காஸா மீது இஸ்ரேல் கடந்த 08 மாதங்களாக முன்னெடுத்துவரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நிகழ்ச்சித் திட்ட வரைவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்வைத்துள்ளார்.
கடந்த மே மாதம் 31 ஆம் திகதி வெள்ளைமாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் முன்வைத்த இத்திட்டம் குறித்து ஜனாதிபதி பைடன் குறிப்பிடுகையில், ‘இந்த யோசனையை ஒரு நீடித்த போர் நிறுத்தத்திற்கான வரைபடம்’ என்றும் ‘காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் வந்துள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார். உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இத்திட்டத்தை ஹமாஸ் உட்பட உலகின் பல நாடுகளும் வரவேற்றுள்ளன.
ஆன போதிலும் இந்த யுத்தநிறுத்த நிகழ்ச்சித்திட்டம் முன்வைக்கப்பட்டு சுமார் ஒரு வார காலம் கடந்துள்ள போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இஸ்ரேலும் ஹமாஸும் இன்னும் உறுதியான முடிவை அறிவிக்காதுள்ளன. இத்திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னரும் கூட காஸா மீதான யுத்தம் நீடிப்பதோடு, தினமும் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர்.
இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இற்றைவரையும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டும், 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துமுள்ளனர். அவர்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்களாவர்.
கடந்த வருடம் ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதோடு, 240 பேரை பணயக்கைதிகளாகப் பிடிந்துச் சென்றது. அத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காகவும் இஸ்ரேல் காஸா மீது போரை ஆரம்பித்தது. இப்போரின் விளைவாக காஸாவின் உட்டமைப்பு வசதிகளில் 70 சதவீமானவற்றுக்கும் மேற்பட்டவை சிதைவடைந்துள்ளன. மக்கள் குடியிருப்புகள், அகதிமுகாம்கள், பாடசாலைக் கட்டடங்கள், பொதுக்கட்டடங்கள் என அனைத்தும் சேதமடைந்தும் அழிவடைந்தும் உள்ளன. காஸா முழுவதும் சாம்பல் மேடாகவே காட்சியளிக்கிறது.
அதனால் 23 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட காஸாவில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் அடிப்படை வசதிகள் அற்ற கூடாரங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளனர்.
இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை கட்டார், எகிப்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. கட்டார், எகிப்து என பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. ஏழு மாதங்கள் கடந்தும் அந்த முயற்சிகள் வெற்றியளித்ததாக இல்லை.
யுத்தம் தொடர்வதன் விளைவாக பலஸ்தீனின் காஸா, மேற்குகரைப் பிராந்திய மக்கள் முகம்கொடுத்துள்ள அவலங்கள் நீடித்த வண்ணமுள்ளன. பணயக் கைதிகளும் உயிருடன் விடுவிக்கப்படாத நிலையே தொடர்கிறது.
இவ்வாறான சூழலில்தான் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காஸா மீதான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான திட்ட வரவை கடந்த 31 ஆம் திகதி முன்வைத்தார். மூன்று கட்டங்களை இத்திட்ட வரைபடம் கொண்டுள்ளது.
அதன் முதலாம் கட்டத்தில், ஆறு வாரங்களுக்கு முழு அளவிலான யுத்தநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படும். இக்காலப்பகுதியில் மக்கள் செறிவாகக் காணப்படும் காஸாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இஸ்ரேலியப் படைகள் வெளியேறுதல், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்களவிலான இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்தல், அவர்களில் அமெரிக்க பணயக்கைதிகள் முதற்கட்டத்தில் விடுவிக்கப்படல், அதற்கு ஈடாக இஸ்ரேலிய சிறைகளிலுள்ள நூற்றுக்கணக்கான பலஸ்தீன கைதிகளையும் விடுவித்தல், பலஸ்தீனர்கள் தமது சொந்த வீடுகளுக்குச் செல்ல அனுமதித்தல், காஸாவுக்குள் தினமும் 600 ட்ரக்குகளில் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைத்தல், சர்வதேச சமூகம் ஆயிரக்கணக்கான வீடுகளை வழங்கவும் வேண்டும்.
முதலாம் கட்டத்தில் யுத்தநிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை 6 வாரங்களுக்கு மேல் நீடித்தால் பேச்சுவார்த்தை தொடரும் வரையும் யுத்தநிறுத்தம் நீடிக்கும்’ ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டத்தில் மேலுமொரு ஆறு வார கால யுத்தநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படும். அதன் போது இஸ்ரேலியப் படையினர் காஸாவில் இருந்து முழுமையாக வெளியேறுதல், அனைத்துப் பணயக் கைதிகளையும் ஹமாஸ் விடுவித்தல், பகைமையை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
மூன்றாம் கட்டத்தின் போது, காஸாவில் பாரிய புனரமைப்பு மற்றும் நிலைப்படுத்தல் திட்டத்தை முன்னெடுத்தல். அதனை மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரை நடைமுறைப்படுத்தல், வீடுகளும் பாடசாலைகளும் வைத்தியசாலைகளும் மீளமைக்கப்படல். கொல்லப்பட்டுள்ள இஸ்ரேலியக் கைதிகளின் எச்சங்கள், பிரேதங்களை அவர்களது குடும்பத்தினரிடம் கையளித்தல்.
இவ்வாறு மூன்று கட்டங்களை உள்ளடக்கியுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க காஸா யுத்தநிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதியின் நிகழ்ச்சித் திட்டம் கட்டார் ஊடாக ஹமாஸுக்கு வழங்கப்பட்டது.
அத்திட்டத்தையும் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்களையும் வரவேற்றுள்ள ஹமாஸ், நிரந்தரப் போர்நிறுத்தம், காஸாவில் இருந்து இஸ்ரேலியப் படையினரை திரும்பப் பெறுதல் மற்றும் புனரமைப்பு, கைதிகள் பரிமாற்றம் என்பன உள்ளடக்கப்பட்டிருப்பதையும் வரவேற்றுள்ளனர்.
எனினும் இத்திட்டத்திற்கு இஸ்ரேல் ஆதரவு என்று பைடன் கூறியதும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் கடும் ஆட்சேபனையை தெரிவுத்துள்ளன. குறிப்பாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டமர் பென் கிவிரும், நிதியமைச்சர் பெஷலெல் ஸ்மொட்ரிச்சும் அமெரிக்க ஜனாதிபதி வகுத்துள்ள திட்டம் நிறைவேற்றப்பட்டால், நெதன்யாகுவின் அரசாங்கத்தைக் கலைத்து விடுவோம் என்று எச்சரித்துள்ளதோடு, அரசில் இருந்து வெளியேறுவதாகவும் ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாகவும் கூறியுள்ளனர். அவர்களது கட்சிகள் காஸாவில் தொடர்ந்தும் யுத்தத்தை முன்னெடுக்கவே வலியுறுத்துகின்றன.
இந்நிலையில் பிரதமர் நெதன்யாகு, ‘ஹமாஸை ஒழித்துக்கட்டி தனது நாடு அதன் அனைத்து நோக்கங்களையும் அடையும் வரை போரைத் தொடரும். அதுவரை யுத்தநிறுத்தம் இல்லை’ என்றுள்ளார்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி பைடன், ‘என்னதான் அழுத்தம் வந்தாலும் இந்த ஒப்பந்தத்தின் பின்னால் நிற்குமாறு இஸ்ரேலிய தலைமையை நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்றுள்ளார்.
அதேநேரம் பணயக்கைதிகளை விடுவிக்கவென யுத்தநிறுத்தத்திற்கு செல்லுமாறு நெதன்யாகு அரசை வலியறுத்தி வரும் இஸ்ரேல் மக்கள், ஜனாதிபதி பைடனின் யோசைனையை வரவேற்றுள்ளதோடு, பாரிய ஆர்ப்பாட்டமொன்றையும் டெல்அவிவில் நடாத்தியுள்ளனர்.
இதேவேளை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரன், ‘அமெரிக்க ஜனாதிபதி முன்வைத்துள்ள காஸாவில் நீடித்த அமைதிக்கான போர்நிறுத்த திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். காஸா போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். பிராந்தியத்தில் அனைவரது அமைதி மற்றும் பாதுகாப்புக்காக எங்களது பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றோம்’ என்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ், அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ள போர்நிறுத்தம் மற்றும் காஸாவிலுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பாதை வரைபடத்தை வரவேற்றுள்ளார்.
அத்தோடு, ‘காஸாவில் நாங்கள் பல துன்பங்களையும் அழிவுகளையும் கண்டுள்ளோம். யுத்தம் நிறுத்த வேண்டிய நேரம் இது. அமெரிக்க ஜனாதிபதியின் முன்முயற்சியை நான் வரவேற்கிறேன். போர்நிறுத்தம், பணயக்கைதிகள் அனைவரையும் விடுவித்தல், தடையில்லா மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைத்தல் மற்றும் நீடித்த அமைதிக்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்த அனைத்துத் தரப்பினரையும் ஊக்குவிக்கிறேன்’ என்றும் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி பைடனின் காஸா யுத்தநிறுத்தத் திட்டத்தை வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், அத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர இஸ்ரேலும் ஹமாஸும் முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஜி 7 நாடுகள் அமைப்பும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனையை முழுமையாக ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு மத்திய கிழக்கு உட்பட உலகின் பல நாடுகளும் இத்திட்டத்தை வரவேற்றுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி முன்வைத்துள்ள யுத்தநிறுத்தத் திட்டத்தை இறுதிப்படுத்துமாறு கட்டார், எகிப்து, அமெரிக்க மத்தியஸ்தர்கள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். அத்தோடு ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கட்டார் மற்றும் எகிப்து ஆகிய ஐந்து அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் பைடனின் முன்மொழிவை தீவிரமாகவும் சாதகமாகவும் பரிசீலிக்குமாறு இஸ்ரேலையும் ஹமாஸையும் கோரியுள்ளனர்.
அந்த வகையில் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், காஸாவிலுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் இஸ்ரேலின் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்கும் வழிவகுக்கும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நான் முழுமையாக ஆதரிப்பேன் என்பதை நான் மீண்டும் கூறுகிறேன்’ என்றுள்ளார்.
இருந்த போதிலும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒரு வார காலமாகியும் உறுதியான இணக்கப்பாட்டை தெரிவிக்காத நிலை நீடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
மர்லின் மரிக்கார்