டி20 உலகக் கிண்ணத்தில் டி குழுவில் ஆடும் இலங்கை அணி முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து இன்னும் ஒரு புள்ளியையேனும் பெறவில்லை. இதனால் இலங்கை அணி ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறும் விளிம்புக்கு தள்ளப்பட்டபோதும், இன்னும் சுப்பர் 8 சுற்றுக்கு வாய்ப்பு உள்ளது. என்றாலும் அது முழுமையாக இலங்கையின் கைகளில் இல்லை.
அடிப்படையில் இலங்கை அணி அடுத்திருக்கும் தனது கடைசி இரு குழு நிலை போட்டிகளிலும் நேபாளம் (ஜூன் 12) மற்றும் நெதர்லாந்து (ஜூன் 17) அணிகளை அதிக இடைவெளியில் வென்று தனது நிகர ஓட்ட விகிதத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அது மாத்திரம் போதாது, தனது குழுவில் இருக்கும் தென்னாபிரிக்கா, நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகளில் இரண்டு அணிகள் தமக்கு எஞ்சி இருக்கும் தலா மூன்று போட்டிகளில் குறைந்தது இரண்டில் தோற்க வேண்டும்.
இதன்மூலம் இலங்கை அணி தனது குழுவில் நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
இந்த சிக்கலான நிலையில் தனது எஞ்சிய போட்டிகளில் வென்று மற்றப் போட்டி முடிவுகள் சாதகமாக வருவது பற்றி எதிர்பார்ப்புடன் காத்திருப்பதை மாத்திரமே இலங்கை அணியால் செய்ய முடியுமாக உள்ளது.