாழும் என்பது திண்ணம்..!
கலாபூசணம் நூருல் அயின்நஜ்முல் ஹுசைன்.