பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹோமாகம தர்ம ரஷ்மி பொசன் பண்டிகை எதிர்வரும் 21ஆம், 22ஆம், 23ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
தியகம, பிடிபன, தாம்பே, மீகொட, கொடகம, பனாகொட, ஹோமாகம ஆகிய இட ங்களை இணைத்து 13 கிலோமீற்றர் வரையான பகுதி பொசன் வலயமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை மற்றும் ஞாயிறு அறநெறி மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் பொசன் வெளிச்சக்கூடு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 40 இலட்சம் ரூபா பணப்பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொசன் வலயத்துக்கான அச்சு மற்றும் டிஜிட்டல் அனுசரணையை லேக்ஹவுஸ் நிறுவனம் வழங்குவதுடன், இலத்திரனியல் ஊடக அனுசரணையை சுயாதீன தொலைக்காட்சியும் ரூபவாஹினியும் வழங்குகின்றன.
ஹோமாகம புத்தசாசன பாதுகாப்புச் சபை, ஜனாதிபதி செயலகம், வெகுஜன ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, மேல் மாகாண சபை, ஹோமாகம பிரதேச செயலகம், ஹேமாகம பிராந்திய சபை, ஹோமாகம பிராந்திய கல்வி அலுவலகம், இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவை இணைந்து தர்ம ரஷ்மி பொசன் வலயத்தை ஏற்பாடு செய்துள்ளன.
பெரியவர்களுக்கான வெளிச்சக்கூடு போட்டியில் முதலாமிடத்துக்கு ரூ.10 இலட்சமும், இரண்டாமிடத்துக்கு ரூ. 5 இலட்சமும், மூன்றாமிடத்துக்கு ரூ. 2 இலட்சமும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும். இது தவிர 4ஆம் இடம் முதல் 14ஆவது இடம்வரை தலா 50,000 ரூபாயும், 15ஆம் இடம் முதல் 25ஆவது இடம்வரை தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும். மாணவர்களுக்கான போட்டியில் முதலாமிடத்துக்கு ரூ. 5 இலட்சமும், இரண்டாமிடத்துக்கு ரூ. 2 இலட்சமும், மூன்றாமிடத்துக்கு ஒரு இலட்சம் ரூபாயும் வழங்கப்படும். 4ஆம் இடம் முதல் 14ஆம் இடம்வரை 30,000 ரூபாயும், 15ஆம் இடம் முதல் 25ஆம் இடம்வரை 20,000 ரூபாயும் வழங்கப்படும்.
பொசன் பிரதேசத்துக்கு வருகை தரும் இலட்சக்கணக்கான மக்களுக்காக பிடிபன நகரில் தானசாலைகள் இயங்கும். பசுமை பல்கலைக்கழக மைதானத்தில் தினமும் இரவு 7.00 மணி முதல் பக்திப்பாடல் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்நிகழ்ச்சி ரூபவாஹினி மற்றும் இலங்கை வானொலியில் தினமும் ஒளி/ ஒலி பரப்பப்படும்.
லேக்ஹவுஸ் பத்திரிகையில் வெளியிடப்படும் கூப்பனை நிரப்புவதன் மூலம் தர்ம ரஷ்மி பொசன் வெளிச்சக்கூடு போட்டியில் பங்கேற்கலாம். மேலதிக தகவல்களுக்காக 077-5448485- தர்ஷா அல்லது 0777207371- ஜயமஹா என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும்.