டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாது குழு நிலை போட்டியிலும் 2 விக்கெட்டுகளால் தோல்வி அடைந்த இலங்கை அணியின் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்துள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட்டுகளால் மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி நேற்று (8) பங்களாதேஷை எதிர்கொண்டது தீர்க்கமான தருணத்திலாகும்.
டலாஸில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை முதல் இரு விக்கெட்டுகளையும் 48 ஓட்டங்களுக்கு பறிகொடுத்ததால் தடுமாற்றம் கண்டது. ஆரம்ப வீரர் பத்தும் நிசங்க மாத்திரம் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்றார். என்றாலும் அவரின் ஆட்டமிழப்பு இலங்கை அணியை மேலும் சரிவுக்கு இட்டுச் சென்றது.
14 ஓவர்களில் இலங்கை அணி 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஸ்திரமான நிலையில் இருந்தாலும் சரித் அசலங்க மற்றும் வனிந்து ஹசரங்க அடுத்தடுத்த பந்துகளுக்கு விக்கெட்டை பறிகொடுத்தது ஆட்டத்தை முழுமையாக திசை திருப்பியது.
கடைசி ஒவர்களில் இலங்கையின் விக்கெட்டுகள் மளமளவென்று பறிபோயின. அதாவது இலங்கை அணி மேலும் 24 ஓட்டங்களை பெறுவதற்குள் கடைசி எழு விக்கெட்டுகளை இழந்தது.
கடைசியில் இலங்கை அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த 124 ஓட்டங்களையே பெற முடிந்தது. பந்துவீச்சில் முஸ்பீசுர் ரஹ்மான் மற்றும் ரிஷாட் ஹொஸை தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
பதிலெடுத்தாட வந்த பங்களாதேஷ் அணிக்கு இலங்கையால் கடைசி வரை நெருக்கடி கொடுக்க முடிந்தபோதும் அது போட்டியை வெல்வதற்கு போதுமாக அமையவில்லை.
பங்களாதேஷ் அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் 28 ஒட்டங்களில் வீழ்த்திய இலங்கை அணிக்காக மத்திய ஓவர்களில் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க நெருக்கடி கொடுத்தார்.
ஹசரங்க தனது 4 ஓவர்களுக்கும் 32 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது டி20 சர்வதேச போட்டிளில் இலங்கை அணி சார்பில் அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய முன்னாள் அணித் தலைவர் லசித் மாலிங்கவின் சாதனையை முறியடித்தார்.
என்றாலும் நுவன் துஷார அபாரமாக செயற்பட்டார். ஆரம்பத்தில் மூன்று ஓவர்களை வீசிய அவர் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்த நிலையில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 18 பந்துகளில் 14 ஓட்டங்களை பெற வேண்டி இருந்தபோது தனது கடைசி ஓவரை வீச அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் அவர் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை தந்தார்.
என்றாலும் 18 ஓவர்கள் முடிவின்போது இலங்கை அணியின் நான்கு விசேட பந்துவீச்சாளர்களும் தமது ஓவர்களை போட்டு முடித்த நிலையில் 19 ஆவது ஓவரை வீச அழைக்கப்பட்ட தசுன் ஷானக்க முதல் பந்தையே புல்டோஸ் வீச அதற்கு அனுபவ வீரர் மஹ்மூதுல்லா சிக்ஸர் விளாசியதை அடுத்து இலங்கையின் வெற்றி வாய்ப்பு கை நழுவியது.
பங்களாதேஷ் அணி 19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 125 ஓட்டங்களையும் எட்டியது.
நுவன் துஷார தனது 4 ஓவர்களுக்கும் 18 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி இலங்கை டி குழுவுக்காக ஆடிய தனது முதல் இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.