Home » இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம்

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம்

ஜனாதிபதியிடம் நிபுணத்துவ குழுவினர் கையளிப்பு

by Damith Pushpika
June 16, 2024 7:15 am 0 comment

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (15) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்திரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த சட்ட மூலத்தை தயாரித்து, ஜனாதிபதியிடம் கையளித்தனர். இலங்கை கிரிக்கெட் சபை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கண்டறிந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு அமைச்சரவையால் 06.11.2023 அன்று அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது.

இந்த அமைச்சரவை உப குழுவில் வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தலைமையில் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

கிரிக்கெட் துறையுடன் தொடர்புபட்ட சகல தரப்பினருடனும் ஆலோசித்து 08.01.2024 அன்று அறிக்கையொன்றை இந்தக் குழு சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் இலங்கை கிரிக்கெட் கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தேசிய ஆண்கள், பெண்கள் அணிகள், 19,17 வயதுக்குட்பட்ட பிரிவு அணிகள் உட்பட பல்வேறு மட்டத்திலான கிரிக்கெட் நிர்வாகம், பயிற்சி மற்றும் இருப்பு, வெளிப்படைத்தன்மை, தொழில் தன்மை மேம்பாடு, திறன், சமத்துவம், நியாயப்பாடு மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் மூலதனமாக காணப்படும் பாடசாலை, மாவட்ட, மாகாண, கழக மட்டத்திலான மறுசீரமைப்புக்கான பரிந்துரைகள் உள்ளடங்கியுள்ளன.

அதன்படி அமைச்சரவை உபகுழு அறிக்கையை மையப்படுத்தி, அமைச்சரவையால் கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய யாப்புக்கான சட்டமூலம் தயாரிக்க நிபுணத்துவக் குழு நியமிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்திரசிறியின் தலைமையில் சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர, கலாநிதி அரித்த விக்கிரமநாயக்க, இலங்கை வணிக சபையின் தலைவர் துமிந்த உலங்கமுவ ஆகியோருடன் நீதி அமைச்சரின் பரிந்துரைக்கமைவாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மனோஹர ஜயசிங்க மற்றும் சட்டமூல தயாரிப்பு திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உதவி சட்டமூல தயாரிப்பாளர் சமிலா கிருஷாந்தி உள்ளிட்டவர்கள் இந்த நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தக் குழுவின் செயலாளர்/ இணைப்பாளராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் லோஷினி பீரிஸ் நியமிக்கப்பட்டார்.

நிபுணத்துவக் குழுவினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை கையளிக்கும் நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் உதவி செயலாளர் (அமைச்சரவை அலுவல்கள்) சமித் தலகிரியாவ உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division