இந்தியாவின் மேற்கு வங்கத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 75 கிலோ ஹசீஸ் போதைப்பொருளுடன் 02 சந்தேக நபர்கள் தமிழ்நாட்டு வேளாங்கண்ணியில் கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து இந்திய ரூபாவில் சுமார் 150 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, வேளாங்கண்ணியின் தனியார் விடுதியொன்றில் பொலிஸார் தீவிர சோதனை நடத்தினர். இதன்போது விடுதி அறையில் தங்கியிருந்த இச்சந்தேக நபர்களிடம் விசாரணை செய்த போதே இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படவிருந்தமை தெரியவந்தது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த 34, 36 வயதுடைய இச்சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறியுள்ளனர்.
மேற்கு வங்கத்திலிருந்து இராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு ஹசீஸ் போதைப்பொருள் கடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததுடன், இதற்காக காரில் இரகசிய அறை அமைத்து ஹசீஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து மேற்கு வங்கத்திலிருந்து இவர்கள் புறப்பட்டனர். இவர்கள் காரில் 1,500 கிலோமீற்றர் தூரத்துக்கு மேல் பயணித்ததால் வேளாங்கண்ணியிலுள்ள விடுதியில் தங்கிவிட்டு நேற்று முன்தினம் (14) இராமேஸ்வரம் சென்று, படகில் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருச்சி எம்.கே.ஷாகுல் ஹமீது