IMF இன் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது தவணை கடன் விடுவிக்கப்பட்டுள்ளமையானது, சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட விடயங்களை இலங்கை மிக துல்லியமாக கையாண்டுள்ளமை இதன் மூலம் தெளிவாவதாக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று முன்தினம் (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி,
“சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வை வெற்றிகரமாக முடித்தமைக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது தவணை விடுவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட விடயங்களை நாம் மிக துல்லியமாக கையாண்டுள்ளமை இதன் மூலம் தெளிவாகின்றது.
வெளிநாட்டுக் கடன் முகாமைத்துவம் மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வெளிநாடுகளுடன் கடன் முகாமைத்துவம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியுமென்றும் நம்புகிறோம். வெளிநாட்டு பிணைமுறி உரிமையாளார்களுடனான கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. அது வெற்றியடையும் பட்சத்தில் இலங்கை கடன் செலுத்தாத சூழ்நிலையிலிருந்து விடுபட்டு கடனை திருப்பிச் செலுத்தும் நாடாக மாற முடியும்.
மேலும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க அடுத்த மாதம் நான் ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளேன். இருதரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் உடன்பாடு எட்டப்பட்ட பின்னர், ஜப்பானின் ஆதரவுடன் இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் மீண்டும் தொடங்கப்படுமென்று ஜப்பான் உறுதியளித்துள்ளது” எனத் தெரிவித்தார்.