இந்த ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படுமென பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாட்டின் மூலம் இதுவரை நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என 138,116 பேரும், பட்டியலிடப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த 965 உறுப்பினர்களுள் 703 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் விசேடஅதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினரின் ஒத்துழைப்புடன் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்காக இலங்கை பொலிஸ் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் சிலரைத் தவிர இந்நாட்டின் பெரும்பாலான பொதுமக்கள் இலங்கை பொலிஸ் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகவும் பொலிஸ் மாஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.