உங்களால் முன்னெடுக்கப்படும், வாசிப்பு, எழுத்து, புத்தகத் திட்டம் பற்றிச் சொல்ல முடியுமா?
புத்தகங்கள், வாசிப்பு, எழுத்து, பரவலாக்கம் என்கின்ற இந்த செயல் திட்டம் ஒரு நீண்டகால செயற்றிட்டமாகும், பாடசாலை மட்டத்தில் இருந்து வாசிப்பின் மீதான ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவதற்கான அடிப்படைச் சூழலை படிப்படியாக கட்டியெழுப்புவதே எமது நோக்காகும். மாணவர்கள், பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக சக்திகள் இதில் பங்களிக்க வேண்டிய முக்கிய பிரிவினராகும்.
இத்திட்டத்தினை அனைத்து தரப்பினரின் பங்குபற்றலுடன், சாத்தியப்படுத்துவதற்கானதொரு கூட்டுச் செயற்பாடு அவசியமாகும். இந்த செயற்றிட்டம், இலங்கையிலுள்ள தமிழ் மொழிப் பிரதேசங்களில், மேற்சொன்ன பிரிவினரின் ஆதரவில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டவுள்ளது.
இலங்கையின் வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், மலையகம், தென்னிலங்கைப் பிரதேசங்கள் இதன் செயற்பட்டுத் தளமாகும். இப்பிரதேசங்கள் இந்த நமது செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான, தேவையையும், அவசியத்தையும் கொண்டிருப்பதனை நாம் எல்லோரும் அறிவோம்!
இந்த செயற்றிட்டத்தினை அமுல்படுத்தும் பூமியாக நமது தாயகம் இருக்கின்ற அதேவேளை, இந்த திட்டத்தின் சமூகப் பெறுமானமும், முக்கியத்துவமும் கருதி, இதற்கு ஆதரவும், பங்களிப்பும் வழங்க வேண்டியவர்களாக, புகலிட நாடுகளில் வாழ்கின்ற மக்களும், சமூக சக்திகளும் இருக்கின்றனர்!
இத்திட்டத்தினை முன்னெடுக்க, எப்பிரிவினரின் பங்களிப்பை எதிர்பார்க்கிறீர்கள்?
அறிவுவளர்ச்சி, ஆரோக்கியமான சமூக உருவாக்கத்தில் அக்கறை கொண்ட அனைத்துப் பிரிவினரும் இந்த செயற்றிட்ட, நடைமுறை இயக்கத்தில் பூரணமாக பங்காற்றுவது இன்றைய காலகட்டத்தில், நாம் கூட்டாக இணைந்து ஆற்றும் ஒரு மகத்தான பணியாகவும்,
பங்களிப்பாகவும் அமையும். இந்த வகையில். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் கல்வியியலாளர்கள், சமூக அறிவு, பண்பாட்டுத்துறை சார்ந்தோர் , தனவந்தர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இதன் மற்றுமொரு பங்களிப்பு பகுதியினராகும்.
இலங்கையிலுள்ள பிரதேசங்கள், பகுதிகளுக்கான ஆலோசகர்கள், பொறுப்பாளர்கள், பங்களிப்பாளர்கள், செயற்பாட்டு திட்ட முன்னெடுப்பாளர்களாக செயலூக்கத்துடன் முன்வந்து, பொறுப்புகளை எடுத்துக் கொள்ளுமாறு இந்த சந்தர்ப்பத்தில் உங்களை வேண்டுகிறேன். இது ஒரு கூட்டுச் செயற்பாடாகும்!
சமூக அபிவிருத்தி, மானிட வளர்ச்சியுடன், மக்களையும், சமூகங்களையும், பிரதேசங்களையும் ஒன்றிணைத்து நமது சமுகத் தளத்தில் ஒருபடி முன்செல்ல நமக்கான இன்னுமொரு வாய்ப்பை இத்திட்டம் கொண்டிருக்கிறது.
கொழும்பில் நடைபெறவுள்ள, இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு குறித்து சொல்லுங்கள்?
இம்மாதம் 21, 22, 23ஆம் திகதிகளில், இத்திட்டம் மூன்று நாள் நிகழ்வாக, வெள்ளவத்தையிலுள்ள சைவ மங்கையர் கழக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. புத்தக கண்காட்சி, ஆய்வரங்குகள், உரைகள், கலை நிகழ்வுகள் என ”புத்தகங்கள், வாசிப்பு, எழுத்து, பரவலாக்கம் ” எனும் கருத்தாக்கத்தினை இந்த நிகழ்வுகள் முன்னிறுத்தவுள்ளன.
புத்தகக் கண்காட்சியில், தமிழகத்திலுள்ள பல பதிப்பகங்கள் கலந்து கொள்ள வருகை தரவுள்ளன. இந்திய நூல்களை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கை பதிப்பகங்களும் புத்தக நிலையங்களும் பங்கு கொள்கின்றன. ஈழத்து எழுத்தாளர்களுக்கான தனி அரங்கும் உள்ளது. இந்த அரங்கில் ஈழத்து எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் தமது நூல்களை காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் உள்ளன.
ஆய்வரங்குகளில், தமிழக ஆய்வாளர்களும், எழுத்தாளர்களும் கலைஞர்களும் பதிப்பாளர்களும் கலந்து கொள்ளும் அதேநேரம், இலங்கையின் கல்வியலாளர்களும், எழுத்தாளர்களும் பங்கு கொள்ளவுள்ளனர். நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தோரும் தம் பிரதேசத்து நிலை பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை முன்வைக்கவுள்ளனர்.
இலங்கையிலுள்ள மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலை நூலகங்களுக்கும், உள்ளூராட்சி நூலகங்களுக்கும் இலவசமாக புத்தகங்களை வழங்குவதுடன், வாசிப்பு தொடர்பான பல ஊக்கச் செயற்பாடுகளையும் இத்திட்ட நிகழ்வு அறிமுகம் செய்யவுள்ளது.
இத்திட்டத்தினை செயற்படுத்தும் அமைப்பு யாது?
ஐக்கிய ராச்சியத்தில் பதிவுசெய்யப்பட்ட சமூக நிறுவனமான, மானுடம் அமைப்பு , இத்திட்டத்தினை முன்னெடுக்கிறது.
உள்ளூரில் மதகு அமைப்பு இதனை ஒருங்கிணைக்கிறது. இலங்கையிலுள்ள ஏனைய அமைப்புகளும், தனி நபர்களும் இத்திட்டத்துடன் இணைந்து செயற்பட முடியும்.
இத்துறை சார்ந்து ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரையும், இந்த மூன்று நாள் நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
நமது தமிழ் மொழித்தளத்தில், நீண்ட காலத்தின் பின் நடைபெறவுள்ள, முக்கியமாக அறிவியல், பண்பாட்டு ஒன்றுகூடுகை இதுவாகும்.
நேர்கண்டவர்- எச்.எச்.விக்கிரமசிங்க