சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை கடனை பெற்றுக்கொள்வதன் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுவதுடன், வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நாடு உருவாக்கப்படுமென்று நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க மற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தனர்.
மூன்றாம் தவணை கடன் மூலம் நாட்டின் வருமானத்தை பெருக்க பல வாய்ப்புகள் உருவாகுமென்றும், பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் நேரடியாக மக்களை சென்றடையுமென்றும் நிதி இராஜாங்க அமைச்சர்கள் கருத்து வெளியிட்டனர். மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை சந்திக்காத நாடாக மாற்றுவதன் மூலம் பொருளாதாரத்தை புதிய பரிமாணத்துக்கு கொண்டு செல்ல முடியுமென்றும், இளைஞர், யுவதிகள் அதிக வருமானத்தை பெறக்கூடிய நாடாக மாற்றுவோமென்றும், அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுமென்றும் இராஜாங்க அமைச்சர்கள் மேலும் தெரிவித்தனர்.
முதலீடுகள் கொண்டு வரப்படும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்பட்டு, பொருளாதாரத்தின் வளர்ச்சி சட்டபூர்வமாக்கப்பட்டு, அதன் பிரதிபலன் மக்களை சென்றடையக்கூடிய வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மூன்றாவது கடனை பெறுவது ஒரு நாடு என்ற வகையில் ஒரு பெரிய சாதனையாகும். மூன்றாவது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையை பெற்றுக்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் நிதிக் கட்டுப்பாட்டுக்கான சட்ட அமைப்பு வலுப்பெறுமென்று இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்தனர்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிமுகப்படுத்திய நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், அதற்கமைய 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை மூன்றாவது கடனாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை மொத்தம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட முறையின் கீழ் நாட்டின் வாகன இறக்குமதி வரம்புகளை திறக்க தயாரெனவும், வட்டி வீத குறைப்பின் அனுகூலத்தை வர்த்தகர்களுக்கு வழங்க மத்திய வங்கி தயாரெனவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்கள், மூன்றாம் தவணை கடன் கிடைத்தன் ஊடாக சர்வதேச மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் எமது நாட்டின் பொருளாதார வெற்றிக்கு கிடைத்த ஒரு சிறந்த உத்தரவாதமாகும்.
இலங்கையில் கையிருப்புகளை மேம்படுத்தல், பணவீக்கத்தை கட்டுப்படுத்தல் மற்றும் நடப்பு கணக்குகளை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் இலங்கை சிறந்த பாதையில் பயணிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தனர்.